Published : 26 Apr 2019 12:37 PM
Last Updated : 26 Apr 2019 12:37 PM

தரைக்கு வந்த தாரகை 10: சின்ன ஹலோ சொன்ன சேதி!

தியாகராய நகர் ‘வைத்தியராம் தெரு’வில் பானுமதி வீட்டைக் கண்டுபிடிப்பது (அந்தக் காலத்தில்) சுலபம். வீட்டுக்கு முன்னால் இரண்டு மூன்று டூரிஸ்ட் வண்டிகள் நிற்கும். மொட்டைத் தலைகளுடன் ஆந்திர ரசிகர்கள் காணப்படுவார்கள்.

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்குப் பிறகு நேராக பானுமதி தரிசனம். அம்மையாரின் வீட்டு காம்பவுண்டின் உள்ளே ஒரே நேரத்தில் இரண்டு மூன்று அல்சேஷன் நாய்கள் உறுமும். “கட்டிப் போட்டிருக்கு தைரியமா உள்ளே போங்க” என்பார் காவலாளி.

எங்கே பார்த்தாலும் பூந்தொட்டிகள், மரங்கள், நிழல் தரும் குளிர், ஊஞ்சல், ராதையின் ஆளுயரச் சிலை. அந்த இடமே படப்பிடிப்புக்குத் தயாராக இருப்பதுபோல இருந்தது.

குளிர்ந்த மொஸைக் படிகள். ஒவ்வொரு படி ஓரமும் வண்ண வண்ணப் பூந்தொட்டிகள். மாடி வராந்தாவின் இடது பக்கம் ஒரு அறை. அதில் டைப்ரைட்டர் சப்தம் கேட்கும். மனிதர்கள் இருப்பதற்கான சுவடே தென்படாது. அப்படி ஒரு அமைதி.

எப்போது போனாலும் ஒரு பெரிய கோப்பையில் பணிப்பெண் காப்பி கொண்டு தருவார். ஒவ்வொரு சொட்டாக ருசித்துப் பருகி முடிப்பதற்கும் பானுமதி அம்மையார் உள்ளே நுழைவதற்கும் சரியாக இருக்கும்.

போட்டிபோடும் நினைவுகள்

அழகான திருத்தமான நெற்றி, நெருப்புக் கோடாக ஸ்ரீசூர்ணம். கத்தரித்த புருவங்கள். அழகான நாசி. அளவான முகப்பூச்சு. பட்டுப்புடவை. கம்பீரமான, கெளரவமான தோற்றம்.

என்ன ஒரு தனித்துவம். பர்சனாலிட்டி! வயது எழுபது என்றால் நம்ப முடியவில்லை! நேரத்தை மிச்சப்படுத்த சில நேரம் காரில் சென்றபடி தன் வாழ்க்கைச் சம்பவங்களை விவரிப்பது அவர் வழக்கம்.

தன் பால்யகாலம், காதல் திருமணம், தெலுங்குப் படங்கள், எம்.ஜி.ஆர். சிவாஜி, மாடர்ன் தியேட்டர்ஸ் என்று காரின் வேகத்துக்கு இணையாக அவரது பழைய நினைவுகளும் போட்டியிடும். அவர் சொன்னதில் காதில் விழுந்தது கொஞ்சம். மனதில் விழுந்தது கொஞ்சம். நினைவில் பட்டுத் தெறித்தது கொஞ்சம்.

பாண்டி பஜார் பக்கம் கார் திரும்பியதும் “எனக்கு பீடா வேணுமே” என்றார். கோவிந்து ஓடிப்போய் வாங்கிவந்தார். ஒன்று இரண்டல்ல, ஒரு அட்டைப் பெட்டி நிறையச் சீராக அடுக்கிய இனிப்பு பீடாக்கள். ஒன்றை எடுத்துக் கடைவாய்க்குள் விரல்கள் படாதவண்ணம் பதவிசாகக் கொடுத்து மென்மையாக மெல்லத் தொடங்கினார்.

காருக்குள் மெல்லிய சங்கீதம் இழைய “இது என்ன ராகம் தெரியுமா?” என்று கேட்டார் பானுமதி. பட்டென்று அந்த ராகத்தின் பெயரைச் சொன்னார் கோவிந்து. திறந்த கார் கண்ணாடி வழியே பார்த்துவிட்டு, ஒரு பழக் கடைக்காரர் ‘டேய் பானுமதிடா’ என்று கத்திக்கொண்டே பானுமதிக்கு உற்சாகத்துடன் கையசைத்தார். அவரது அன்பை ஏற்று பானுமதியும் பதிலுக்கு கையசைக்க கார் அங்கிருந்து வீடு நோக்கி நகர்ந்தது.

காலம் உறைந்த ஒளிப்படங்கள்

கூர்க்கா ஓடிவந்து கேட்டைத் திறந்தார். கார் உள்ளே நுழைந்தது. பானுமதியின் பங்களா பழைய மோஸ்தரில் கட்டப்பட்டது. வெயில் நேரத்திலும் குளிர்ச்சியாக இருக்கும்.

சந்தன கலரில் டிஸ்டெம்பர் அடித்த வீடு. அரக்கு கலரில் கதவு, ஜன்னல்கள். பானுமதி இந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ரசித்துக் கட்டியிருக்க வேண்டும். அப்படி ஒரு நேர்த்தி.

