Published : 28 Mar 2019 07:26 PM
Last Updated : 28 Mar 2019 07:26 PM
இணைய மேடையில் சமூகப் பிரச்சினைகளையும் அதன் கூர்மையான முரண்பாடுகளையும் பட்டவர்த்தனமாகப் பேசும் படைப்புகளை அதிகம் பார்க்கலாம். அதே முரண்பாடுகளைப் பகடி செய்தவாறு பொட்டில் அறையும் கருத்துகளை முன்வைக்கிறது ஜீ5 இணையத்தின் பிரத்யேகத் திரைப்படமான ’தி லவ்லி மிஸஸ்.முகர்ஜி.’
திரைப்படத் துறையில் ஒப்பனைக் கலைஞராக வளர்ந்துவரும் துடிப்பான இளம்பெண்ணிடம் படம் தொடங்குகிறது. தான் நேசிக்கும் தொழிலில் கரைந்திருக்கும் அப்பெண்ணுக்கு ஏற்பாட்டுத் திருமணங்களில் விருப்பமில்லை. எதிர்பாராமல் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளை அமைகிறது.
பெற்றோரின் நிர்ப்பந்தத்துக்காக உணவு விடுதி ஒன்றில் அவரைச் சந்திக்கிறாள். தான் நேசிக்கும் பணியை அவன் துச்சமாக எண்ணுவதையும் அவனது சராசரியான எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொள்கிறாள். தனது தரப்பை வெளிப்படுத்தும் நோக்கில் அவனுக்கு ஒரு கதை சொல்லத் தொடங்குகிறாள். அரை மனதுடன் அவனும் கேட்க ஆரம்பிக்கிறான்.
ஒரு வங்காளப் பெண் தனது மணவாழ்வில் சந்திக்கும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களுமாக விரியும் கதைக்குள் இன்னொரு கதைக்கான கதவு திறக்கிறது. அறிவுஜீவியாகத் தன்னை நினைத்துக்கொண்டு இலக்கியத்தில் நோபல் பரிசு பெற விழையும் கணவனுக்குச் சராசரியான ஆசைகள் கொண்ட மனைவி வாய்க்கிறாள்.
தனது இசை ஆர்வத்தை அவன் அலட்சியப்படுத்தினாலும், மகா காவியம் படைக்கும் கணவனுக்கான சகல சேவைகளையும் செய்யும் மனைவியாக அவள் வளைந்து கொடுக்கிறாள்.
எதிர்பாராத திருப்பமாக அந்த அறிவுஜீவியை மரணம் தேடி வருகிறது. செயற்கை நுண்ணறிவின் உதவியால் இறப்புக்குப் பின்னரும் தனது படைப்புப் பணியைத் தொடர்கிறான். அந்த அற்ப கணவனைப் பத்தாம்பசலியான மனைவி பழிவாங்குவதுடன் கதை முடிகிறது.
56 நிமிடங்களில் முடியும் எளிமையான காட்சிகள் கொண்ட திரைப்படம் சுமாரான தமிழ் டப்பிங்கிலும் கூட, தனது உள்ளடக்கத்தாலும் நகைச்சுவையோட்டத்தாலும் ஈர்க்கிறது. ஆணாதிக்கவாதிகள் மட்டுமன்றி, இலக்கியவாதிகள், பிற்போக்குவாதிகள், சுயநலமிகள், நவீன அறிவியலின் பிதற்றல்களைப் பிடித்துக்கொண்டு திரிபவர்கள் எனப் பல தரப்பினரையும் ஆரவாரமின்றி கிண்டல் செய்திருக்கிறார்கள். ஸ்வஸ்திகா முகர்ஜி, ஜோய்தீப் முகர்ஜி உள்ளிட்டோர் நடிப்பிலான திரைப்படத்தை இந்திராநீல் ராய்சவுத்ரி இயக்கி உள்ளார்.
மரணத்துக்கு இறுதி அழைப்பு
வழக்கமான அலுப்பூட்டும் இணையத் தொடர்கள் மத்தியில் தத்துவம், ஆன்மிகம் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தருகிறது ‘ஜீ5’ வெளியிட்டிருக்கும் ’தி ஃபைனல் கால்’.
தனி வாழ்க்கையிலும் பணி அனுபவத்திலும் ஏராளமான ரகசியங்கள் பொதிந்த பைலட் ஒருவன், தான் பணியில் இருக்கும்போது தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிடுகிறான். மும்பையிலிருந்து சிட்னிக்கு விரையும் விமானத்தில் அவன் தொடங்கும் தற்கொலைக்கான முயற்சிகளில் விமானத்தின் துணை பைலட்கள் இருவரும் மர்மமாக இறக்கின்றனர்.
300 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் உயிர் தற்போது தற்கொலை முனையில் தயாராக இருக்கும் விமானியின் கையில் தத்தளிக்கிறது. இப்படிப் பதைபதைப்புடன் ’தி ஃபைனல் கால்’ தொடரின் முதல் அத்தியாயம் தொடங்குகிறது.
விமானத்தில் பயணிப்பவர்களில் குறிப்பிட்ட சிலரின் பின்புலக் கதைகளுடன் தற்போதைய விமானப் பயணக் காட்சிகளும் அடுத்தடுத்து வருகின்றன. மரணத்தை நோக்கிய பயணம் என்பதால் தொடர் முழுக்க மரணம் குறித்தான தத்துவ விசாரணை சுவாரசியம் சேர்க்கிறது. மெதுவாக நகரும் திரில்லருக்குப் பொருத்தமில்லாத இந்தக் காட்சிகள் போகப்போகப் பொருந்தி விடுகின்றன.
மனிதர்களின் சராசரி ஆசைகள், சக மனிதர் மீதான நேசம், உறவுகளின் உன்னதங்கள், நிராசையாகும் அபத்தங்கள், அதிகாரத்தின் பெயரிலான வன்மங்கள் இவற்றுக்கிடையே தத்தளிக்கும் மனித உணர்வுகள் என அத்தியாயம் ஒவ்வொன்றும் மனிதரின் உள்ளும் வெளியுமாக நீள்கிறது.
அர்ஜுன் ராம்பால், சாக்ஷி தன்வர், நீரஜ் கபி என அனுபவசாலிகளின் நடிப்பிலான தொடரை விஜய் லால்வானி இயக்கியுள்ளார்.முன்னோட்டத்தைக் காண
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT