Last Updated : 08 Mar, 2019 11:08 AM

 

Published : 08 Mar 2019 11:08 AM
Last Updated : 08 Mar 2019 11:08 AM

ஆஸ்கர் 2019 கண்ணோட்டம்: இசையின் நிறம்!

சமகால உலகில் நடந்துகொண்டிருக்கும் யுத்தங்கள் குறித்து எடுக்கப்பட்ட சினிமாப் படைப்புகளை ஆஸ்கர் விருதுகள் கௌரவப்படுத்தியுள்ளன. ஆம்! பழைய உலகத்தை, பழைய ஒழுங்குகளை, பழைய ஏற்றத்தாழ்வுகளைத் தக்கவைக்க விரும்புபவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் நடக்கும் யுத்தங்களைப் பற்றித் தீவிரமாகப் பேசும் கலைப்படைப்புகள் அவை.

வெள்ளையினத்தவரான கார் ஓட்டுநருக்கும் கறுப்பின பியானோ இசைக்கலைஞருக்கும் இடையில் ஏற்படும் நட்பைப் பேசும் ‘கிரீன் புக்’ மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

சென்ற நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில் பெரும் நிறவெறி நிலவிய சூழ்நிலையில் வெகுதூரம் காரில் பயணம் செல்லும் கறுப்பின மக்களுக்கு, வன்முறைகளிலிருந்து தப்பித்துப் பாதுகாப்பாகச் செல்வதற்கென ‘கிரீன் புக்’ என்ற கையேடு இருந்தது. கறுப்பின மக்கள் தங்குவதற்கென்று தனியான விடுதிகள், உணவகங்களின் முகவரிகள் அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு ‘ரோட்’ மூவிக்கு இதைவிட அருமையான தலைப்பு என்னவாக இருக்க முடியும்.

1962-ம் ஆண்டு காலத்திய அமெரிக்காவில் பொது இடங்களில் நிலவிய கடுமையான நிறவெறியை இப்படம் பேசுகிறது. பணக்காரனும் உயர்கல்வி கற்ற செவ்வியல் இசைக் கலைஞனான டான் ஷெர்லி, தனது பயணத்தில் உடல்ரீதியான தாக்குதல் உள்ளிட்ட வன்முறைகளைச் சந்திக்கிறான். வேலையின்மை காரணமாக வேறுவழியின்றிக் கறுப்பின இசைக் கலைஞருக்கு கார் ஓட்டச் சம்மதிக்கும் வெள்ளையினத்தவனான டோனி வேலலாங்கோ தனது நிறவெறிச் சிந்தனையிலிருந்து படிப்படியாக விடுபட்டு டான் ஷெர்லியுடன் எப்படி நேசமாகிறான் என்பதே கதை.

நிறவெறி நிலவிய சாலைகளினூடாக அருமையான இசையும் நேசமும் கலந்த பயணம் என்று ‘கிரீன் புக்’கைச் சொல்லலாம்.

கறுப்பினத்தவர் மீது தொடக்கத்தில் தீண்டாமை இழிவைக் கடைப்பிடித்து பின்னர் மாறும் வேலலாங்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விக்கோ மார்டென்சென். இசைக் கலைஞன் டான் ஷெர்லியாக நடித்து அத்தனை மதிப்பையும் பிரியத்தையும் அறிமுகமான சில நொடிகளிலேயே பெற்றுவிடுகிறார் மகர்ஷெலா அலி. இவ்விருவரது நடிப்பும் படத்தின் நிலக்காட்சிகளுக்கு இணையான அற்புதங்களை நிகழ்த்திவிடுகின்றன. மகர்ஷெலா அலியின் நடிப்புக்குச் சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானதுதான்.

இசையும் போராட்ட மனநிலையும்

‘கிரீன் புக்’ படத்தின் கதை நடந்த காலகட்டத்துக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1970-களின் அமெரிக்காவில் நடக்கும் கதைதான் ‘பிளாக் க்ளான்ஸ்மேன்’. இளமையும் லட்சியத் துடிப்பும் மிக்க ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் ரோன் ஸ்டால்வொர்த். அவன் கொலராடோ ஸ்பிரிங்க்ஸ் நகரத்தின் காவல்துறையில் அதிகாரியாகச் சேர்கிறான்.

காவல்துறையில் இருக்கும் நிறவெறிப் பார்வைகளைத் தாண்டி, சக யூத காவல் துறை அதிகாரியின் உதவியோடு ஆரிய நிறவெறி அமைப்பான கு க்ளுக் க்ளான் சங்கத்துக்குள் நுழைந்து, அவர்களின் திட்டங்களை முறியடிப்பதுதான் கதை. காதல், நகைச்சுவையோடு சுவாரசியமாகவும் அதேவேளையில் அக்கால கட்டத்தில் கறுப்பின இளைஞர்களிடம் நிறவெறிக்கு எதிராக இருந்த போராட்ட மனநிலையையும் இப்படம் ஜாஸ் இசையோடு சேர்த்துச் சொல்கிறது.

இதயபூர்வமான விசாரணை

சிறந்த அயல் மொழித் திரைப்படத்துக்காகவும் சிறந்த இயக்குநர், ஒளிப்பதிவாளருக்காகவும் ஆஸ்கர் வென்ற ‘ரோமா’தான் மேற்கண்ட இரண்டு படங்களைவிடப் பார்வையாளருக்கு வலியைத் தரும் படைப்பாக இருக்கக்கூடும். உலகம் முழுக்கத் தொழிலாளர்களுக்குத் தரப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள்கூட இல்லாதவர்களாக இருக்கும் ஏழு கோடி வீட்டுப் பணியாட்களில் ஒருத்தியின் கதைதான் ‘ரோமா’.

அரசியல் சாசனரீதியாகத் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்த முதல் நாடாக இருந்தும் வீட்டுப் பணியாட்களுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படாத மெக்ஸிகோவில் 1970-ல் நடக்கும் கதை.

பணிப்பெண் க்ளியோவின் கடிகாரம் அதிகாலையிலேயே ஒலிக்கிறது. அவள் தங்கிப் பணிசெய்யும் உயர்தர வர்க்கத்தினர் வீட்டில் இன்னும் யாரும் எழவில்லை. வளர்ப்பு நாய் விளையாடிக் களிக்கும் கார் காரேஜைச் சுத்தம் செய்து, கலைந்த படுக்கைகளைச் சரி செய்து, துணிகளை மொட்டை மாடிக்கு எடுத்துச் சென்று அலசிப் போட்டுக் குழந்தைகளைச் சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்பி, மதிய உணவு செய்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து அவர்களுக்குக் கதை சொல்லித் தூங்க வைக்கும்வரை அவளுக்கு வேலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

அவளது ஓய்வு, பொழுதுபோக்கு, காதல், துயரம், ஏக்கம் அனைத்தும் இந்த வேலைகளுக்குள் அவள் சுருட்டிச் செல்லும் அழுக்குத் துணிகளுக்குள் சுருண்டுகிடப்பதைச் சொல்லும் திரைப்படம் இது. க்ளியோவுக்கு எஜமானியாகவும் மேல் வர்க்கத்தைச் சேர்ந்த சோபியா ஆறுதலாகவும் இருக்கிறார்.

பெண் என்ற நிலையில் துயரத்தையும் புறக்கணிப்பையும் வேறு வேறு நிலைகளில் பகிர்பவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். துணையாக இருந்தவனின் பிரிவிலிருந்து மீண்டு வாழ்க்கையின் சாகசங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கறுப்பு வெள்ளையில் நகர்ப்புறச் சூழலில் எடுக்கப்பட்ட இப்படத்தின் ஆழமும் அகலமும் கொண்ட நிதானமான ஷாட்கள் படத்தின் அழுத்தத்தை மேலும் கூட்டுபவை.

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் பணிபுரியத் தொடங்கி நம் வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்ட சீன முகத்தோற்றம் கொண்ட பெண்களை நினைவூட்டும் நாயகி யாலிட்ஷா அபாரிசியோவின் தொழில்முறை நடிகை அல்ல. ஆனால், கதாபாத்திரத்தின் நோய்மை, அவநம்பிக்கையை அவர் அற்புதமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

இத்திரைப்படத்தின் ஆபரணமென்றால் அபாரிசியோதான். இப்படத்துக்காகச் சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றிருக்கும் அல்போன்சா குர்ரான், தனது குழந்தைப் பருவத்தின் கதை என்று இப்படத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனில் சம்பிரதாயம் பேணும் பார்சி குடும்பத்தில் பிறந்து பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக ராக் பாடகராக ஆகி, ஓரினப் பாலுறவாளராகத் தனது பாலீர்ப்பைத் தேர்ந்தெடுத்து எய்ட்ஸ் பலிகொண்ட

மாபெரும் பாடகன் ப்ரெடி மெர்குரி குறித்த ‘பொகீமியன் ரப்சடி’யும் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளது. ப்ரெடி மெர்குரியின் பாடல்கள் ஏற்படுத்திய அதிர்வைத் திரைப்படத்திலும் உணர முடியும். ராக் மியூசிக் ரசிகர்கள் கொண்டாடிய ப்ரெடி மெர்குரியின் வேடத்தை ஏற்ற ராமி மாலிக் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறார். இவர் அரேபிய அமேரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுபெற்ற ‘கிரீன் புக்’, ‘பிளாக் க்ளான்ஸ்மேன்’, ‘ரோமா’, ‘பொஹீமியன் ரப்சடி’ ஆகிய நான்கு திரைப்படங்களும் உண்மைச் சம்பவங்கள், சரிதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தப் படங்கள் பார்வையாளர்களை ஒரு மாற்றத்துக்கும் இதயப்பூர்வமான விசாரணைக்கும் அழைப்பவை.

நிறம், பாலினம், வர்க்கம், பாலியல் தேர்வு சார்ந்து ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் அது சார்ந்த வலிகளையும் சினிமா போன்ற ஒரு கலை சாதனம் பேசும்போது, அது எப்படிச் சக்திவாய்ந்ததாக மாறும் என்பதை ஆஸ்கர் பரிசுகளை வென்றுள்ள இந்தப் படங்கள் நிரூபிக்கின்றன. ‘கிரீன் புக்’ படத்தில் நாயகன் சொல்வது போல, உலகம் சிக்கலாகத்தான் இருக்கிறது. ஆனாலும், நேசிக்க வேண்டும் என்கின்றன இந்தப் படைப்புகள்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x