Published : 24 May 2019 12:09 PM
Last Updated : 24 May 2019 12:09 PM
ஷாருக் கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்த இந்திப் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’. இந்தப் படத்தில் தீபிகா தமிழ்ப் பெண்ணாக நடித்திருந்தார். தீபிகாவின் தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார். வேறு சில தமிழ் நடிகர்களும் நடித்திருந்தனர்.
தமிழ்நாட்டு ரசிகர்களைக் கவரும் நோக்கத்துடன் ‘லுங்கி டான்ஸ்’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அதில் நடிகர் ரஜினிகாந்தைப் புகழ்ந்து பாடுவதுபோல் பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. ரஜினி மட்டுமல்லாமல் அவரது தமிழக ரசிகர்களுக்குமான ‘ட்ரிப்யூட்’ என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.
துள்ளலான இசை, துடிப்பான நடனம் ஆகியவற்றுக்காக அந்தப் பாடல் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தாலும் அது ரஜினிகாந்தையோ தமிழர்களையோ எந்த வகையிலும் கௌரவிக்கவில்லை என்பதே தமிழ் ரசிகர்களின் பரவலான கருத்தாக இருந்துவருகிறது. தமிழர்கள் அனைவரும் லுங்கி அணிபவர்கள் என்பது உள்படப் பல பிழையான பொதுமைப்படுத்தும் தகவல்களை முன்வைத்திருப்பதாக விமர்சிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த பிரபல ‘ஸ்டாண்ட்-அப்’ நகைச்சுவைக் கலைஞரான எஸ்.அரவிந்த் கடந்த ஆண்டு தன் நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலைக் கடுமையாகக் கிண்டலடித்து நகைச்சுவை செய்திருப்பார். “இந்தப் பாடலுக்கும் தமிழர்களுக்கும் ஏன் ரஜினிக்குமேகூட எந்தத் தொடர்பும் இல்லை” என்று அவர் கூறியிருந்தார்.
பாடலில் ‘ரவுண்டு குமாக்கே’ (பெரிய உருண்டையான மீசை) என்ற வரி ரஜினியைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கும். “ரவுண்டு குமாக்கே ராஜ்கிரணுக்கு வேண்டுமானால் பொருந்தும் ரஜினிக்கு எப்படிப் பொருந்தும்” என்று எஸ்.அரவிந்த் கேட்க, பார்வையாளர்கள் வெடித்துச் சிரிப்பார்கள்.
இந்த நிகழ்ச்சி அமேஸான் ப்ரைம் இணையதளத்தில் முழுமையாகக் காணக் கிடைக்கிறது. இதன் துணுக்குகள் சமூக ஊடகங்களிலும் பெரிய ஹிட் அடித்தன. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல், தன்னுடைய பல நிகழ்ச்சிகளில் இந்திப் படங்களும் வட இந்தியர்களும் தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களைப் புரிந்துகொண்டிருப்பதில் உள்ள பிழைகளைப் பகடி செய்துவருகிறார் அரவிந்த்.
கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் ‘லுங்கி டான்ஸ்’ பாடலைப் பகடி செய்யும் விதமாக அதே மெட்டில் ‘சப்பாத்தி சாங் - தி லுங்கி சாங் பாரடி’ என்ற பாடலை மேடையில் பாடி ஆடினார். அந்தப் பாடல் வரிகள் அனைத்தும் இந்தி பேசும் வட இந்தியர்களைக் கிண்டலடிப்பதாக அமைந்திருந்தன. வட இந்திய மாநிலங்களில்தான் பசுப் பாதுகாப்பின் பெயரில் நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்கள் அதிகமாக நடக்கின்றன. இதையும் ‘சப்பாத்தி சாங்’ பாடலில் கிண்டலடித்திருந்தார் அரவிந்த்.
தமிழர்களை ‘லுங்கி’ அணிபவர்கள் என்று பொதுமைப்படுத்துவதுபோல் இந்தி பேசுபவர்களை ‘சப்பாத்தி சாப்பிடுபவர்கள்’ என்று பொதுமைப்படுத்துவது மட்டும் சரியா? இந்தக் கேள்விக்கு அதே பாடலில் “யார் பொதுமைப்படுத்தத் தொடங்கியது?” என்ற கேள்வியையே பதிலாக முன்வைக்கிறார்.
யூட்யூபில் ‘சப்பாத்தி சாங்’ பாடல் வீடியோ 14 லட்சம் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.
பாடலைக் காண இணையச் சுட்டி:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT