Published : 12 Apr 2019 12:49 PM
Last Updated : 12 Apr 2019 12:49 PM
அது 2008-ம் வருடம். அப்போது நான் ‘பிரியதர்ஷினி’ என்ற கடலோரக் காவல்படைக் கப்பலில் கேப்டனாக இருந்தேன். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்தக் கப்பல் அவ்வப்போது சென்னைக்கு வரும் நேரத்தில் எனது திரையுலக, இலக்கிய நண்பர்கள் கப்பலுக்கு வருவதுண்டு.
என் நண்பன் லாசரஸின் அப்பா உடல்நலம் குன்றி, கவலைக்கிடமாக இருந்தபோது, என்னுடைய பத்திரிகை நண்பரிடம் நான், “லாசரஸின் அப்பா எல்.சி.மகேந்திரனின் கல்லூரிக் கால நண்பர்தான் இயக்குநர் மகேந்திரன்.
இயக்குநர் ஆவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திராத அவருடைய இயற்பெயர் ஜான் அலெக்ஸாண்டர் என்றாலும், கல்லூரிக் காலத்தில் ‘ஃப்ளையிங் மகேந்திரன்’ என்று அழைக்கப்பட்ட தன் ஆத்ம நண்பரின் மீது கொண்ட ஈர்ப்பால்தான், பின்னாளில் ஜான் அலெக்ஸாண்டர் என்ற பெயரை மகேந்திரன் என்று அவர் மாற்றிக் கொண்டார்.
‘பெரும் விளையாட்டு வீரராக விளங்கிய நிஜ மகேந்திரன் உடல்நலம் குன்றி இருக்கும் தகவலை இயக்குநருக்குத் தெரிவித்து இரண்டு மகேந்திரன்களையும் சந்திக்க வைத்தால், அது உணர்வுபூர்வமான சந்திப்பாக இருக்குமே’ என்று நான் பரிந்துரைத்தேன்.
50 வருடங்களுக்குப் பிறகான அந்தச் சந்திப்பு 2008 பிப்ரவரியில் நடந்தது. நிஜ மகேந்திரன் மலரும் நினைவுகளில் கலங்கிக் கதற, இயக்குநர் மகேந்திரன் அவரைத் தோளோடு அணைத்தபடி தானும் கலங்க...‘ஆனந்தவிகடன்’ இதழில் அந்தச் சந்திப்பு ஒரு கட்டுரையாக வெளியாகவும் செய்தது.
அந்த உணர்ச்சிகரமான சந்திப்பு அளித்த ஊக்கத்தினாலும் உற்சாகத்தினாலும் மரணப்படுக்கையில் இருந்து எழுந்து வந்த நிஜ மகேந்திரன் ஒரு வருடம் வரை அந்த நினைவுகளை அசைபோட்டபடியே உயிருடன் இருந்தார்.
உயிர்ப்பித்தல் என்பது இதுதானோ என எண்ண வைத்த அந்தச் சந்திப்பு, என் நண்பனின் குடும்பத்துடன் இயக்குநர் மகேந்திரனுக்கு நட்பு பூக்கவும் காரணமாக அமைந்தது.
பின்னர் 2008 ஏப்ரலில் பணிநிமித்தமாக எங்கள் கப்பல் சென்னைக்கு வந்தது. அப்போது இயக்குநரைக் கப்பலுக்கு அழைத்து வந்தான் லாசரஸ். 1978-ல் முதன் முறையாக அவருடைய ‘உதிரிப்பூக்க’ளைச் சிறுவனாகப் பார்த்ததில் இருந்து, அவரால் ஈர்க்கப்பட்டவன் நான்.
முப்பது ஆண்டுகளாக நான் சந்திக்கத் துடித்துக்கொண்டிருந்த ஒரு மனிதர் என்னைச் சந்திக்கத் தேடி வந்தது எனது பெரும்பேறு! இரவு 8 மணியளவில் கரையோரம் நங்கூரமிட்டிருந்த எங்கள் கப்பலுக்குள் வந்தவருக்கு அந்த இரவும் கடலும் திறந்த வானும் பிடித்துப் போக, விடியவிடிய பேசிக்கொண்டிருந்தார்.
தான் திரையுலகில் வேண்டாவெறுப்பாக நுழைந்ததையும், பக்கம்பக்கமாக வசனம் எழுதியதையும் பிறகு சினிமா என்பது காட்சி ஊடகம்தான் என்று உணர்ந்து காட்சிகளின் மூலமாகவே கதை சொன்ன தனது பாணியையும் அதனால்தான் தன்னை நவீன தமிழ்சினிமாவின் முன்னோடி என்று மற்றவர்கள் அழைப்பதாகவும் மிகவும் கூச்சத்துடன் குறிப்பிட்டார்.
“என்ன... ஒரு பதிமூணு படம் பண்ணிருக்கேன். இப்போ நினச்சுப் பார்த்தா அதில் உள்ள தப்புகள்தான் என் கண்ணுக்குத் தெரியுது. பக்கம் பக்கமா வசனம் எழுதி, அது இயல்பு வாழ்க்கைக்குப் பொருத்தமில்லைன்னு தான் வசனத்த கொறச்சு காட்சிகளாக வெச்சேனே தவிர, புதுமையான ஒரு சினிமா பாணிக்கு நானும் ஒரு முன்னோடின்னு சொல்லிக்கற அளவுக்கு ஒண்ணுமே பண்ணலை” என்று அவருக்கே உரிய அடக்கத்துடன் கூறியது, என் காதுகளில் இன்னும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.
‘உதிரிப்பூக்க’ளில் வரும் சண்டைக் காட்சியைப் போல அப்படி ஒரு சொற்சுருக்கமும் சொல் நேர்த்தியும் இருந்தது அவரிடம். ‘யாரோடும் பகை கொள்ளற்க’ என்ற கம்பனின் வரிகள்தாம் நினைவுக்கு வந்தன. திரையுலகில் தான் சிலரால் காயப்பட்டிருந்த போதும் தன்னால் யாரும் காயப்பட்டுவிடக் கூடாது என்று அப்படியொரு நாசூக்கு! விடியவிடியப் பேசியும் தீரவில்லை.
அவர் ஒரு ‘தனிமை விரும்பி’ என்றுதான் அதுவரை நான் கேள்விப்பட்டிருந்தேன். அதனால் அந்தச் சந்திப்பின்போது வேறு நண்பர்கள் யாரையும் நான் அழைத்திருக்கவில்லை. மகேந்திரன் சாரிடம் இதைக் கூறியபோது மிகவும் வருத்தப்பட்டார்.
“ஒரே சிறகுகளையுடைய பறவைகள் எப்போதுமே ஒன்றாகக் கூடியிருக்கத்தானே விரும்பும். இலக்கிய, சினிமா ரசனை உள்ள நண்பர்களை நீங்கள் தாராளமாக அழைத்திருக்கலாமே” என்றார்.
படைப்பிலக்கியங்களின் மீது அவருக்கிருந்த ஆர்வம் காரணமாகவே, தொடர்ந்து புதினங்களைப் படமாக்க விரும்பியதாகக் கூறினார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’க்கும் அவரது ‘உதிரிப் பூக்க’ளுக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஒருசில சம்பங்களையும் தவிர பெரிதாக எந்தவிதத் தொடர்பும் இல்லையே என்று நான் கேட்டபோது, தீக்குச்சி ஒன்றை உரசி தனது சிகரெட்டைப் பற்றவைத்தவர், “இந்த நெருப்பு இப்போது சிகரெட்டுடையதாக இருக்கலாம்.
ஆனால், அதன் பொறி தீக்குச்சிக்குத்தானே சொந்தம்? அதனால்தான் எனது படங்களின் பொறியை அளித்த மூலக்கதைக்கு உரிய நாவலாசிரியர்களின் பெயர்களைத் தவறாமல் டைட்டிலில் குறிப்பிடுகிறேன்” என்று சொன்ன அவரது நேர்மை இன்று எத்தனை படைப்பாளிகளுக்கு இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.
சிறுவயது முதலேயே வன்முறைக்குப் பழக்கப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்ததால் அதன் மீது வெறுப்பு கொண்டதாகவும்... அதனாலேயே தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் வன்முறைக் காட்சியைப் படத்தில் வைப்பதாகவும் அப்போதும்கூட அதை மிகக் கவனமாகக் கையாண்டதாகவும் சொன்னார்.
வன்முறையின் தீவிரத்தைக் காட்சிகள் மூலமாகப் பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவதாகவும் கூறினார். ‘உதிரிப்பூக்க’ளில் சரத்பாபுவும் விஜயனும் சண்டை போடும்
காட்சி என் நினைவுக்கு வந்தது. என்ன ஒரு காட்சிப் படுத்துதல்! வங்கக் கடலில் கிழக்கு மெல்ல வெளுக்கத் தொடங்கி இருந்தது. பேசியும் தீராத விஷயங்களை மற்றுமொரு நாளைக்கு ஒத்திவைத்தோம்.
மறுபடியும் சந்திப்போம் என்று இருள்பிரியாத காலையில் சிரித்த முகத்துடன் சொல்லிச் சென்றவரை அதன்பிறகு நான் ஒருபோதும் நேரில் சந்திக்கவில்லை.
ஆனால், நான் அவருடன் தொலைபேசி வழியே தொடர்பில் இருந்தேன். அந்தமானில் நான் கமாண்டன்டாக இருந்தபோது, அவர் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண நேரும்போதெல்லாம் அவருடன் தொலைபேசினேன்.
அப்போதெல்லாம் மிதமிஞ்சிய பணிவுடன் தனது பெருமைகளை ஏற்க மறுப்பார். ‘தான் அளவுக்கு மீறிக் கொண்டாடப்படுவதாக நாணுவார். தான் இன்னும் நிறையச் செய்திருக்க வேண்டும்; செய்யவில்லை’ என்ற குற்றவுணர்வு அவரது பேச்சில் வெளிப்பட்டது.
2019, ஏப்ரல் 02. இன்று காலை நான் கப்பலைச் சென்றடைந்த நேரம் லாசரஸிடமிருந்து போன். இயக்குநர் மகேந்திரன் மறைந்துவிட்டார் என்றான் கலக்கத்துடன். அவசரமாகப் பணிகளை முடித்துக்கொண்டு அவரது பள்ளிக்கரணை வீட்டுக்கு நானும் லாசரஸும் செல்வதற்குள் அவரை அடக்கம் செய்ய மந்தைவெளியில் உள்ள தூய மரியன்னை கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்சென்றதாக அறிந்து விரைந்தோம்.
நாங்கள் செல்வதற்குள் இயக்குநர் மகேந்திரன் மண்மூடிப் போயிருந்தார்! நாங்கள் கொண்டு சென்றிருந்த மாலையை அவரது மண்மேட்டுக்குச் சாத்தி வணங்கிவிட்டு வந்தோம். அவர் உதிரிப்பூக்களால் நிறைந்திருந்தார் - நம் மனங்களில் நிறைந்திருப்பதைப் போலவே!
கட்டுரையாளர் கமாண்டன்ட்,
இந்திய கடலோரக் காவல்படை.
தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT