Last Updated : 01 Mar, 2019 11:24 AM

 

Published : 01 Mar 2019 11:24 AM
Last Updated : 01 Mar 2019 11:24 AM

நம்பியார் 100: அவர் முன்னால் நான் சிறுமி!

நம்பியார் சாமியுடனான எனது பந்தம் அரை நூற்றாண்டுக்கும் மேலானது. அவருடைய மகன் சுகுமாரின் வகுப்புத் தோழி நான். அவரையும் அவருடைய தங்கை ஸ்நேகாவையும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல எப்போதாவது நம்பியார்சாமி வருவார். நான் திரைத்துறையில் நுழைந்தபோது, அவர் ஏற்கெனவே வில்லன்களின் ராஜ்ஜியத்தில் ஒரு அரசனாகக் கோலோச்சிக் கொண்டிருந்தார்.

நான் எப்போதும் தனிமையை விரும்புபவளாகவும் திரைத்துறையிலும் வெளியிலும் நண்பர்கள் விஷயத்தில் மிகவும் தேர்வு கொண்டவளாகவுமே இருந்திருக்கிறேன். ஆனாலும், ஒரு நண்பரைவிட மேலாக, நம்பியார்சாமியை நான் எனது வழிகாட்டியாகக் கருதினேன்.

எனது பதினாறாம் வயதுப் பிறந்த நாளுக்கு ஆசிர்வாதம் வேண்டி அவருடைய வீட்டுக்கும் சோவின் வீட்டுக்கும் தான் நான் போனேன். அவரது செல்லப் பேரனான தீபக், அந்த மாபெரும் மனிதர் குறித்து எழுதிய புத்தகத்தைப் பற்றி என்னிடம் சொன்னபோது, நம்பியார்சாமியுடனான எனது வாழ்நாள் காலப் பிணைப்பைப் பற்றிப் பேசுவதற்குச் சில நிமிடங்கள் கிடைத்தது மகிழ்ச்சியை அளித்தது.

நம்பியார்சாமியுடன் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் பணியாற்றியிருந்தாலும் அவர் போலீஸ்காரராக பாசிட்டிவ் கேரக்டரிலும் எம்.ஜி.ராமசந்திரன் சற்று நெகட்டிவான கதாபாத்திரத்திலும் நடித்த தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘தனிப்பிறவி’ படம் ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தவகையில் நம்பியார்சாமியும், எம்.ஜி.ஆரும் நடித்த ஒரே படம் அது.

அதில் நான் நம்பியாரின் மகளாக நடித்தேன். 1968-ல் வெளியான ‘புதிய பூமி’ படத்திலும் அவருடைய மகளாக நான் நடித்தேன். எனக்குப் பிரியமான ஆளுமைகளான நம்பியார்சாமி, சோ இருவரும் தந்தை, மகனாக ‘என் அண்ணன்’ படத்தில் நடித்தனர். நம்பியார் சாமி இந்தப் படத்தில் திகிலூட்டக்கூடிய வில்லனாக இருந்தாலும் தனது கோழை மகனிடம் அவர் பேசும் காட்சிகள் ஒரு நடிகர் இன்னொரு நடிகரை எப்படித் தூக்கிச் சாப்பிடலாம் என்பதற்கு என்றைக்குமான உதாரணம்.

தந்தையும் மகனும் சேர்ந்து மற்றொரு மகத்தான வில்லனான அசோகனை மிரட்டுவது மூச்சுமுட்டுமளவு சிரிப்பை வரவழைக்கக்கூடியது. சாமியின் வில்லன் நடிப்பு மிளிர்ந்த படம் ‘சவாலே சமாளி’. நான் அவருடைய தங்கையாக நடித்தேன். அந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அவர் திகிலூட்டுவார். அத்தனை உக்கிரமும் ஆரவாரமும் வெளிப்படும் படப்பிடிப்பில் இயக்குநர் ‘கட்’ சொன்னதும் அமைதியே வடிவான நபராக, மற்றவர்களின் நலத்தை விசாரித்தபடி, நகைச்சுவை மிளிரப் பேசுபவராக மாறிவிடுவார்.

சில உறவுகளும் பந்தங்களும் நீண்ட காலம் நிலைத்திருப்பதனாலேயே நம்மைப் பெருமிதப்படச் வைக்கக்கூடியவை. நம்பியார்சாமி, அவருடைய மனைவி ருக்மிணி அம்மாளுடனான எனது நட்பு அப்படிப்பட்டது. என்னை எப்போதும் கிண்டல் செய்தபடி இருக்கும் நம்பியார்சாமியின் உறவு, விலைமதிப்பற்றதாக இருந்துள்ளது.

அறிமுக நாயகியாக இருந்தபோதும், தமிழகத்தின் முதலமைச்சராக ஆனபோதும் நான் நம்பியார்சாமிக்கு அதே சிறுமிதான். எப்போதும் என்னை ஆசிர்வதித்தவர் அவர். அத்துடன் அவரை முழுமையாக அறிய வாய்ப்பிருந்தவர்களின் உயரிய மதிப்பை எப்போதும் பெற்றிருந்தவர். இந்தப் புத்தகம் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் அத்தியாவசியமானது.

தீபக் நம்பியார் எழுதியிருக்கும் ‘நம்பியார்சுவாமி: தி குட், தி பேட் அண்ட் தி ஹோலி’ புத்தகத்துக்கு மறைந்த முதல்வர் ஜெ. ஜெயலலிதா எழுதியிருக் கும் முன்னுரையின் ஒரு பகுதி.

தமிழில்: ஷங்கர் படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x