Published : 15 Feb 2019 10:51 AM
Last Updated : 15 Feb 2019 10:51 AM

தரைக்கு வந்த தாரகை: இதுதான் பானுமதி ஸ்டைல்!

அக்காக் குருவியின் கூவல் மட்டுமே கேட்கும் அமைதியான பாண்டி பஜார் வைத்தியராமன் தெரு. பழைய நினைவுகளில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்சிதரும் பானுமதியின் பங்களா. தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஒரு பிற்பகல்.

எனக்கு முன்னால் பானுமதி உட்கார்ந்திருக்கிறார். திரையில் வரும் நிழல் பானுமதி அல்ல; நிஜ பானுமதி!

பணிப்பெண் அவருக்கு முன்னால் ஒரு கோப்பைப் பழச்சாறும் எனக்கு காபியும் கொண்டுவந்து வைத்தார்.

“வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று சினிமா. மற்றொன்று காபி” என்றார் பானுமதி.

திரையில் ஜொலிக்கிற நட்சத்திரமாய் நின்றுவிடாமல் சாதாரண மனுஷியாகத் தனது நினைவுகளையும் அனுபவங்களையும் கள்ளம் கபடற்ற குழந்தைபோல சொல்லிக்கொண்டு போவது பானுமதியின் சுபாவம்.

வானில் மின்னும் நட்சத்திரமாய் அவர் வாழ விரும்பவில்லை.

“நான் நடிக்க விரும்பவில்லை. அப்பாவின் வற்புறுத்தலால் நடித்தேன். வேண்டா வெறுப்பாக நடித்ததால் என் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் ஒரு அலட்சியம் வந்துவிட்டது. நான் காட்டிய இந்த அலட்சியம், விலகல்தான் என்னுடைய பாணி என்றார்கள். பானுமதி ஸ்டைல். இது ரொம்ப நல்லா இருக்குன்னு எல்லோரும் புகழ ஆரம்பிச்சாங்க. என்னடா இது வம்பாப் போச்சேன்னு நினைச்சேன்.

இதுதான் என் வாழ்க்கையின் மிகப் பெரிய க்ருயல் ஜோக்! எத்தனையோ சோதனைகளை வாழ்வில் தாண்டி வந்துவிட்டேன். அந்த முறையில் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். நாம எல்லோரும் ஆத்ம பரிசோதனை பண்ணிக்கணும். நாம யாரு? எதுக்காக வந்தோம்? என்ன செய்துகிட்டிருக்கோம்? அப்படீன்னு யோசிக்கணும். பணம், புகழ்னு அலையறதைவிட இது முக்கியம்.

இதுல கவனமிருந்தா, மனதைத் தத்துவ விசாரத்தில் பிலாஸபிகலாக வைத்துக்கொண்டால் மத்தது தானாகவரும்! நான் அப்படித்தான் செய்தேன்! புகழை உதாசீனப்படுத்தினேன்.. தானா வந்தது! பணத்தை வேண்டாம்னு தள்ளினேன்... அதுவா வந்து சேர்ந்தது.

இப்படியான தத்துவப் பார்வையே அவரை வானத்தில் மிதக்காமல் தரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. புகழின் பிரகாசத்தைப் பொருட்படுத்தாமல் செய்தது. தரைக்கு வந்த தாரகையாய் அவரை ஆக்கியது!

எழுத மறந்தேன்

பானுமதி நீண்ட நேரம் தியானத்தில் செலவழிப்பார். நான் குறிப்புப் புத்தகமும் கையுமாகக் காத்திருப்பேன். அவர் மிகச் சிறந்த நடிகையாக, இயக்குநராக, பாடகியாக, எழுத்தாளராக, கல்வியாளராக எல்லோருக்கும் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால், அவர் மிகச் சிறந்த கதைசொல்லியாக எனக்கு அனுபவம் ஆனார்.

எந்தச் சம்பவம் ஆனாலும் அதை அப்படியே உட்கார்ந்தபடியே தத்ரூபமாக நடித்தபடி கதைசொல்வதில் அவருக்கு ஈடுஇணை இல்லை. அவருக்கு முன்னால் கண்ணுக்குத் தெரியாத கேமரா ஒன்று நிரந்தரமாக இருப்பதாக நினைத்துக்கொள்வார் போலும். சில நேரம் நான் எழுதுவதை மறந்து அவர் பேச்சில் லயித்துவிடுவேன்.

“ரொம்ப நேரமா நீங்கள் எதுவுமே எழுதாமல் என்னையே பார்த்துகிட்டு இருக்கீங்க” என்று கிண்டலாகச் சிரிப்பார் பானுமதி. ஆனால், அவர் பேசுவது என் மனத்தில் ரிக்கார்டு ஆகிக்கொண்டுதான் இருக்கும். இது அவருக்கும் தெரியும்.

பள்ளிக்கூடம் வேண்டாம்

“சொல்லுங்கள் எங்கே இருந்து ஆரம்பிக்கலாம்?”

“உங்கள் பள்ளிக்கூட அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்!”

“சின்ன வயசிலிருந்தே எனக்கு எதைக் கேட்டாலும் சட்டென்று மனப்பாடம் ஆகிவிடும்! புராணக் கதைகளைக் கேட்பதிலும், சுலோகங்களைச் சொல்வதிலும் நான் காட்டிய ஆர்வத்தைப் பார்த்துவிட்டுப் பள்ளிப் படிப்பிலும் நான் சிறந்து விளங்குவேன் என்று அப்பா நினைத்தார். வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பள்ளிக்கூடத்தில் என்னை சேர்த்துவிட்டார்...”

“எப்படிம்மா இருக்கு பள்ளிக்கூடம்?”

“எனக்குப் பள்ளிக்கூடம் வேண்டாம்!” என்றேன் அழுத்தம் திருத்தமாக.

“அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் என்றால் ஞாபகம் வருவது கையில் பிரம்பும் கடுகடுமுகமுமாகப் பயமுறுத்தும் வாத்தியார்கள். இப்போதுபோல் தன்னைவிட அதிக எடையுள்ள பாடப் புத்தகப் பைகளைச் சுமக்க வேண்டாம். கையில் ஒரு சிலேட்டு, ஒண்ணு, ரெண்டு நோட்டு புஸ்தகம் அவ்வளவுதான். மத்தபடி சிலேட்டுகளின் ராஜ்யம்தான்!”

எங்கள் ஊரிலிருந்த பள்ளிக்கூடத்தில் ரங்கையா பந்துலு என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அப்பா என்னைப் பள்ளிக் கூடத்துக்குள் அழைத்துச்சென்றபோது ரங்கையா பந்துலு ஒரு மாணவனைப் பிரம்பால் விளாசிக்கொண்டிருந்தார். அந்த மாணவன் கதறியதைப் பார்த்துவிட்டுதான் சொன்னேன்.

“எனக்கு இந்தப் பள்ளிக்கூடம் வேண்டாம்!” அப்பா நான் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், என்னைக் கட்டாயப் படுத்திப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டார். ரங்கையா பந்துலு பொடியை உறிஞ்சினார். கையில் பிரம்பு.

“பயப்படாதே அம்மா, நம்ம ரங்கையா பந்துலு ரொம்ப நல்லவர். பெண் குழந்தைகளை அடிக்க மாட்டார். என்ன ரங்கையா. நான் சொல்வது சரிதானே? அது மட்டுமல்ல; என் குழந்தை ரொம்ப புத்திசாலி” என்றார் அப்பா.

பொடியை உறிஞ்சியபடி அப்பா சொன்னதை ஆமோதித்தார் ரங்கையா.

நான் வரும்போது அடிவாங்கிக்கொண்டிருந்த பையன், இன்னும் அழுதுகொண்டிருந்தான். பெப்பர்மின்ட் தின்பண்டங்கள் எல்லாம் கொடுத்து அவனைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கொடுப்பதை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே அழுதான் அவன். கூல்டிரிங்ஸ் வந்தது. அதையும் வாங்கிக் குடித்துவிட்டு மறுபடி அழத் தொடங்கினான்.

வாத்தியார் ரங்கையா பந்துலுவுக்குக் குரு தட்சணையாக மாணவர்கள் வீட்டிலிருந்து தினமும் ஏதாவது பட்சணங்கள் கொண்டுவர வேண்டும். ‘நான் கேட்டேன் என்று வீட்டில் சொல்லக் கூடாது’ என்று மிரட்டி வைத்திருந்தார். அவர், பிள்ளைகளைப் பார்த்து, ‘நாலணா, எட்டணா கையில் வைத்திருந்தால் என்னிடம் கொடுத்திடணும். அப்பதான் படிப்பு வரும்’ என்றபோது நான் தலையாட்டினேன்.

‘போ போய் மத்த குழந்தைகளோட உட்கார்’ என்றார். நான் போய் உட்கார்ந்ததும் வகுப்பில் இருந்த குழந்தைகள் என்னை விசித்திரமாகப் பார்த்தன. நான் போட்டிருந்த பட்டுச் சொக்காயை வைத்த கண் வாங்காமல் பார்த்தன.

ஒரு பையன் என்னைப் பார்த்து கன்னத்தை உப்பிக்காட்டினான். என் கன்னம் உப்பி இருப்பதைக் கிண்டல் செய்தான். எல்லாக் குழந்தைகளும் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தன.” பானுமதி தனது பள்ளிநாட்களுக்கே சென்றுவிட, முதுமை இழையோடிய அவரது முகத்திலும் குழந்தைமையின் குறுகுறுப்பு ஒளிர்ந்ததைக் கண்டேன்.
 

bhanumathi-2jpg

கவிதை நடையால் கட்டிப்போடும் காவியக்காரர்கள் வாழும் தமிழ்நாட்டில், உரைநடையால் உங்களைச் சிறைவைப்பேன் எனக் கட்டியம் கூறி வாழ்பவர் தஞ்சாவூர்க் கவிராயர். பல்வேறு தளங்களில், பல்வேறு உணர்வுகளில் பல்வேறு பொருள்களில் பயணிப்பவை இவருடைய கட்டுரைகள். பனிக்கட்டியும் இனிப்பும் சேர்ந்த இவரது மொழியின் கலவையுடன் வார்த்தைச் சிக்கனமும் வசீகரிக்கும்.

கறுப்பு வெள்ளை சினிமா யுகத்தின் கதாநாயகிகளில் தனிப்பெரும் சாதனையாளர் பானுமதி. நடிப்பின்போது வசனங்களைப் படிப்பதைவிட, நடிப்பற்ற மனித மகத்துவத்தைப் படிக்க விரும்பியவர். சாந்தம் மீட்டும் சங்கீதக் குரலில் அவர் எடுத்துச் சொன்ன, எண்ணற்ற வாழ்க்கைச் சம்பவங்கள், தஞ்சாவூர்க் கவிராயரின் நளினத் தமிழில் ரசனைப் பயணத்தைத் தொடங்குகின்றன.

 

(தாரகை ஜொலிக்கும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x