Published : 17 May 2019 09:01 AM
Last Updated : 17 May 2019 09:01 AM
“கல்கத்தாவுக்கு நான் ‘மாலதி மாதவம்’ படத்தில் நடிக்கப்போனபோது நடந்த ஒரு விசித்திரச் சம்பவத்தை உங்களுக்குச் சொல்லாமல் விட்டுவிட்டேன்” என்றார் பானுமதி. ‘அதற்கென்ன இப்போது சொல்லுங்கள்!’ என்று அவரது முகத்தை ஆர்வமாக நோக்கினேன்.
“கல்கத்தா ரயில் நிலையத்தில் ரயிலில் உட்கார்ந்திருந்த என் தாயார், ‘யாராவது நான் சொன்னால் நம்புவார்களா... பார்க்கவே அதிசயமாக இருக்கிறது!’ என்றார். நான்,” என்னம்மா சொல்லுகிறீர்கள்?’ என்றேன்.
இதற்கு முன்னால் கல்கத்தா போன்ற பெரிய நகரத்துக்கு என் தாயார் வந்ததே இல்லை. கிராமப்புறங்களிலேயே வசித்தவர் அவர். அவருக்கு கல்கத்தா புறப்படும்முன் ஒரு கனவு வந்ததாம். அவர் கனவில் ஒரு பெரிய ரயில்வே சந்திப்பு. அங்கே ரயில்கள் புறப்படுவதும் வந்து சேர்வதும் தெரிந்ததாம்.
இப்போது பார்க்கிற கல்கத்தா ரயில்நிலையம் மாதிரி அப்படியே இருந்ததாம். கனவில் கண்ட காட்சிகள் கண்முன்னால் தெரிவதை ஒப்பிட்டுப் பார்த்து அம்மா முணுமுணுப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. எனக்கும் இதுபோன்ற கனவுகள் வந்திருக்கின்றன.
ஆனால், காலை எழுந்து பார்த்தால் மறதி அவற்றை அழித்திருக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. நான் மறந்துவிட்டேன். அம்மாவுக்கு நினைவிருக்கிறது. அவ்வளவுதான்” என்று நிறுத்தினார் பானுமதி.
வரப்போவதை ‘கனவுகள் முன் அறிவிக்கின்றன என்று நம்புகிறீர்களா?’என்று கேட்டேன். “நிச்சயமாக..! என் தாயார் முன்பின் பார்த்திராத கல்கத்தா ஸ்டேஷன் அவர் கனவில் எப்படி வந்தது? ஏன் வந்தது? நாடி சாஸ்திரத்தில் இது பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஷர்மா என்ற ஒரு பண்டிதர் மூலம் இந்த சாஸ்திரத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு வருட காலம் அவர் அதை எனக்குப் படித்துக் காண்பித்தார். அந்தச் சுவடிகளில்.. ‘பரஷாரா சொப்பனாத்யாயம்’ (கனவு அத்தியாயம்) என்ற பகுதி எனக்குப் பிடிக்கும். அம்மா ஏன் அப்படிக் கனவு கண்டார் என்பதற்கு அதில் விளக்கம் இருந்தது.
கனவுகள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றியவையாகத் தோன்றுவது ஒரு மாயை. உண்மையாய் ஆத்மாவுக்கு எல்லாமே நிகழ்காலம்தான். முக்காலம் என்று ஒன்றுமில்லை..” என்று நீளமாகச் சொல்லி முடித்தார் பானுமதி.
நான் என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவருக்குக் கனவுகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைக்கும் பழக்கம் இருந்தது. நான் படித்திருக்கிறேன். ஏதோ கொலாஜ் ஓவியம்போல் இருக்கும். அவரிடம் ‘கனாநூல்’ என்ற புத்தகம் இருந்தது. அதில் கனவுகளுக்குப் பலன்கள்கூடப் போட்டிருக்கும்.
ஆனால், என் அறிவு இதை நம்ப மறுத்தது. மனோ தத்துவ அறிவியலாளர் சிக்மண்ட் பிராய்டு, ‘கனவுகள் என்பது மூளை விழித்திருப்பதன் அடையாளம். அங்கு ஏற்கனவே பார்த்த, கேட்ட, உணர்ந்த விஷயங்களின் குழப்பமான பதிவைத் தவிர வேறு ஒன்றுமில்லை’ என்பதாகச் சொல்லியிருக்கிறார்.
மேலும் இது பற்றி பானுமதி அம்மையாருடன் தொடர்ந்து விவாதிக்காது அவர் சரித்திரத்தைத் தொடர்ந்து சொல்லுமாறு வேண்டிக்கொண்டேன்.
குறும்புக்கார நாகமணி
பானுமதி தன் கதையைச் சொல்லத் தொடங்கினார். “கோலாபூரில் இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளை அப்பாவிடம் போட்டுக் காட்டினார்கள். அன்று பிற்பகல் எங்கள் ‘பொம்மைக் கல்யாண’மும் முடிந்தது. எங்களைச் சுற்றி இருந்தவர்களை அழைத்து வயிறாரச் சாப்பாடு போட்டோம். அட்சதை தூவி பொம்மை மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள்.
அந்த நேரம் பார்த்து அப்பாவும் புல்லையாவும் வந்தார்கள். அவர்களை உட்காரச் சொல்லி இனிப்பு கொடுத்தோம். நாகமணியைப் பார்த்ததும் புல்லையா ‘ஓஹோ! இதெல்லாம் இந்தப் பிசாசின் வேலைதானா? இவள் பெரிய ரவுடி அம்மா!’ என்றார் என்னிடம்.
பிறகு நாகமணியிடம் ‘நீ வீட்டுக்கு மூத்த பெண். அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருக்காமல் பானுமதியுடன் சேர்ந்துகொண்டு பொம்மைக் கல்யாணம் நடத்துகிறாயே!’ என்றார். அதற்கு அவள் ‘பானுமதிதான் நடத்துகிறாள், நானில்லை’ என்றாள். அப்பா என்னிடம் ‘என்னம்மா...நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளச் சொல்லலாமா?’ என்று கேட்டார். ‘உங்கள் விருப்பம் அப்பா’ என்று சொன்னேன்.
மறுநாள் படப்பிடிப்பு. ஷாலினி ஸ்டுடியோஸ் சென்றோம். நாகமணியும் உடன் வந்தாள். அவள்தான் பல தகவல்களை எனக்குச் சொல்லிக்கொண்டு வந்தாள். செட்டுக்குப் போனோம். அன்று எடுக்கப்பட்ட காட்சி எனக்கு நினைவில்லை.
ஆனால், படத்தின் கதாநாயகி சாந்தகுமாரி வயிற்றைத் தள்ளிக்கொண்டு நின்றார். என்னிடம் அன்பாகப் பேசினார். நான் அவர் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். நாகமணி என் காதில் ‘அவள் கர்ப்பமாய் இருக்கிறாள்.
எட்டு மாதம்’ என்று கிசு கிசுத்தாள். இப்படியான விஷயங்களை அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். எனக்குக் கூச்சமாக இருந்தது. அந்தப் பெண்மணி காதில் இது விழுந்திருக்குமோ...
நாகமணி ‘இந்தப் படத்தின் ஹீரோ பொம்பளை மாதிரி நடப்பார் பாரேன். ஆம்பளையே இல்லை அந்த ஆள்’ என்றாள். தன் தந்தை டிராமாக்களில் பெண் வேஷம் போட்டு இப்படித்தான் நடப்பார் என்றாள் நாகமணி. ஹீரோ வந்தார்... நாகமணி சொன்னது ஞாபகம் வந்தது. சிரிப்பாக வந்தது. நல்லவேளை அவர் எங்களைப் பார்க்கவில்லை.
ஒரு மூட்டை நாணயங்கள்
புல்லையா வந்தார். என்னை பியானோவின் எதிரில் உட்காரச் சொன்னார். நான் என்ன வசனம் பேசினேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஷூட்டிங் நேரத்தில் அப்பா குறுக்கிட்டு வசனத்தில் திருத்தம் செய்தது நினைவிருக்கிறது.
‘தர்மபத்தினி’யில் என் ‘ரோல்’ என்னவென்பது ஞாபகமில்லை. ஆனால், அதில் இரண்டு பாட்டுகள் பாடியிருக்கிறேன். ‘அனுராகமு லேகா ஆனந்தமு பிராப்தின்சுனா’, ‘நிலு...நிலுமா...நீலவர்ணா’ இந்த இரண்டு பாட்டுகளும் எனக்கு பெயரும் புகழும் வரக் காரணமாக அமைந்துவிட்டன.
நாகமணியின் நட்பால் கோல்ஹாபூரில் நான் செலவழித்த நான்கு மாதங்களும் நான்கு நாட்களாக ஓடிவிட்டன. பத்துப் பன்னிரண்டு தடவைக்குமேல் பொம்மைக் கல்யாணம் நடத்திவிட்டோம்.
கோலாபூரிலிருந்து கிளம்பினோம். அப்பா என் நடிப்புக்கான சம்பளத்தை வாங்கிவரப் போனார். நான் அவரிடம் ‘அப்பா நீங்க வாங்குகிற பணத்தை அப்படியே ‘காயின்ஸா’ (நாணயங்களா) மாத்தி வாங்கி வரமுடியுமா? எவ்வளவு இருக்கும்? என்று கேட்டேன்.
எனக்கு நாணயங்களை வைத்து விளையாடுவதில் கொள்ளைப் பிரியம். ‘ஒரு சின்ன கோணிப்பை நிறைய வரும்’ என்று சிரித்தார் அப்பா. ‘அப்படியே வாங்கிட்டு வாங்க’ என்றேன்.
அப்பா அதேபோல கிடைத்த ரூபாய் முழுவதையும் நாணயங்களாக மாற்றி வாங்கிக் கொண்டார். ஒரு சின்ன கோணிப்பை நிறைய வைத்து கட்டிக் கொடுத்தார்கள். தூக்க முடியாமல் தூக்கி வந்து காரில் வைத்தேன். வீட்டுக்கு வந்ததும் பாயை விரித்து அவ்வளவு நாணயங்களையும் அதில் கொட்டினேன்.
ஆசை தீரும்வரை பூவா, தலையா விளையாடினேன். பிறகு அப்பாவிடம் கொடுத்துவிட்டேன். இன்றுவரை ரூபாய் நாணயங்களைச் சேகரிப்பதில் எனக்கு உற்சாகமும் ஈடுபாடும் உண்டு” என்று சொல்லிவிட்டு கலகலவென்று சிரித்தார் பானுமதி.
தரையில் கொட்டிய நாணயங் களாய் கலீரிட்டது அவர் சிரிப்பு.
(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT