Last Updated : 01 Mar, 2019 11:04 AM

 

Published : 01 Mar 2019 11:04 AM
Last Updated : 01 Mar 2019 11:04 AM

ஹாலிவுட் ஜன்னல்: ஐந்தடிக்கு அப்பால் காதலி

ஐந்தடிக்கு அப்பால் நின்று அவர்கள் காதல் வளர்க்கலாம். ஒருவரையொருவர் நெருங்கும் ஒவ்வொரு அங்குலமும் இருவரின் உயிருக்கும் ஆபத்தாகலாம். இந்தச் சூழலில் இளம் காதலர்களும் அவர்களின் காதலும் என்னவானது என்பதே ‘ஃபை ஃபீட் அபார்ட்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்.

மரபு ரீதியிலான பாதிப்பாக, நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளைப் பாதித்து வாழ்நாளை இரக்கமின்றி வரையறுக்கும் ‘சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ நோய்க்கு 17 வயதான இளம்பெண் பாதிக்கப்படுகிறாள். மரணத்துக்கு எதிரான போராட்டத்தில் அவளது பெரும்பாலான பொழுதுகள் மருத்துவமனையிலேயே கழிகின்றன. ஆனபோதும் தனக்கு விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு உற்சாகம் குறையாது வாழ்வினைக் கழிக்கிறாள். ஒரு நாள் அதே உடல்நலப் பாதிப்பு கொண்ட இளைஞனை அவள் சந்திக்கும்போது இருவரும் காதலைச் சுவாசிக்கத் தொடங்குகிறார்கள். அதன் பின்னர் உயிரின் மீதும் உயிருக்கு நிகரான காதல் மீதுமாக இருவரும் பெரும் ஆசை கொள்கிறார்கள்.

இளம் காதலர்களின் காதலர் பூங்காவாகும் மருத்துவமனை, ஒரு நிபந்தனையுடன் அவர்களின் காதலை அங்கீகரிக்கிறது. ஐந்தடி அகலத்தில் மானசீக அகழி கட்டி அவர்கள் காதல் வளர்க்க அனுமதி கிடைக்கிறது. சற்று நெருங்கினாலும் இருவரில் ஒருவரின் உடல்நலனுக்கு அது ஆபத்தாகும்.

ஆனால், அவர்களது நோய்மையும் இளமையும் வாசலுக்கு வந்துவிட்ட வாழ்வின்மையும் கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு இருவரையும் கைகோக்க ஈர்க்கிறது. படம் முழுக்க இளமைத் துள்ளலும், நிறைவில் உருக்கமான காட்சிகளுமாகக் காதலைக் கொண்டாடுகிறது ‘ஃபைவ் ஃபீட் அபார்ட்’.

படத்தின் ட்ரெய்லர் 5 ஆண்டுகளுக்கு முன் வந்த ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ படத்தை நினைவூட்டுகிறது. ஹேலி ரிச்சர்ட்சன், கோல் ஸ்ப்ரௌஸ் முதன்மைக் கதாபாத்திரங்களில் தோன்ற, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் பாதித்த சம வயது நிஜ நோயாளிகளை உடன் நடிக்க வைத்துள்ளனர். ஜஸ்டின் பல்டோனி இயக்கி உள்ள ‘ஃபைவ் ஃபீட் அபார்ட்’ மார்ச் 15 அன்று திரைக்கு வருகிறது.

ட்ரெய்லர் - https://youtu.be/5cJ7MT1RTqs

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x