Published : 19 Apr 2019 12:31 PM
Last Updated : 19 Apr 2019 12:31 PM
‘ஆரண்ய காண்டம்’ படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப். இவர் தற்போது விஜய் நடித்துவரும் புதிய படத்தில் இணைந்துள்ளார். அதற்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை, இட்லி ஷாப் ஒன்றில் சந்தித்தோம்.
‘‘ஒரு நிமிஷம் தம்பி! தமிழ்நாட்டுச் சாம்பாரும் இந்த மல்லிகைப்பூ இட்லியும்தான் சென்னையில் எனக்கு பிடித்த சிற்றுண்டி. அதை முதலில் ஆர்டர் பண்ணிப்போம்’’ எனச் சிற்றுண்டி நேரத்தை கலகலப்பான சந்திப்புக்கான தருணமாக மாற்றினார் ஜாக்கி ஷெராஃப். அவருடன் உரையாடியதிலிருந்து…
எப்படி இருக்கிறீர்கள்?
கடந்த 38 வருஷமா சினிமாவில் இருக்கிறேன். இதைவிட சந்தோஷம் என்ன இருக்க முடியும்? போகிற ஊர்களில் எல்லாம் உங்களை மாதிரி பல மொழி பேசுகிற நண்பர்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. இன்றைக்கு சினிமாவுக்கு வர்ற புதிய கலைஞர்களிடம் இருந்து புதுப் புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது.
அது பெரிய அனுபவமாகவும் இருக்கு. இப்படிக் கிடைத்த வாழ்க்கை மனதுக்குப் பிடித்த வாழ்க்கையாக மாறிவிடுறதும் அதை அணுவணுவாக அனுபவிக்கிறதையும்விட, இந்த உலகத்தில் வேறு என்ன பெரிசா இருந்திடப்போகிறது.
அட்லீ இயக்கி வரும் விஜயின் 63-வது படத்தில் நடிக்கிறீர்கள் இல்லையா?
ஆமாம். அட்லீ துறுதுறுப்பான இயக்குநராக இருக்கிறார். அவர் கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். ஒரு கதையில் நம்ம பகுதி ஹீரோயிசமா வில்லத்தனமா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரு கதையில் நின்று விளையாட என்ன இருக்கிறது என்று மட்டும்தான் யோசிப்பேன்.
அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப் பேசுவார்கள். படத்தில் கால் பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக நடிக்கிறேன். பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டு வரும் பகுதி அது. சென்னையில் வெயில் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அதுவும் எனக்குப் பிடிக்கத்தான் செய்கிறது.
நீங்கள் நடித்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அடுத்து வெளிவந்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தைப் பார்த்தீர்களா?
‘ஆரண்ய காண்டம்’ படப்பிடிப்பு சமயத்தில் தினமும் 12 மணி நேரம் வேலை வாங்குவார். அது இப்போது ஒரு கல்ட் திரைப்படமா மாறிடுச்சு. அதில் நான் இருந்தது எனக்கு கௌரவமான விஷயம். இப்போது அவருடைய இரண்டாவது படம் வந்திருக்குன்னு நண்பர்கள் சொன்னாங்க.
நல்ல வேளை இந்த நேரத்தில் சென்னையில் இருக்கிறேன். நீங்களும் நினைவுப்படுத்திட்டீங்க. அவசியம் இரண்டு, மூன்று நாட்களில் படத்தை பார்த்துவிடுகிறேன்.
கஸ்தூரி ராஜாவின் ‘பாண்டி முனி’ என்ற படத்தில் அகோரியாக நடித்திருக்கிறீர்களாமே?
சித்தர்கள் பற்றிய ஆய்வில் இறங்கினால் அஷ்ட மகா சித்துக்கள் என்ற ஒரு நிலை இருக்கிறது. கூடு விட்டுக் கூடு பாய்வது என்று சொல்வோமே. அந்த மாதிரி. அந்த சித்தர்களுக்குத்தான் உயிரைப் படைக்கும் வல்லமை உண்டென்று சொல்வார்கள். ‘அந்த மாதிரி ஒரு சித்தரா நீங்கள் நடிக்கவேண்டும், இதில் முனியா வர்றீங்க’ என்று மூத்த இயக்குநர் கஸ்தூரி ராஜா சொன்ன கதை ரொம்பப் பிடித்தது.
யோகா, சித்துக்கள், முனின்னு அடுக்கடுக்கான மேஜிக்கல் பகுதிகள் கொண்ட திரைக்கதை. சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பா இருக்கும். இன்னும் சில வாரங்கள் படப்பிடிப்பு இருக்கிறது. இயக்குநர் சொல்லும்போது அந்த வேலையையும் சென்னைக்கு வந்து முடித்துக்கொடுக்க வேண்டும்.
தென்னிந்திய சினிமா கலைஞர்களுடன் பணியாற்றும் அனுபவம் பிடித்திருக்கிறதா?
அந்தக் காலத்திலிருந்து இப்போது வரைக்கும் தென்னிந்திய சினிமாவிலிருந்து நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமை என்னை வியக்க வைக்கும். சந்தோஷ் சிவன், ப்ரியதர்ஷன், சாபு சிரில் உள்ளிட்ட சில முக்கிய டெக்னீஷியன்களோடு நான் வேலை பார்த்திருக்கிறேன். இவர்கள் அனைவருமே பெரும் திறமைசாலிகள்.
இவர்கள் தென்னிந்தியாவிலேயே இருந்துவிடாமல் பாலிவுட் பக்கம் வந்தது நாங்கள் செய்த பாக்கியம். இவர்களை மாதிரியான திறமைமிக்க கலைஞர்களால்தான் இந்திய சினிமா பெருமையடைகிறது. தொடர்ந்து இந்த மாதிரியான திறமைசாலிகளோடு பணிபுரிய வாய்ப்பு அமைந்தால், அதை நான் பெரிதும் விரும்புவேன்.
சினிமா வாழ்க்கை அழகாக நகர்ந்து கொண்டிருக்கும்போது, ‘கிரிமினல் ஜஸ்டிஸ்’ என்ற இணையத் தொடரில் நடிக்கத் தொடங்கியிருக்கிறீர்களே?
சினிமாவில் பிஸியாக இருப்பதும் இல்லாததும் வேறு. நாம சார்ந்திருக்கிற ஒரு துறையில் இந்த மாதிரியான ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும்போது, அதில் என்ன இருக்கிறது என அவசியம் பார்க்க வேண்டும். அதைத் துணிந்து செய்ய வேண்டும். அந்த மாதிரித் தொட்டதுதான் இந்த 'வெப் சீரீஸ்'. இந்தத் தொடரின் கதைக் களம் எனக்குத் தினம் தினம் பயிற்சியாக இருக்கிறது.
‘அடடா! இதை மிஸ் பண்ணிடாம தொட்டுட்டோமே!’ என்று என்னை நானே பாராட்டிக்கொண்டேன். இந்தத் தொடரைப் போல நல்ல கதைகள் அமைந்தால், தொடர்ந்து அவற்றிலும் கவனம் செலுத்த ஆர்வமாக இருக்கிறேன். நடிகனுக்குத் தளங்கள், ஊடகங்கள் மாறலாம். அதற்கேற்ப அவனது திறமையும் வளர்ந்துகொண்டே செல்லும். அது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
படம்: கிரண் ஷா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT