Last Updated : 28 Mar, 2019 07:30 PM

 

Published : 28 Mar 2019 07:30 PM
Last Updated : 28 Mar 2019 07:30 PM

திரைவிழா முத்துக்கள்: மன்னிக்கவோ.. பழிவாங்கவோ?! - கில்லிங் ஜீசஸ் (கொலம்பியா)

உள்நாட்டுப் போர்களும் கலவரங்களும் லத்தின் அமெரிக்கத் தேசமான கொலம்பியாவைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பதம்பார்த்துவருகின்றன. இதில் தன்னுடைய கணவனை, சகோதரனை, தந்தையை இழந்த கொலம்பியப் பெண்கள் அநேகர். அவர்களில் ஒருவர்தான் லாரா மோரா. முற்போக்குவாதியான லாராவுடைய தந்தை கொலம்பியாவின் மதக் கும்பலால் 2002-ல் கொல்லப்பட்டபோது லாராவுக்கு 22 வயது. அப்போது அவர் திரைப்படக் கல்லூரி மாணவி.

வர்க்கரீதியான ஏற்றத் தாழ்வும் மதவாதமும் பிடித்தாட்டும் சமூகத்தில் சமநீதி கோரிய தன்னுடைய தந்தை கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் லாராவை ஆழமாகப் பாதித்தது. எழுத்தில் நாட்டம் கொண்ட அவரால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆறாண்டுகள் எதுவுமே எழுத முடியாமல் போனது.

விழித்தெழுந்த தருணம்

ஒரு நாள் லாராவுக்கு ஒரு கனவு. இளைஞன் ஒருவன் மலை உச்சியில் உட்கார்ந்திருக்கிறான். அவன் லாராவின் அருகில் வந்து, “என் பெயர் ஜீசஸ். நான்தான் உன்னுடைய தந்தையைக் கொன்றேன்” என்கிறான். திடுக்கிட்டு விழித்தெழுகிறார் லாரா. தன்னுடைய கனவில் தோன்றிய இளைஞனைக் கற்பனைக் கதாபாத்திரமாக மாற்றி அன்றிரவே ஒரு கதையை எழுதத் தொடங்குகிறார்.

தன்னுடைய இடத்தில் பாவ்லா கதாபாத்திரத்தைப் பொருத்துகிறார். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் எழுதப்பட்ட அந்தக் கதை 2017-ல் ‘கில்லிங் ஜீசஸ்’ (Killing Jesus) படமாக உருவெடுத்தது. 91-ம் ஆஸ்கார் விருதுகளுக்குச் சிறந்த அயல்நாட்டு மொழி படப் பிரிவில் கொலம்பியா சார்பாகப் பரிந்துரைக்கப்பட்ட படம்.

படத்தில், ஒளிப்படக் கலை மாணவி பாவ்லா. கொலம்பியாவின் அரசியல், சமூகப் பிரச்சினைகள் குறித்துத் தீவிரமாக எதிர்ப்புக் குரல் எழுப்பும் மாணவர் சங்க உறுப்பினர். சாயம்போன டீ-ஷர்ட், பழைய ஜீன்ஸ் பேண்ட், இடுப்புவரை நீண்டு விரித்த கூந்தல், முகத்தைப் பாதி மறைக்கும் தொப்பி சகிதமாக இருக்கும் அவள், எதிர்ப்பு மனோபாவத்தின் ரூபமாகவே காட்சியளிக்கிறாள். அவளுடைய தந்தை பல்கலைக்கழகத்தில் அரசியல் துறைப் பேராசிரியர்.

ஜீசஸைக் கொல்லத் திட்டம்

தந்தையோடு காரில் பேசிக்கொண்டே அவரை ஒளிப்படம் எடுக்கப்போவதாக விளையாடிக்கொண்டே வருகிறாள் பாவ்லா. காரை நிறுத்தி அவர் மட்டும் இறங்குகிறார். நொடிப்பொழுதில் அடையாளம் தெரியாத நபரால் அவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். சுட்டவன் முகத்தையும் அவன் மோட்டார் பைக்கையும் பாவ்லா காரில் இருந்தபடி பார்த்துவிடுகிறாள்.

காவல்துறையில் பாவ்லாவும் அவளுடைய அண்ணனும் புகார் அளித்தும் பயனில்லை. அவர்களுடைய மெத்தனமும் ஊழல் மலிந்த அணுகுமுறையும் பாவ்லாவை வெறிகொள்ளச் செய்கின்றன. தன் தந்தையைக் கொன்றவனைத் தானே பழிவாங்க முடிவெடுக்கிறாள்.

மாதக்கணக்கில் எங்கெங்கோ கொலைகாரனைத் தேடி அலைகிறாள். இரவு கேளிக்கை கிளப் ஒன்றில் அவன் குடிபோதையில் ஆடிக்கொண்டிருக்கும்போது பார்த்துவிடுகிறாள். இளைஞனான அவனும் இவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டுப் பழக எத்தனிக்கிறான். அவனுடன் நெருங்கிப் பழகிப் பழிவாங்க முடிவெடுக்கிறாள்.

அவனைக் கொல்லக் கள்ளத் துப்பாகி வாங்க முயன்று முடியாமல் போகிறது. பிறகு அவனே துப்பாக்கி வாங்கவும் சுடவும் கற்றுக்கொடுக்கிறான். இளம் வயதிலேயே கூலிப்படையாக மாற்றப்பட்டிருக்கும் அவனுடைய வாழ்க்கை பாவ்லாவுக்குப் புரியத் தொடங்குகிறது. அவனை மன்னிக்கவும் முடியாமல் பழிவாங்கவும் முடியாமல் அல்லல்படுகிறாள். ஜீசஸ் கொல்லப்பட்டானா இல்லையா என்பதை அழகியலோடும் பரபரப்பான காட்சிகளோடும் தத்துவார்த்தமாகவும் படம் பேசுகிறது.

வலி நிவாரணி

‘கில்லிங் ஜீசஸ்’ சுயசரிதையின் பக்கங்களோடு கற்பனையும் சேர்த்து உருவாக்கப்பட்ட படைப்பு. ‘பயோ பிக்’ என்ற வகைமையில் இருந்து வேறொரு ரூபத்தைப் படம் எப்போது எடுக்கிறது என்றால், தன்னுடைய தந்தையைக் கொன்றவரை இதுவரை இயக்குநர் லாரா மோரா சந்திக்கவில்லை. ஆனால், ‘கில்லிங் ஜீசஸ்’ கதாநாயகி அவனைத் தேடிக் கண்டடைந்து அவனுடன் பழகுகிறாள்.

உலக வரலாற்றில் மதத்துக்கும் வன்முறைக்கும் இடையிலான சங்கிலித் தொடரை ‘ஜீசஸ்’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் படம் நுட்பமாக உணர்த்துகிறது. பாதிப்பு ஏற்படுத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் உள்ள உறவைத் தனிமனித உணர்ச்சிப் போராட்டமாக மட்டுமல்லாமல் சமூக அரசியல் கோணத்தில் பார்க்க வேண்டிய அவசியத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது. ஓர் உன்னதக் கலைப் படைப்பு தனக்கு மட்டுமல்ல இழப்பின் வலியில் வாடும் அத்தனை இதயங்களுக்கும் வலி நிவாரணியாக முடியும் என்பதற்கு திரைமொழியில் ஒரு சாட்சி இந்த ‘கில்லிங் ஜீசஸ்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x