Published : 08 Mar 2019 11:08 AM
Last Updated : 08 Mar 2019 11:08 AM
இயக்குநர்கள் பா. இரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், ‘முண்டாசுப்பட்டி’ ரவிக்குமார் என நம்பிக்கைக்குரிய புதிய இயக்குநர்கள் பலரைத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சி.வி.குமார். ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கிய அவர், சில காலம் ஒதுங்கியே இருந்தார். தற்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தைத் தயாரித்து, திரைக்கதை எழுதி தனது இயக்குநர் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து...
‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' கதைக்குத் தாக்கம் எதுவும் உண்டா?
நாளிதழில் படித்த விஷயங்களை வைத்துத் தான் இக்கதையை எழுதினேன். ரவுடி ஒருவர் கொல்லப்பட்டுவிட அவருடைய மனைவி ஆட்களை வைத்துப் பழிவாங்கினார் என ஒரு கிரைம் செய்தி படித்தேன். அதை ஒரு தாக்கமாக எடுத்துக்கொண்டு, ஒரு பெண் பழி வாங்கினால் எப்படியிருக்கும் என்று திரைக்கதையைத் தொடங்கினேன். அதைப் பிரதானமாக வைத்துப் பின்னணியில் ஹெராயின் எப்படிக் கடத்தப்படுகிறது எனச் சொல்லியிருக்கிறேன்.
நடிகர்களை எந்த அடிப்படையில் தேர்வுசெய்தீர்கள்?
புதுமுகம் பிரியங்காதான் நாயகி. அவருடைய கணவராக அசோக் நடித்துள்ளார். நூற்றுக்கும் அதிகமான பெண்களைப் பார்த்து, கடைசியில் பிரியங்காவைத் தேர்வு செய்தேன். பல பெண்களுக்குச் சண்டைக் காட்சிகளில் வெட்கம் வந்துவிடுகிறது. ஆனால், பிரியங்கா உண்மையிலேயே ரவுடியாக மிரட்டியுள்ளார். அவருக்குப் பல சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இயக்குநர் வேலுபிரபாகரன் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சென்னையில் ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்படுகிறது என்கிறீர்களா?
தென்னிந்தியாவின் ஹெராயின் ஹப்பாக சென்னை மாறிக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து பல நாடுகளுக்கு ஹெராயின் சப்ளையாகிக்கொண்டிருக்கிறது. எப்படி ஹெராயின் கடத்துபவர்கள் இருக்கிறார்கள், அவர்களுடைய குரூப் எப்படி இயங்குகிறது என்பதை இப்படத்தில் சொல்லியிருக் கிறேன். பழிவாங்கும் கதை இதன் பின்னணியில் நடக்கும். ‘பாதுகாப்பான சென்னை’ என்று பேசிக் கொண்டிருக்கும் சென்னைக்குள் இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கர உலகம் இது.
ஹெராயின் கடத்துபவர்களைச் சந்தித்துள்ளீர்களா?
இந்தத் திரைக்கதையை எழுதும் முன் இந்தியா முழுவதும் பயணம் சென்றேன். அப்போது இது தொடர்புடைய ஆட்களைச் சந்திருக்கிறேன், பேசியிருக்கிறேன். நம்ம ஊர் படங்களில் காட்டுவது போல் எல்லாம் அவர்கள் இருக்கவே மாட்டார்கள். ஹெராயின் கடத்தல் என்பது பல மில்லியன் டாலர் சம்பந்தப்பட்டது. நீங்கள் கனவிலும் நினைக்க முடியாத அளவுக்குப் பணப் புழக்கம் கொண்ட தொழில் இது. ஆனால், காவல்துறையில் சிக்கும்போது சாதாரண ஆட்கள்தான் மாட்டுவார்கள்.
அவர்களைப் பற்றிய செய்தியும் நாளிதழ்களில் ஒரு ஓரமாகச் சின்னச் செய்தியாக வந்துவிட்டுக் காணாமல் போய்விடும். ஆனால், நினைத்த வியாபாரம் நடந்துவிடும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், எப்படி நடக்கிறது என்பது பெரிய கேள்விக்குறிதான். அத்தகைய முதலைகள் சிக்குவதே கிடையாது. அப்படிச் சிக்கினாலும் பணம் பேசிவிடும். இந்த ஹெராயின் வியாபாரத்தைத் தங்களுடைய மேற்பார்வையில் நடத்த ஒரு போர் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இப்படம் அந்தப் போரைப் பற்றிப் பேசுகிறது.
படங்கள் தயாரிப்பில் மும்முரமாக இருந்தீர்கள். திடீரென்று ஒரு தேக்கநிலை ஏன்?
தொடர்ச்சியாக மூன்று படங்கள் சரியாகப் போகாததால், கொஞ்சம் பண நெருக்கடி இருந்தது உண்மைதான். 2017-ம் ஆண்டில் தொடங்கி 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரைக்குமே தமிழ் சினிமாவில் சுத்தமாக லாபம் என்பதே இல்லை. முன்பு ‘தெகிடி' படத்தை 2.5 கோடி ரூபாய்க்கு எடுத்தேன். அதைத் தொலைக்காட்சி உரிமம் வியாபாரம் மட்டுமே 2.40 கோடி ரூபாய். இப்போது அப்படியல்ல. 2 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால், 25 லட்ச ரூபாய்க்குத் தான் தொலைக்காட்சி உரிமத்தைக் கேட்கிறார்கள்.
இப்போது இந்தி டப்பிங் மார்கெட், டிஜிட்டல் மார்கெட் வியாபாரம் நன்றாக இருக்கிறது. நல்ல படங்கள் தயாரிக்கச் சரியான நேரமிது.
‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்', ‘டைட்டானிக்', ‘ஜாங்கோ', ‘பி.ஈ', ‘4 ஜி' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வருகிறேன். இது போக 2 படங்களுக்கு படப்பிடிப்பு தொடங்க ஆயுத்தமாகி வருகிறேன். படத் தயாரிப்புடன் எனது இயக்கமும் தொடரும். சினிமாவில் மட்டுமல்ல; அனைத்துத் தொழில்களிலுமே ஒரு தேக்க நிலை வந்து மறுபடியும் சரியாகும். தேக்க நிலை வரும்போது, அது சரியாகும்வரை காத்திருப்பது தான் சிறந்தது. 2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம். நல்ல சினிமா எடுத்தால் நஷ்டமடைய வாய்ப்பே இல்லை.
இப்போதுவரை பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரிக்கவே இல்லையே?
பெரிய நடிகர்களின் படமெடுக்க 50 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. அவ்வளவு பெரிய முதலீடு போட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம் படம் எடுக்க முடியும். பெரிய நடிகர்களின் படங்களுக்குச் சம்பளமே ஒரு பெரும் தொகை வருகிறது. இவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்து படம் தயாரித்தால், வட்டி கட்டியே செத்துவிட வேண்டியதுதான். இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் சினிமாவில் இரண்டு வகையான படங்கள் மட்டுமே தயாராகும். ஒன்று பெரிய நடிகர்களின் படங்கள். இரண்டாவது கதையை நம்பி எடுக்கப்படும் சின்ன படங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT