Published : 22 Feb 2019 10:59 AM
Last Updated : 22 Feb 2019 10:59 AM
புதுமையான கதைக் களங்களில், அழுத்தமான சம்பவங்களுடன் படங்களைத் தருவதில் தனித்துக் கவனிக்க வைப்பவர் இயக்குநர் ஆர்.கண்ணன். விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற ஆறு படங்களை இயக்கியிருக்கும் இவர், தற்போது அதர்வா முரளி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘பூமராங்’ படத்தை எழுதி, இயக்கித் தயாரித்திருக்கிறார். அவரிடம் உரையாடியதிலிருந்து…
‘பூமராங்’ என்ற தலைப்பே தாக்குகிறதே?
18-ம் நூற்றாண்டில் தமிழர்கள் கண்டுபிடித்த ஆயுதம்தான் பூமராங். அதற்கு வளரி என்று பெயரிட்டார்கள். பூமராங், எதிரியைப் போய்த் தாக்கிவிட்டு, பயன்படுத்தியவரின் கைக்கே திரும்ப வந்துவிடும். அப்படியொரு தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள் நம் முன்னோர்கள். பூமராங் என்பதிலிருந்து அந்த ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில், விதியின் தத்துவத்தைப் பொருத்தி இந்தத் திரைக்கதையை எழுதியிருக்கிறேன்.
நாம் நல்லதுசெய்தால், அது எந்த விதத்திலாவது நம்மைக் காப்பாற்றும். அதேபோல மற்றவர்களுக்குத் தீங்கு செய்துவிட்டு நன்றாக வாழ்ந்திட முடியாது. நீங்கள் செய்த தீமை, என்றைக்காவது ஒருநாள் வேறு ரூபத்தில் வந்து உங்களைத் தாக்கும். படத்தின் தலைப்புக்கான விளக்கமாகக் கதை இருந்தாலும், திரைக்கதையில் இன்றைய முக்கியப் பிரச்சினை ஒன்றைக் கையாண்டிருக்கிறேன்.
இன்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கும் படிக்காமல் பணத்தில் புரளும் அரசியல்வாதிகளுக்குமான முரணைப் பேசியது உங்களின் ‘இவன் தந்திரன்’. ‘பூமராங்’ படமும் சமூகப் பிரச்சினை எனும்போது அது எப்படி வேறுபடுகிறது?
‘இவன் தந்திர’னைவிட ஒருபடி மேலே போய், இயற்கை இலவசமாகத் தருகிற தண்ணீருக்காகவும் காற்றுக்காகவும் நாம் போராட வேண்டிய நிலைமை வந்திருக்கிறது என்பதை யார் மனத்தையும் புண்படுத்தாமல் மிக அழகாக இதில் சொல்லியிருக்கிறேன். ‘இவன் தந்திர’னாக இருந்தாலும் சரி, ‘பூமராங்’ படமாக இருந்தாலும் சரி, இன்றைய வெற்றியோடு ஒரு திரைப்படம் நின்றுவிடக் கூடாது என்று நினைக்கிறேன்.
இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தப் படங்களைப் பார்க்கும் அடுத்த தலைமுறையினருக்கு, ‘ஓ அந்தக் காலகட்டத்தில் இன்ஜினீயரிங் படித்த மாணவர்களுக்கு இவ்வளவு நடந்திருக்கிறதா?” என்று எண்ணிப் பார்க்கிற காலப் பெட்டகமாக இந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வெறும் காதல் படங்களிடம் இந்தத் தகுதியை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
அதர்வா என்ன மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்?
அதர்வா மென்பொருள் துறையால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனாக வருகிறார். மென்பொருள் துறையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிழிந்து எடுத்து வேலை வாங்கிவிட்டு, ஆயிரம் பேர், ஐந்நூறு பேர் என்று புராஜெக்ட் முடிந்ததும் கறிவேப்பிலை மாதிரி தூக்கிப்போட்டு விடுவார்கள். அவர்களுக்குப் பதிலாக, வேலைக்காக அல்லாடிக்கொண்டிருக்கும் புதிய பட்டதாரிகளை எடுத்துக்கொள்வார்கள்.
எக்ஸ்பீரியன்ஸ் உடையவர்களை வேலையில் வைத்திருந்தால் இன்னும் அதிகச் சம்பளம் தரவேண்டியிருக்கும் என்பதுதான் இதற்குக் காரணம். இப்படித் தூக்கிவீசப்பட்ட மூன்று இளைஞர்கள், இனிமேல் இந்த வெள்ளைக்கார நிறுவனங்களுக்கு கூஜா தூக்குவதில்லை என்று முடிவெடுத்த பின்பு அவர்கள் மூவரும் கையிலெடுக்கும் ஆயுதம் என்ன, அவர்களுக்கு அதர்வா எப்படித் தலைமை வகிக்கிறார் என்ற விதத்தில் அவரது கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறேன்.
இந்தக் கதாபாத்திரத்துக்கு அதர்வா கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நடிப்பு, ஆக்ஷன் காட்சிகள் இரண்டிலுமே ரசிகர்களைக் கவர்வார். இரண்டு கதாநாயகிகளும் கதாபாத்திரங்களாக நம் மனத்தில் அழுந்தப் பதிந்துவிடுவார்கள்.
உங்கள் படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏன் இவ்வளவு சிரத்தை எடுக்கிறீர்கள்?
காதல் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் திரைக்கதையில் சரியான சூழ்நிலையில் சரியான இடத்தில் இடம்பெற்றால்தான் அது ரசிகர்களைக் கவரும். இந்த இரண்டு அம்சங்களும் திணிப்பாகவோ மிகையாகவோ இருக்கவே கூடாது. ‘பூமராங்’கில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் இன்றைய இளைஞர்களின் கோபமாக வெளிப்பட்டிருக்குமே தவிர, ஒரு ஹீரோவின் சண்டையாக இருக்காது.
ட்ரைலரில் தீக்காயத்தால் வெந்து உருக்குலைந்த கதாநாயகனின் முகம் வந்து செல்கிறது… அதுதான் படத்தின் கிளைமாக்ஸா?
கதை தொடங்குவதற்கான ஒரு சின்ன புள்ளிதான் அந்தக் காட்சி. அதைப் பற்றி விரிவாகச் சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். பாதிக்கப்படுவது நாயகனா மற்றொரு முதன்மைக் கதாபாத்திரமா என்பதும் இப்போது புதிராகவே இருக்கட்டுமே.
படத்தை முடித்த பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் குரு மணிரத்னத்துக்குத் திரையிட்டுக் காட்டுவீர்களா?
மணி சார் பிரிவியூ காட்சி பார்ப்பதைவிடப் பார்வையாளர்களுடன் அமர்ந்து படம் பார்க்க விரும்புவார். படத்தொகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது மட்டும்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தால் கருத்துச் சொல்வார். திரையரங்கு வந்தபிறகு பார்த்துவிட்டு கருத்து சொல்ல மாட்டார். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அவரது முகம் அவரது திரை அனுபவத்தைச் சொல்லிவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT