Last Updated : 15 Mar, 2019 11:39 AM

 

Published : 15 Mar 2019 11:39 AM
Last Updated : 15 Mar 2019 11:39 AM

புதுமுகம் அறிமுகம்: நாடகம் எனக்குத் தாய் வீடு! - சுதஸ்ரீ

‘ஆண்டவன் கட்டளை’, ‘காலா’, ‘மேயாத மான்’, ‘அறம்’, ‘குலேபகாவலி’, ‘துப்பறிவாளன்’, ‘மகளிர் மட்டும்’ எனப் பத்துக்கும் அதிகமான படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் தலைகாட்டியிருப்பவர் சுதஸ்ரீ.

பக்கத்து வீட்டில் இருப்பவர்களால்கூடச் சட்டென்று அடையாளம் காண முடியாத அளவுக்கு மட்டுமே அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ‘சீதக்காதி’ படத்தில் “ விஜய் சேதுபதியின் மகளாக புனிதா என்னும் பாத்திரத்தில் நடித்தபின், திரையுலக வட்டாரம் தொடங்கி, பூங்காக்களில் நடைப்பயிற்சியின்போது எதிர்ப்படுபவர்கள்வரை அடையாளம் காணும் அளவுக்குத் என்னைத் தெரியப்படுத்திவிட்டது சினிமா” என்றார்.

சுதஸ்ரீ - ஈழத்திலிருந்து புலம் பெயர் தமிழராக கனடா சென்று அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்ந்துவருபவர். அங்கே படித்த பிறகு கனடாவிலேயே மேடை நாடகங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். 2012-ல் புலம் பெயர்ந்த தமிழரான மணிவண்ணனைத் திருமணம் செய்தபின் 2015-ல்

சென்னைக்கு வந்தவர் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும் பல குழுக்களின் நாடக முயற்சிகளால் ஈர்க்கப்பட்டு சென்னையிலேயே தங்கி, கலை ஆர்வத்தில் கணவரை மட்டும் கனடாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

முகநூலில் பாராட்டு

“சுற்றுலாவுக்காக வந்த ஆறு மாதத்தில் எனக்கான நடிப்புத் திறமைக்கு இங்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று நினைத்தேன். பொறியியலிலும் சமூக அறிவியலிலும் இரண்டு பட்டங்களைப் பெற்றிருக்கிறேன். அதோடு கனடாவிலேயே மன நலப் பயிற்சி அளிக்கும் முகாம் ஒன்றிலும் பணியிலிருந்தேன்.

ஆறு மாதங்களுக்கு இங்கே நடிப்புப் பயிற்சி பெற்றேன். எம்.ஆர்.ராதாரவியின் `ரத்தக்கண்ணீர்’ நாடகத்தில் ராதாரவியோடு இணைந்து சந்திராவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தின் மூலம் நாடகத்தில் நடிப்பதில் இருக்கும் சவால் எனக்குப் பிடித்துப் போனது. அதனால் நாடக அனுபவத்தை இன்னும் ஆழமாகப் பெற்றுக்கொள்ள மேலும் ஆறு மாதத்திற்கு இங்கேயே தங்கி நாடகக் குழுக்களோடு செயல்படப் போகிறேன்” என்கிறார்.

பல இடங்களில் ஏற்பட்ட அவமானங்களால் சோர்ந்து போகும்போதெல்லாம் சுதஸ்ரீயை நாடகத் துறை சார்ந்த கலைஞர்கள் அவருடைய திறமையைப் புரியவைத்து தேற்றியிருக்கின்றனர். அதேநேரம், இவர் நடித்த நாடகங்களைப் பார்த்து இவரது நடிப்புத் திறனை முகநூலில் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உள்ளிட்டவர்கள் பாராட்டியதையும் நினைவுகூர்கிறார்.

pudhu-2jpg

தனிநபர் நாடகம்

“2016-ல் இருந்து பிரளயனின் நாடகக் குழுவில் இணைந்து நடித்து வருகிறேன். `பயணம்’, `உப கதை’ போன்ற நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பான `முன்னவர்’ எனும் நாடகத்திலும் நடித்திருந்தேன். மேடை என்னும் நாடகக் குழுவுடன் இணைந்தும்  நடித்திருக்கிறேன். என்னைத் தயார்படுத்தியதில் நாடகக் குழு மட்டுமே பிரதானமாக இருந்தது.

போருக்குப் பிந்தைய இலங்கை சார்ந்த கதைகளை எடுத்துத் தனிநபர் நாடகம் ஒன்றை நடத்தும் எண்ணத்தில் இருக்கிறேன். களரிப் பயிற்சி, குரல் பயிற்சி ஆகியவற்றுடன் ப்ரீத்தி ஆத்ரேயாவிடம் நவீன நாட்டியத்தையும் கற்று வருகிறேன். இலக்கியக் கூட்டங்கள், நாடகக் கலை சார்ந்த அரங்க நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் என்னை நீங்கள் பார்க்கலாம்.

பெண் இயக்குநரான ஹலிதா ஷமீம் இயக்கும் புதிய படத்துக்கான நட்சத்திரத் தேர்வில் கலந்துகொண்டேன். அந்தப் படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது இயக்குநர் கல்யாண் இயக்கிவரும் படத்தில் கவுன்சிலராக நடித்திருக்கிறேன்.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ இணையத் தொடருக்காக நட்சத்திரத் தேர்வுக்குச் சென்றிருந்தேன். இவை தவிர தற்போது ராஜு முருகன் உதவியாளர் இயக்கும் ஒரு குறும்படத்தில் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறேன்.” என்று கூறிக்கொண்டே செல்லும் சுதஸ்ரீ, “தமிழ் நாடகம், தமிழ்த் திரை இரண்டிலும் பார்வையாளர்கள் மதிக்கும் இடத்தை அடைய வேண்டும் என்பதே தற்போதைய லட்சியம்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x