பெரிய கூடம். ஒரு கல்யாணமே நடத்தலாம். கூடத்தை அலங்கரிக்கும் அழகிய சிற்பங்கள். சுவரில் பானுமதியின் புகழ்பெற்ற பழைய கறுப்பு வெள்ளைக் காவியங்களின் ஸ்டில்கள். கூடத்துக்குள் அல்ல ஒரு காலத்துக்குள் அடியெடுத்து வைப்பதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும்.

அந்த ஒளிப்படங்களில் ஏதோ ஒன்றிலிருந்து இறங்கி வந்தாற்போல் பானுமதி தோன்றுவார். பேசிவிட்டு மறுபடியும் ஒளிப்படத்தில் போய் உட்கார்ந்துகொள்வார். திரைப்பட ஸ்டில்கள் மட்டுமின்றி அபூர்வமான அவருடைய தனிப்பட்ட குடும்ப ஒளிப்படங்களும் அங்கிருந்தன.

நீங்கள் பார்த்தே இராத பானுமதி வீட்டு விசேஷத்தில் பெண்கள் கூட்டத்தில் பளிச்சென்று நான் தனிப்பிறவி தெரியுமா என்பது போல் பார்க்கும் பானுமதி. கணவருடன் பானுமதி. ஜனாதிபதியிடம் பரிசு வாங்கும் பானுமதி எனப் பல தோற்றங்கள். கூடத்தில் மாட்டப்பட்ட கடிகாரம் என்னவோ ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அந்தப் படங்களில் காலம் நின்றுவிட்டது!

குறிப்பாக, ஒருபடம் நெஞ்சைக் கொள்ளைகொள்கிறது. தோள் தெரியும்படி ஒரு கறுப்பு உடை. ஆனால், விரசமில்லை. தேவதை மாதிரி நிற்கிறார். பேசும் கண்கள். அலட்சியச் சிரிப்பு. அழகு முகம். அந்தப் படத்தைப் பார்க்கிறவர்கள் சில நேரம் அதிலேயே லயித்துப் போய்விடுவதைக் கவனித்திருக்கிறேன்.

‘இந்தப் படத்தில் அம்மா அப்சரஸ் மாதிரி இருக்காங்க இல்ல?’ என்பார் அண்ணாசாமி. அவர் பானுமதி வீட்டின் அலுவலக நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் இளைஞர். பரம சாது, பேசவே மாட்டார். பக்கத்தில் இடியே விழுந்தாலும் அவர்பாட்டுக்குத் தட்டச்சு செய்து கொண்டிருப்பார்.

‘சினிமாவில் பார்க்கிற அம்மா வேறே… நிஜத்தில் பார்க்கும் அம்மா வேறே. எங்களிடம் கோபமாகத்தான் பேசுவாங்க. உள்ளுக்குள் எங்கள் மீது அன்பு உண்டு. அந்த அன்பைப் பண்டிகை நேரத்தில்தான் காட்டுவாங்க!’ என்றார் அண்ணாசாமி.

நான் ‘எப்படி?’ என்றேன். ‘எங்கள் வீட்டு, மனைவி குழந்தைகளுக்கு எல்லாம் துணிமணிகள், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து ஆசீர்வாதம் பண்ணுவாங்க! சமையல்காரப் பெண்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பாங்க... சாப்பாடு விஷயத்தில் அம்மாகிட்ட நல்லபேர் வாங்குவது கஷ்டம்’ என்றார்.

பானுமதியின் பொது நிகழ்ச்சிகளைக் கவனித்துக்கொள்ள பி.ஏ. அந்தஸ்தில் ஒரு பெண். ரொம்பச் சூட்டிகை. திரைப்படத் தயாரிப்பு, டப்பிங் வேலை, சினிமா சம்மந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தனியாக ஒருவர் இருந்தார். இதைத் தவிர ஒரு பெண்மணி. அவர் உடல்நலம் பேண. பெரும்பாலும் நகங்களை வெட்டி விடுவார். கால்பிடித்து விடுவார். தோட்டக்காரனுடைய இளம் மனைவி அவர்.

மதிய வேளைகளில் அம்மாவுடன் சாப்பிட அவருடைய மகன் டாக்டர் பரணி வருவார். நெடுநெடுவென்று சிவப்பாக அழகாக இருப்பார். ஷேவ் செய்த மோவாய் பச்சை சாயம் பூசியதுபோல் இருக்கும்.

கூடத்தில் எங்களைக் கடந்து அவர் செல்லும்போது அவரிடம் என்னைக் காண்பித்து “இவர் தமிழ்ல பெரிய எழுத்தாளர். என்னோட பயாக்ரபர்!” என்றார் பானுமதி. சின்னதாகப் புன்னகைத்து புருவம் உயர்த்தி ‘ஹலோ’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார் பரணி.

‘படங்களில் நடித்துப் பேர் வாங்கியாச்சு. இன்னும் அண்ணாசாமி, பர்சனல் பி.ஏ., பி. ஆர். ஓ., பயாக்ரபர் இவ்வளவு பேரையும் வைத்துக்கொண்டு எதற்கு இத்தனை சிரமம்? செலவு?’- எல்லாம் பரணியின் அந்த சின்ன ஹலோவில் அடக்கம்.

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:-  thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x