Last Updated : 28 Mar, 2019 07:40 PM

 

Published : 28 Mar 2019 07:40 PM
Last Updated : 28 Mar 2019 07:40 PM

திரைப் பார்வை: கலை ஒருபக்கம், கவளம் மறுபக்கம் (நீர்த்திரை)

கடந்த ஆண்டு தமிழில் அம்ஷன் குமார் இயக்கத்தில் வெளியானது ‘மனுஷங்கடா’. அந்தப் படம், சுயாதீனமான முறையில் வணிகரீதியான சமரசங்களுக்கு ஆட்படாமல் உருவாக்கப்பட்டது. இதே பாவனையில் செழியன் இயக்கத்தில் ‘டுலெட்’ என்றொரு படம் வந்தது. இந்த சுயாதீனப் பாதையில் தற்போது வெளியாகியுள்ளது ‘நீர்த்திரை’. ‘மனுஷங்கடா’, நாசர் இயக்கிய படங்களின் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.தரன் இயக்கியுள்ளார்.

எந்தவிதமான விளம்பரமுமின்றிப் படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அசலான திரைப்படத்தைக் காணும் விருப்பம் உள்ள பார்வையாளர்கள் மட்டும் பார்த்தால் போதும் என்னும் கலையார்வத்தால் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார் கமீலா நாசர். கலையை வாழ்வாகக் கருதி கற்பனையில் வாழ்ந்துவரும் கலைஞர்களது யதார்த்த வாழ்வில் மண்டிக்கிடக்கும் சோகத்தை, சுகத்தைச் சொல்ல முயன்றிருக்கும் படம் இது.

திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுகூடுகிறார்கள். அவர்களுக்குள் நடைபெறும் இயல்பான உரையாடல் வழியே அவர்கள் கடந்து வந்த வாழ்வு பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதைகளில் கனவு இருக்கிறது; கற்பனை இருக்கிறது; வரம் இருக்கிறது; வஞ்சனை இருக்கிறது; மாற்றம் இருக்கிறது; ஏமாற்றம் இருக்கிறது.

பஷீர் வேடமேற்றிருக்கும் நடிகர் நாசர்தான் இவர்களை இணைக்கும் மையப்புள்ளி. ஒருவகையில் இந்தப் படம் தமிழில் வெளியான ‘96’ போலவும் இன்னொரு வகையில் மலையாளத்தில் வெளியான ‘ஒழிவு திவசத்தே களி’ போலவுமான சாயலைக் கொண்டிருக்கிறது.

படித்த காலத்தில் தங்கப்பதக்கம் வென்றபோதும் நடிக்கச் சரியான வாய்ப்பு இல்லாமல் கண்ணாடிக் கடை வைத்து வாழ்வை ஓட்டுகிறார் பஷீர். யோகானந்தின் வீட்டுக்குள் அடியெடுத்துவைக்கும்போது, ஷீல்டை ஆசையுடன் எடுத்துப் பார்க்கையில், அவருடைய மனைவியின் முக பாவத்தில் புலப்படுகிறது பஷீரின் ஏக்கம்.

நல்லாசிரியர் கனவைச் சுமந்தபடியே இருக்கும் பஷீருடைய மனைவி அபிராமி நல்ல குடும்பத் தலைவியாக மட்டுமே வாழ்ந்துவருகிறார். பாலா சிங் ஏற்றிருக்கும் வேடமான பாஸி, நண்பனது படத்தில் வாய்ப்பு கிடைக்கிறது என ஆசைப்பட்டு வந்தபோது தயாரிப்பு மேலாளர் பணி தரப்பட, அதிலேயே அவரது வாழ்க்கை புதைகிறது. மெத்தட் ஆக்டிங் அது இதுவென என்னவெல்லாமோ கற்று வைத்திருந்தும், காலம், ‘துளசி மாடம்’ கண்ணன் எனும் சீரியல் நடிகராகிவிட்டிருக்கிறது தலைவாசல் விஜயை.

பிரித்விராஜ் பெரிய ஸ்டார் யோகானந்த் ஆகியிருக்கிறார். மற்றொரு நண்பர் ஞானகுரு விரும்பிய படங்களையும் எடுக்க இயலாமல் வணிகரீதியிலும் வெற்றிபெற முடியாமல் தத்தளிக்கிறார். கருணா பிரசாத் நவீன நாடகத்தைப் பிடிவாதமாக நடத்திவரும் ரகுபதி ஆகியிருக்கிறார். இந்தக் குழுவின் ஒரு பெண்ணான பானு ஆவணப்படம் எடுத்துக் காலத்தை ஓட்டுகிறார்.

பானு வேடத்தில் நடித்திருப்பவர் நடிகை ரோஹிணி. கலைசார் கனவுக்கும் யதார்த்த வாழ்வுக்கும் இடையே அலைந்தலைந்து அல்லல்படும் மாந்தர்கள்தாம் இந்தக் கதாபாத்திரங்கள்.

கூத்தில் நடித்த ஆர்வத்தில் பெரிய நடிகராகிவிடலாம் எனும் ஆசையுடன் திரிந்தவருக்கு நடிகர் வீட்டில் சமையல் கலைஞர் வேலைதான் கிடைக்கிறது. மனத்துக்குப் பிடித்த சின்னப்பாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டும் பாடிக்கொண்டும் சமையல் வேலையை நயத்துடன் செய்துவருகிறார்.

வீட்டுவேலை செய்துவரும் சரோஜாதேவியுடைய கணவன் தொழில் சுத்தமானவன், ஆனால் கணவனுக்குரிய முதன்மைக் கடமையில் பின் தங்கியவன். சரோஜாதேவியின் வாளிப்பான உடம்புக்காக நாக்கைத் தொங்கவிட்டுப் பின் தொடரும் எந்த நாயையும் அவர் நடையேற்றுவதில்லை. யாரை தனக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

நண்பர்களின் உரையாடலாகவே நகரும் படத்தில் கள்ளுண்ட பரம்பரை விஸ்கிக்கும் பிராந்திக்கும் அடிமையான கதை பேசப்படுகிறது; மீடூ விவகாரமும் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், படம் எடுக்கப்பட்ட தன்மையால் ஒரு நல்ல நவீன நாடகமாகத் தோற்றம் கொண்டிருக்கிறதே ஒழிய, சினிமாவின் பார்வையனுபம் பற்றாக் குறையாகவே உள்ளது. நீர்த்திரை போல் ஆங்காங்கே திரைப்பட அனுபவம் கிட்டியபோதும் நடிப்பும் வசனங்களுமே நீர் போல் படத்தைச் சூழ்ந்துள்ளன.

நடிகர்கள் தங்கள் பங்கைத் திறம்படச் செய்திருக்கிறார்கள். ஆனால், திரையில் காட்சிகள் விரிந்தாலும் திரை விலகிய மேடையின் சம்பவங்களாகவே காட்சிகள் நிலைகொண்டுவிட்டன. படத்தின் பெரிய பலவீனம் இது. ஆனால், இதையெல்லாம் சகித்துக்கொண்டு கதை கேட்க விரும்பும் பார்வையாளர்களுக்குத் தேவையானதைப் படம் வஞ்சனையின்றித் தருகிறது.ஒருவகையில் இந்தப் படம் தமிழில் வெளியான ‘96’ போலவும் இன்னொரு வகையில் மலையாளத்தில் வெளியான

‘ஒழிவு திவசத்தே களி’ போலவுமான சாயலைக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x