Published : 01 Feb 2019 09:44 AM
Last Updated : 01 Feb 2019 09:44 AM
அவ்வப்போது புதிய முயற்சிகள் தமிழ் சினிமாவில் நடப்பதுண்டு. எதிர்மறை விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தும் அதற்காக ஓடி ஒளிந்துவிடாமல் ‘சிம்பா’வை துணிந்து முயற்சித்துப் பார்த்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அவர் தந்திருப்பது தமிழ் சினிமாவுக்கான முதல் ‘ஸ்டோனர்’ வகைத் திரைப்படம். கஞ்சா போன்ற புகைக்கும் போதைப்பொருளின் பிடியில் சிக்கி அல்லாடும் மனிதர்களின் மாயத் தோற்றங்கள் நிறைந்த உலகையும் போதை களைந்ததும் விரியும் நிஜவாழ்வில் ஊடாடும் அவர்களது ஏக்கங்கள், துக்கங்கள், இயலாமைகள், கனவுகள், குற்றங்களைச் சித்தரிக்கும் படங்கள் அவை.
போதைப் புகையின் மடியில் தன் தனிமையைப் போக்கிக்கொள்ளும் ஒரு பணக்கார இளைஞன் மகேஷ். விவாகரத்துக்குப் பின்னான இரண்டு ஆண்டுகளின் தனிமையின் வெறுமையை தத்தெடுத்துக்கொண்ட ஒரு குழந்தை வழியாகப் போக்கிக் கொள்கிறாள் அவனது பக்கத்து வீட்டுக்குக் குடிவரும் பெண்ணான மது. அது மனிதக் குழந்தை அல்ல; ஒரு நாய்க்குட்டி. அதற்கு சிம்பா என்று பெயர் வைத்து உருகும் பேரழகி அவள். தற்போது இரண்டு வயதுகொண்ட முழு நாயாக வளர்ந்து நிற்கும் சிம்பாவை, வெளியூர் செல்லும் வேளையில் ஒருநாள் பார்த்துக்கொள்ளும்படி மகேஷிடம் விட்டுச் செல்கிறாள்.
ஸ்டோனர் உலகில் வாழும் மகேஷுக்கு, மது விட்டுச் செல்லும் அவளது நாய் மனித உருவில் தெரிகிறது. சிம்பாவுடன் உரையாடத் தொடங்குகிறான். சிம்பாவும் அவனுடன் உரையாடுகிறது. இருவருக்குமான உரையாடலில் பிறக்கும் நேசமும், மகேஷின் காதல், சிம்பாவின் காதல், அதற்கான இருத்தலியல் பிரச்சினை என விரிந்து செல்கிறது கதை. தனிமையிலிருந்து விடுபட, போதையில் சிக்கிக்கொண்ட நாயகன், அதை உதறித்தள்ளிக் காதலை வென்றெடுக்கத் துடிக்கிறான். அவனது துடிப்பில் சிம்மாவின் பங்கேற்பும் பங்களிப்பும் என்ன என்பதுதான் திரைக்கதை.
புகைபோதை இளைஞனின் பார்வைக்கு ஒரு நாய் மனிதனாகத் தெரிகிறது சரி; ஆனால் அவனது பார்வை கோணம் அல்லாத காட்சிகளிலும் அது மனித உருவத்துடன் காட்டப்பட வேண்டுமா என்ற தர்க்கப் பிழையை யோசித்துக்கொண்டிருக்கும்போதே காட்சிகளில் அதிரும் அடல்ட் நகைச்சுவை சரவெடியால் திரையரங்கம் அதிர்கிறது.
அந்தத் தர்க்கப் பிழை பற்றிய எண்ணத்தை மறக்கடிக்கின்றன அடுத்தடுத்த காட்சிகளின் வேகமான நகர்வுகள். படத்தின் இறுதியில் மகேஷுக்கும் சிம்பா மனித உருவிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல நாயாகவே தெரியத்தொடங்கும் காட்சியில் காதலுக்காக தன்னை மாற்றிக்கொள்ள முன்வரும் அவனது முனைப்பின் தொடக்கத்தைச் சித்தரிக்கவே அந்தப் பிழையை சரியாகப் பயன்படுத்தியிருப்பதை கூறி நெகிழ வைத்துவிடுகிறார் இயக்குநர்.
கதவுகள் மூடிய காருக்குள் மகேஷின் போதைப் புகையை சிம்பாவும் சுவாசித்துவிட்டு அது இல்யூஷன் உலகில் பிரவேசிக்கும் காட்சியில் “ நான் உன்னை எவ்வளவோ டார்ச்சர் பண்ணியிருந்தாலும் நீ ஏண்டா எனக்கு இவ்வளவு நன்றியுணர்ச்சியோட இருக்கே?” என சிம்பாவைப் பார்த்துப் கேட்கிறான் நாயகன். அதற்கு சிம்பா, ‘DOG’ என்ற ஆங்கிலச் சொல்லை அப்படியே உல்டாவாக GOD - என எழுதிக்காட்டி “ ஏன்னா.. நான் கடவுள்.. அகம் பிரம்மாஸ்மி” என்ற தத்துவத்தை அது உதிர்க்கும் காட்சியில் தொடங்கி, கைதட்டல் காட்சிகள் படம் முழுவதும் உண்டு.
“இவ்வளவு பெரிய வீட்ல தனியாவா இருக்கீங்க?” என மது கேட்கையில் “என் வீட்ல ஒரு எலி இருக்கு” என மகேஷ் கூறும் காட்சி, தனிமையை அவன் விரும்பி ஏற்றவன் அல்ல என்பதை நச்சென்று சொல்லிவிடுகிறது. சுவர் பூச்சியின் ரீங்காரத்தை அது தன்னை தூங்க வைக்கக் கதை சொல்வதாக எண்ணிக்கொள்ளும் மகேஷின் அறிவியல் ரீதியான கோட்பாட்டு விளங்கங்களைச் சிம்பா கிண்டலடிக்கும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறது.
‘ரஃப்’ நோட்டில் எழுதவும் அதில் கடைசி பக்கத்தில் மனம்போல் கிறுக்கவும் பிடிக்கும் என மகேஷ் கூறும்போது அவனது குழந்தைமை முகம் காட்டுகிறது. மகேஷாக பரத்தும் சிம்பாவாக பிரேம்ஜியும் நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். பக்கத்துவீட்டுப் பெண் மதுவாக வரும் பானுஸ்ரீ மெஹ்ரா தனக்குக் கிடைத்த சிறு வெளியை தனது அழுத்தமான நடிப்பால் நிறைத்துவிடுகிறார்.
ரமணாவின் கதாபாத்திரம் ஸ்டீரியோவாக இருக்கிறது. அவனை எதிர்கொண்டு தனது ஸ்டோனர் உலகில் முறியடிக்கும் பரத்தின் இல்லூயூஷன் ஆக்ஷன் காட்சிகள், புகை போதை உலகின் மாயத் தோற்றங்கள் ஆகியவற்றுக்கு கிராஃபிக்ஸில் மிகக் கிளர்ச்சியான வடிவமைப்பைத் தந்திருக்கும் விஎஃப்.எக்ஸ் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கலை இயக்கம் செய்திருக்கும் விநோத் ராஜ்குமார், அந்தோனி ஆகிய இருவரும் ஓர் பணக்காரப் போதையாளனின் வீட்டை அலங்கரித்திருக்கும் விதம் ஈர்க்கிறது.
இவர்களோடு சினு சித்தார்த்தின் ஒளிப்பதிவு, விஷால் சந்திரசேகரின் இசை, அச்சு விஜயனின் எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் போதைப் பிறழ்வுடனேயே பின்னிப் பிணைந்து பங்காற்றியிருக்கின்றன. அடல்ட் காட்சிகள் கொண்ட இந்தப் படம், இதுவரை போதையைத் தொடாதவர்களைக்கூட அதை ஒருமுறை தொட்டுப்பார்த்துவிடலாமா என்ற மாய வசீகரத்தைத் தருவதால் யூ சான்றிதழே பெற்றிருந்தபோதிலும் குழந்தைகள் காணாமல் தவிர்ப்பதே சரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT