Published : 28 Mar 2019 07:19 PM
Last Updated : 28 Mar 2019 07:19 PM

இயக்குநரின் குரல்: பொருளாதார அராஜகத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாது! ( ‘உறியடி’ விஜயகுமார்)

‘உறியடி’ படத்தின் மூலம் யார் இந்த இளைஞர் எனத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் விஜயகுமார். தற்போது ‘உறியடி 2’ படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக நடித்து, படத்தை எழுதி இயக்கியிருக்கும் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…

முதல் படம் கற்றுக்கொடுத்த பாடம் என்ன?

என்னதான் நல்ல படம் எடுத்திருந்தாலும், விமர்சகர்கள் பாராட்டியிருந்தாலும் சரியானபடி, தரமான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ‘உறியடி’க்கு அது பெரிய போராட்டமாக அமைந்துவிட்டது. டி.டி.எஸ் ஒலியமைப்பு தொடங்கி டி.ஐ வரை பெரியதிரை அனுபவத்துக்கான அத்தனை நல்ல தொழில்நுட்பங்களும் தரமாக இருக்க வேண்டும் என்று இரவு பகலாக உழைக்கிறோம்.

அதெல்லாம் எதற்காக? திரையரங்கில் வந்து மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.. அது ‘உறியடி’க்கு அமையாமல் போய்விட்டது. முதல் படத்தால் ஏற்பட்ட இழப்பிலிருந்து நான் மீண்டுவர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், எனது இரண்டாவது படத்துக்கு அந்த வெளியீட்டுச் சிக்கல் வந்துவிடவே கூடாது என்று முடிவு செய்தேன்.

கதை முன்பே தயாராகியிருந்தாலும் படத்தைச் சிறந்த முறையில் நல்ல திரையரங்குகளில் பரவலாக வெளியிடும் ஒரு தயாரிப்பாளர் தேவை என்று பொறுமையோடு காத்திருந்தேன்.

நடிகர் சூர்யா இந்தப் படத்துக்குள் எப்படி வந்தார்?

‘உறியடி’க்குப் பிறகு என்னை நடிக்கக் கேட்டும், படம் இயக்கச் சொல்லியும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், எதையும் ஒத்துக்கொள்ளவில்லை. 2டி பட நிறுவனத்தின் ராஜசேகரை ஒருநாள் சந்தித்தேன். அப்போது ‘உறியடி 2’ திரைக்கதையின் அவுட்லைனை அவரிடம் கூறினேன். அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது.

சூர்யாவிடம் முழுத் திரைக்கதையைச் சொல்லச் சொன்னார். சொன்னேன். சூர்யா கதையைக் கேட்டுவிட்டு, சில கேள்விகள் கேட்டார். ‘எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு, கண்டிப்பா நம்ம பேனர்ல படம் பண்ணலாம்” என்று சொன்னதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது. முதல் படத்தால் பெரிய இழப்பில் இருந்த எனக்கு இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனம் கிடைத்ததும் பெரிய நிம்மதியாகிவிட்டது.

கதையை நம்பும் ஒரு இயக்குநருக்கு எவ்வளவு சுதந்திரம் தரவேண்டுமோ, அதை எனக்குக் கொடுத்தார் சூர்யா.

ஒரு மதுக்கடையால் பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்கள் திருப்பி அடிக்கும் பழிவாங்கும் கதையில் சாதி அரசியலின் தீவிரத்தைக் கச்சாத் தன்மையுடன் சித்தரித்தது ‘உறியடி’. அதற்காகவே பாராட்டவும் பட்டது. இரண்டாம் பாகத்தில் அந்தக் கச்சாத் தன்மைக்கு இடம் இருக்கிறதா?

‘உறியடி’ ரூ.5 கோடியில் எடுக்கப்பட்டிருந்தாலும் அதன் ‘ரா லுக்’க்கிலிருந்து மாறியிருக்காது. ஏனென்றால், அதன் கதை அப்படி. அனைவரும் ஏற்றுக்கொண்டு மவுனமாகக் கடந்துபோகும் உண்மையோடு எப்படி அந்தப் படம் இருந்ததோ, அதே அளவுக்குக் கசப்பான உண்மைகளைத்தான் ‘உறியடி 2’-ம் காட்டவிருக்கிறது. ஆனால், முதல் பாகத்தின் ‘ரா லுக்’ இதில் இருக்காது. ஏனென்றால், இதில் கதை அப்படி.

மேக்கிங் என்பதில் படம் பலபடி மேலே இருக்கும். இதிலும் சாதி அரசியலின் முகம் உண்டு என்றாலும், முதல் படத்தின் தொடர்ச்சியாகக் கதையை அமைக்கவில்லை. அரசியலை ஆட்டிவைக்கும் பேராசை கொண்ட முதலாளித்துவமும் அதன் உழைப்புச் சுரண்டலும் இதில் மையக் கருத்தாக இருக்கும்.

யதார்த்தத்தை விட்டு விலகிப்போகாது. ‘உறியடி’ பொலிட்டிகல் ரிவெஞ்ச் டிராமா என்றால், இது பொலிட்டிகல் திரில்லர் என்பேன்.

என்ன கதை?

சமத்துவமின்மையால் பாதிக்கப்படும் ஒரு சாமானிய இளைஞன் விழிப்புணர்வு பெறுவதும் அரசியலுக்கு வந்து திருப்பி அடிப்பதும்தான் கதை. கதாநாயகன் ஒரு தொழிலாளி. 100 வருடம் தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட கதைதான். எங்கே மாறுபடுகிறது என்றால் நிகழ்கால அரசியலோடு எவ்வளவு ஒத்துப்போகிறோம்.. எவ்வளவு உண்மைகளைச் சொல்கிறோம் என்பதில்தான்.

‘வன்முறையைக் கொண்டாடிய படம்’ என்ற விமர்சனம் ‘உறியடி’யின் மீது வைக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திலும் அது உண்டா?

‘உறியடி’யில் இடம்பெற்ற வன்முறைதான் அந்தப் படத்தை சினிமாத்தனத்திலிருந்து காப்பாற்றியது. அதனால்தான் சாதி அரசியலுக்கு எதிராக அதில் சொல்லப்பட்ட கருத்து படம் பார்த்த இளைஞர்களிடம் போய்ச் சேர்ந்தது என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் கதைக்கு வன்முறை மட்டுமல்ல; புகை, மது என எதுவும் தேவைப்படவில்லை.

படத்தின் டீஸரில் புரட்சியாளர் சேகுவேராவின் படம் சுவரில் இருக்கிறது. நாயகன் பேசும் வசனங்கள் பொதுவுடைமையைக் கோருகின்றன. இதில் மார்க்சியம் பேசியிருக்கிறீர்களா?

என்னைப் போன்றவர்கள் களத்தில் இறங்கி மக்களுக்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், சினிமா மூலமாக மக்களை எளிதாக அணுகிவிட முடிகிறது, ‘Of all the arts, for us cinema is the most important' என்று லெனின் சொல்லியிருக்கிறார். ‘கலைகளில் எல்லாம் சினிமாதான் உயர்ந்தது' என்று ஒரு கலைஞன் சொல்லியிருந்தால், அது தற்பெருமை, உயர்வுநவிற்சின்னு சொல்லலாம்.

ஆனா இதைச் சொன்னவர் நூற்றாண்டுகளைப் புரட்டிப்போட்ட மாபெரும் புரட்சியாளர். அவர் சொன்ன விஷயம்தான் சினிமா பக்கம் என்னைத் திருப்பியது. ஆனால், மார்க்சியம் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. நான் இன்னும் புத்தகம் படிக்கும் பழக்கத்துக்குள் வரவில்லை. ஆனால், அன்றாட வாழ்க்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் இஸங்களைவிடப் பெரியது என நம்புகிறேன். நான் மட்டும் நன்றாக இருந்தால் போதாது.

என் அக்கம் பக்கத்தில் இருக்கிற அத்தனை பேரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போகும்போது அது எனக்குத் தவறாகத் தெரிகிறது. அதற்கு யார் காரணம் எனப் பார்க்கும்போது கோபம் வருகிறது. அத்தனை சொத்தும் சிலரிடம் மட்டுமே போய்ச் சேருவதைப் போன்ற பொருளாதார அராஜகம் போன்ற கொடுமை, இந்த உலகத்தில் வேறு என்ன இருக்கிறது! அதுதான் வன்முறை.

‘96’ படத்துக்கு முன்பே கோவிந்த் வசந்தாவைப் பிடித்துவிட்டீர்களா?

ஆமாம். அவர் தனது இசைக்குழுவை நடத்திக்கொண்டிருந்த நாட்களிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். இசை மீது இருந்த காதலில் அவர் கல்லூரியில் சேராமல் அப்படியே கம்போஸிங் பக்கம் வந்துவிட்டார். ஈகோ இல்லாத இசையமைப்பாளர். இந்த படத்தில் மூன்று பாடல்கள். ‘உறியடி’யில் இடம்பெற்றதைப் போல இதிலும் பாரதியின் கவிதை ஒன்று பாடலாகியிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு தன்மையுடன் இருக்கும். மூன்றில் இரண்டு பாடல்களை கோவிந்த் வசந்தாவே பாடியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x