Published : 12 Apr 2019 01:18 PM
Last Updated : 12 Apr 2019 01:18 PM
இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடும் திறன் பெற்றவர் காளி வெங்கட். காமெடி, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பரிணமித்துவரும் மண்ணின் கலைஞர்.
தூத்துக்குடி அருகே உள்ள கத்தாழம்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து எளிய பிண்ணனியோடு சென்னைக்கு வந்து போராடி திரைக்குள் நுழைந்தவர்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட், சென்னை வந்த கையோடு சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார். ஆனால், அன்றாட ஜீவனத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக சென்னை அண்ணா நகரில் மளிகைக் கடையில் வேலை பார்த்திருக்கிறார். அதோடு தண்ணீர் கேன் போடுவது தொடங்கி வெங்கட் பார்க்காத வேலைகளே கிடையாது.
சென்னை வந்து ஐந்தாறு ஆண்டுகள் கடந்தும் சினிமா வாய்ப்பு கிடைக்காத நிலையில் வேறு வேலைக்குப் போக முடிவு செய்திருக்கிறார். சினிமா வாய்ப்பு தேடியதால் இழந்த ஐந்தாண்டுகளை வேறு எங்கே போய் எடுப்பது என்ற கேள்வி அவருடைய மனதைக் குடைந்தது!.
விளைவு, ஒரு இறுதி முடிவெடுத்து முன்பைவிடத் தீவிரமாக சினிமா வாய்ப்புத் தேடத் தொடங்கினார். பாதுகாப்புக்காக டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறார் வெங்கட். கும்பலோடு டப்பிங் பேசும் வாய்ப்புகளைப் பெற்றுவந்த காலத்தில், கதாநாயகி ஒருவருக்கு டப்பிங் பேசியதாகத் திகிலூட்டுகிறார் வெங்கட்.
“நடிப்புக்கான வாய்ப்பு தேடுவதைவிட டப்பிங் பேச வாய்ப்பு தேடுவது மிகவும் சிரமம் என்பதை டப்பிங் சங்கத்தில் சேர்ந்த பிறகுதான் உணர்ந்தேன். ஆனால், ‘மரகத நாணயம்’ படத்தில் கதாநாயகி நிக்கி கல்ராணி அவ்வப்போது ஆண் குரலில் பேசும் காட்சி வரும். அந்தக் காட்சிக்கு நான்தான் டப்பிங் பேசினேன்” என்கிறார் காளி வெங்கட்.
பிறகு 2008-ம் ஆண்டில் ‘தசையினை தீ சுடினும்’ என்ற படத்தில் ‘காளி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எதிர்பாராத விதமாக அந்தப் படம் பாதியில் நின்றுவிட அந்தப் படத்தில் ஏற்று நடித்த ‘காளி’ என்ற கதாபாத்திரத்தின் பெயர் மட்டும் சினிமா வட்டாரத்தில் நண்பர்கள் மத்தியில் பிரபலமாகிவிட, தனது பெயருடன் அதைச் சூட்டிக்கொண்டுவிட்டதாகச் சொல்கிறார் காளி வெங்கட்.
பிறகு எப்படித்தான் சினிமாவில் அவருக்கு அடையாளம் கிடைத்தது? “அப்போ கலைஞர் டி.வி.யில ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி போய்க்கிட்டு இருந்தது. சீசன் 3-ல் நான் ஐந்து குறும்படங்கள்ல நடிச்சேன்.
அந்த சீசன்ல சிறந்த நடிகருக்கான விருது எனக்குக் கிடைச்சது. அங்கே இருந்துதான் எனக்கு நிறைய சினிமா தொடர்புகள் கிடைக்கத் தொடங்கின. ‘வா -குவார்ட்டர் கட்டிங்’ படம்தான் என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம்” என்கிறார் காளி வெங்கட்.
அறிமுகப் படத்தில் காமெடியனாக நடித்ததைத் தொடர்ந்து ‘உதயம் என்.ஹெச். 4’, ‘தடையற தாக்க’, ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி காளி வெங்கட்டுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. காளி வெங்கட்டின் சினிமா வாழ்க்கையில் ‘முண்டாசுப்பட்டி’ மிக முக்கியமான படமாக அமைந்தது.
“‘முண்டாசுப்பட்டி’ ராம்குமாருடைய குறும்படங்களில் நான் ஏற்கெனவே டப்பிங் பேசியிருக்கிறேன். அதன்பிறகு கண்ணபிரான் என்ற நண்பர் மூலமாகவே இயக்குநர் ராம்குமார் நேரடியாக அறிமுகமானார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் விஷ்ணுவோடு வரும் காமெடியன் ரோலுக்கு வேறோருவரை புக் செய்திருந்தார்.
அவர் வராத காரணத்தால் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. அந்தப் படத்தில் நடிச்சது ஓர் இனிய அனுபவம். படம் முழுவதும் நான் டிராவல் பண்ணியிருப்பேன். எனக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த படம்.” என்கிறார் காளி வெங்கட்.
குறும்படங்களிலிருந்து காளி வெங்கட்டின் சினிமா வாழ்க்கை தொடங்கியதால், குறும்படங்களிலிருந்து சினிமாவுக்குள் நுழையும் இயக்குநர்களின் படங்களில் நடிக்க காளி வெங்கட்டுக்கு வாய்ப்பு வந்துவிடுகிறது. தொடக்கத்தில் காமெடியனாகத் தோன்றிய காளி வெங்கட், தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துவருகிறார். ஏன் இந்த மாற்றம்? “எனக்கு சினிமாவில் வெரைட்டியாக நடிக்கவே ஆசை.
அதற்கேற்றாற்போல் குணச்சித்திர வாய்ப்புகள் வந்தபோது அவற்றை அப்படியே பிடித்துக்கொண்டேன். ‘இறுதிச்சுற்று, ‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற படங்களில் காமெடியைத் தாண்டி நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் அமைந்தன. குறிப்பாக, என்னால் சிறந்த குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தப் படங்கள் கொடுத்தன.” என்கிறார் இந்த எளிய கலைஞர்.
இதுவரை நடித்த படங்களின் எண்ணிக்கை? ஐம்பதைத் தாண்டிவிட்டேன் மறக்க முடியாத படம்? ‘இறுதிச்சுற்று’. 30 வயதிலேயே கதாநாயகிக்கு அப்பாவாக நடித்துவிட்டேன். மனம் கவர்ந்த படம்? ‘ராஜா மந்திரி’. என்னோட இயல்பான கேரக்டர் என்னவோ, அதுவாகவே திரையிலும் நடித்தேன். ஹீரோ ஆசை? நான் ஹீரோ மெட்டீரியல் கிடையாதுங்கோ. கதாநாயகர்கள் உடன்? விஜய் கூட நடித்துவிட்டேன். ரஜினி, அஜித் கூட நடிக்க வேண்டும். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT