Published : 22 Mar 2019 12:22 PM
Last Updated : 22 Mar 2019 12:22 PM
கே.வி.மகாதேவன் நூற்றாண்டு நிறைவு
கர்நாடக சங்கீதம் மேட்டுக்குடி இசையாகச் சுருங்கிவிட்ட 60-களில் நவீனத் தமிழ்த் திரையிசை தனது பயணத்தைத் தொடங்கியது. இந்திப் படவுலகின் இசை, ஆங்கிலப் படங்கள் வழியே இங்கே அறிமுகமான மேற்கத்திய இசை ஆகியவற்றின் தாக்கத்தை உள்வாங்கிக்கொண்டு வெளிப்பட்ட நவீனத் தமிழ்த் திரையிசையில் கர்னாட சங்கீதத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருந்த மரபின் சிறந்த தொடர்ச்சியாக கே.வி.மகாதேவனைக் காணலாம்.
தன்னை ஈன்ற கர்னாட சங்கீதத் தாயிடம் தொடர்ந்து இசைப்பால் பருகிய கே.வி.எம்., அதன் அழகுணர்ச்சி கெடாமல், ராகங்களின் பாவங்களைப் பளிச்சென்று அடையாளம் காணும்விதமாக இசையமைத்தார். அதேநேரம் காட்சி நிகழும் சூழலுக்கு ஏற்ப கதாபாத்திரம் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சியைத் துல்லியமாகவும், திரையிசைக்கே உரிய நவீனத் தன்மையைத் துணிவுடனும் மெட்டுக்களில் வெளிப்படுத்தினார்.
கர்னாட ராகங்களை நவீனத் தன்மையில் குழைத்து கே.வி.எம். செய்த மாற்றங்களை பண்டிதர்களும் பாகவதர்களும் ரசித்தார்கள். 60-களில் பல கர்னாடக சங்கீதக் கச்சேரிகளில் நேயர் விருப்பமாக கே.வி.எம்மின் ஓரிரு திரையிசைப் பாடல்களைப் பாடவும் அவர்கள் தயங்கவில்லை. புனிதமாகக் கருதப்பட்ட மேடைகளுக்குள் குளிர் தென்றலாக அவரது சில பாடல்கள் ஊடுருவியதில் ஆச்சரியமில்லை. அதுதான் இசையை எளிமைப்படுத்தித் தந்த கே.வி.மகாதேவனின் வெற்றி.
பாடல்களுக்கே மெட்டு என்பதில் அழுத்தமான நம்பிக்கை வைத்திருந்தார் கே.வி.எம்.குறைவான வாத்தியங்களைக் கையாள்வதன் மூலம், மெட்டின் தன்மையும் பாடல் வரிகளின் தன்மையும் கதையின் பயணத்தை, கதாபாத்திரங்களின் வளர்ச்சியை அவற்றின் உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். அதனால்தான் அவரை நவீனத் தமிழ்த் திரையிசையின் முன்னோடி என வரையறுக்க முடிகிறது.
நவீனத்தின் தொடக்கம்
தற்காலத் திரையிசைப் பாடல்கள் பெரும்பான்மையும் திரைக்கதையின் வீக்கமாக வெளியே துருத்திக்கொண்டு நிற்பவை. ஆனால், கே.வி.மகாதேவன் புகழின் உச்சியைத் தொட்டுவிட்ட அறுபதுகளின் கறுப்பு வெள்ளை சமூகப் படங்களில், கதையைச் சுமந்துசெல்லும் முக்கிய அங்கமாகப் பாடல்கள் இருந்தன. கதாபாத்திரங்களின் மனவோட்டத்தை மட்டுமல்ல; அவை எடுத்த, எடுக்கவிருக்கும் முடிவுகளையும் தேர்ந்துகொண்ட திசைகளையும் வரிகள், இசை வழியே பளிச்சென்று வெளிப்படுத்த வேண்டிய ‘தீம்’ தன்மையைக் கொண்டிருந்தன.
அவ்வாறு இசையமைக்கும் ஜாலம் வசப்பட்டிருக்க வேண்டியது நவீனத் திரையிசையில் சாதிக்க அவசியத் தகுதியாக இருந்தது. அதில் தலைசிறந்து விளங்கிய ‘திரையிசை வித்தகர்’ என கே.வி.எம்மைத் திட்டவட்டமாகக் கூறிவிடலாம். காரணம், கர்னாடக இசை ஞானம் கொண்டிருந்த மேட்டுக்குடி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாமர ரசிகர்களும் உணர்ந்து, புரிந்து ரசிக்கும் வகையில் கர்னாட இசை ராகங்களின் சுர அழகுணர்ச்சியைத் தன் பாடல்களில் வெகுஜனப்படுத்திய முதல் இசையமைப்பாளர்.
50-களின் இறுதிவரை கர்னாட சங்கீத ராகங்களில் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படாமல், அவற்றுக்குரிய ‘ப்யூர்’ தன்மையுடன் திரையிசையில் கையாளப்பட்டன. 60-களிலும் சில படங்களில் இது தொடர்ந்தது. ஏன், கே.வி.மகாதேவனே அதுபோல இசையமைத்திருக்கிறார்.
‘முதலாளி’ (1957) படத்துக்காக ஆரபி ராகத்தில் அவர் மெட்டமைத்து, டி.எம்.சௌந்தரராஜன் பாடிய ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’பாடல் ஒரு சிறந்த உதாரணம். அந்தப் பாடலில் கதாநாயகனின் உணர்ச்சியாக வெளிப்பட வேண்டிய கிண்டல் தன்மை மருந்தாகவும் ஆரபி ராகத்தின் சுர வரிசையை முழுவதும் கௌரவம் செய்ததன் மூலம், கர்னாட இசை ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கும்.
அதே மகாதேவன், ‘தில்லானா மோகனாம்பாள்’ (1968) படத்துக்காக ஷண்முகப்ரியா ராகத்தில் இசையமைத்த ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?’ பாடலைப் பாருங்கள். அதில் ராகத்தின் ஆளுமையைவிட, நாயகனைப் பார்த்து நாயகி கேட்பதில் வெளிப்படும் காதலின் குறும்பே அதிகமாய் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதே படத்தில், கத்திக் குத்துப்பட்ட நாயகனை மீண்டும் சந்திக்கும்போது ‘நலந்தானா… உடலும் உள்ளமும் நலந்தானா?” எனப் பொது மேடையில் யாருக்கும் தெரியாமல் நாயகி, நாயகனை நலம் விசாரிக்கிறாள். அந்தப் பாடலில் எடுத்தாளப்பட்ட ‘நீலமணி’ ராகத்தின் சாயலை நிழலாக மட்டுமே வைத்துக்கொண்டு, நாயகனைப் பிரிந்த துயரின் ஆற்றாமையை, அவனை மனத்தில் இருத்தியிருக்கும் தன் காதலின் உள்ளக் கிடக்கையை மெட்டில் நர்த்தனம் ஆடவிடுகிறார்.
இசையையும் நடனத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்தில், காதலின் கூடல் ஊடலில் பிறக்கும் உணர்ச்சி வண்ணங்களை எத்தனை நவீனத் தன்மையோடு இசையில் கொண்டுவந்திருக்கிறார் இந்த இசையின் மகாதேவன்! இவரது திரையிசைப் பயணம் 40-களின் இறுதியிலேயே தொடங்கிவிட்டாலும் 60-கள் முதல் இவர் தரத் தொடங்கிய அறுவடையே நவீனத்தின் தொடக்கம்.
மறக்க முடியாத பாடல்கள்
திரையில் திராவிட இயக்கம் ஒரு பக்கம் எழுச்சி பெற்றுவர, மறுபக்கம் அதை மீறி நின்றது பக்தி இயக்கம். இந்த இரண்டுக்கும் இடையில் சமூகப் படங்களும் போட்டிக்குவர கே.வி.மகாதேவனின் காலம் பொற்காலமாக அமைந்துபோனது.
கர்னாட இசையின் ஆதிக்கம் சற்று அதிகமாகத் தேவைப்படுகிற பக்திப் படங்கள், மெல்லிசைக்காகக் காத்திருக்கும் சமூகப் படங்கள், நாட்டுப்புற இசையைக் கோரும் கிராமிய வாழ்வைச் சித்தரிக்கும் படங்கள் என கே.வி.மகாதேவன் இசையமைத்த மறக்க முடியாத படங்கள், பாடல்களின் வகைகளைப் பட்டியலுக்குள் அடக்க முடியாதுதான்.
‘கர்னாட இசையின் ஆகிருதியை, பக்தியின் விஸ்வரூபமாகத் திரையிசையில் அவர் விளங்கச் செய்த வகைமையில் ‘சம்பூர்ண ராமாயணம்’ (1958), ‘திருவிளையாடல்’ (1965), திருவருட்செல்வர்’ (1967) ஆகிய மூன்று படங்கள் போதும். ‘மக்களைப் பெற்ற மகராசி’யில் இடம்பெற்ற (1957) ‘மணப்பாறை மாடு கட்டி’ பாடல் ஏர் உழுது கிளரும்போது காற்றில் பரவும் மண் வாசனையை, உழைப்பின் வாசனையை நுகர வைத்த பாடல்.
அதே படத்தில் ஒலித்த ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?’ காதலின் கண்ணியத்தைக் காதுகள் சில்லிட மனங்களுக்குள் கடத்தியது. காதல் எனும் உணர்வுக்கு மகாதேவன் செய்த கௌரவம் கணக்கில் அடங்காதது. ‘சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய்’ – (தாய் சொல்லைத் தட்டாதே-1961), ‘நதி எங்கே போகிறது?’ - ( இருவர் உள்ளம் -1963) ‘பார்த்தேன் சிரித்தேன்’ - (வீர அபிமன்யு) எனத் தொடரும் பெரும் பட்டியலில் ‘வசந்தமாளிகை’ (1972) காதலின் இசை மாளிகையாக நின்றுகொண்டிருக்கிறது.
திரையிசைத் திலகம்
தனது முன்னோடி இசையமைப்பாளரான ஜி.ராமநாதனைப் பின்பற்றி கர்னாட சங்கீத ராகங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் பாடல்களைத் திரையிசைக்குக் கொடுத்த மகாதேவன் ‘திரையிசைத் திலகம்’ என முடிசூட்டப்பட்டது, திரையிசையில் செய்த நவீனத்துவத்துக்காகத்தான். கே.வி.எம். 100 படங்களை நெருங்கிவிட்டிருந்த தருணத்தில் ஒய்.ஜி.பார்த்தசாரதி தலைமையேற்று நடத்திவந்த நேஷனல் ஆர்ட்ஸ் கம்பைன்ஸ் சென்னை அண்ணாமலை மன்றத்தில் அவருக்கு விழா எடுத்து ‘திரையிசைத் திலகம்’ பட்டத்தை வழங்கியது.
சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி எனத் திரைப்பிரபலங்கள் குவிந்திருந்த நிகழ்வில் தனக்கே உரிய அடக்கத்துடன் தான் இசையமைத்த பாடல்கள் பலவற்றை மேடையில் தனது குழுவினருடன் இசைத்தார் கே.வி.மகாதேவன்.
அவரது வெற்றியின் பின்னணியில் கர்னாடக சங்கீத ஞானம் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. அனைவரையும் ஒன்றே போல் ஒரே குடும்பமாகக் கொண்டாடும் பாரபட்சமற்ற பேரன்பு அவரிடம் இருந்தது. அந்த அன்பால் விளைந்த பணிவும் கருணையும் மனிதாபிமானமும் அவரைப் பேராசை இல்லாத கலைக்காக வாழ்ந்த கலைஞராக ஆக்கின.
ஏ.பி.நாகராஜன் ‘மாமா’ என அன்புடன் அழைத்துத் தொடங்கிவைத்த வழக்கத்தைப் பின்பற்றி எம்.ஜி.ஆர். என்.டி.ஆர், சிவாஜி கணேசன் என உச்சம் தொட்ட கலைஞர்களும் அவரைத் தங்கள் உறவினராகக் கொண்டாடினார்கள். உண்மைதான் கர்னாடக இசையைச் சகோதரியாகவும் திரையிசையைச் சகோதரனாகவும் கொண்டால் அந்த உறவு அறுந்துவிடாமல் பார்த்துக்கொண்ட தமிழ்த் திரையிசையின் மரியாதைக்குரிய தாய்மாமன் கே.வி.மகாதேவன். இவரால் கர்னாட இசைக்கும் நவீனத் திரையிசைக்குமான தொப்புள்கொடி உறவு என்றைக்கும் தொட்டுத் தொடரும்.
நன்றி: ஏ.சங்கரன் மற்றும் குழுவினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT