Published : 07 Feb 2019 06:42 PM
Last Updated : 07 Feb 2019 06:42 PM

வசூல் களம்: ஆயிரம் கோடி குதிரையா ரஜினி?

கடந்துசென்ற பொங்கல் திருநாள், மசாலா பட ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துபோனது. அஜித்தின் ‘விஸ்வாசம்’ பொங்கல் வெளியீடு எனத் தயாரிப்பின்போதே அறிவித்தார்கள். ஆனால், ரஜினியின் ‘பேட்ட’ எதிர்பாராத விதமாக களமிறங்கியபோது, பொங்கல் பட வெளியீட்டுக் களத்தில் தீபாவளிபோல் தீப்பொறி பறந்தது.

பாக்ஸ் ஆபீஸைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள், திரையரங்கினர் ஆகிய இரு தரப்பினரும் துள்ளிக்குதித்தார்கள். பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் ‘பேட்ட’ வெளியான 11 நாட்களில் ரூபாய் 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அறிவித்தார். அடுத்த நாளே ‘விஸ்வாசம்’ படக்குழு தரப்பு, ‘எங்களது 11 நாள் வசூல் 125 கோடி’ என்று அறிவித்தது.

வழக்கமாக, தங்களது அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, சமூக வலைத்தளத்தில் மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்களுக்குப் பதிலாக, இம்முறை அஜித்- ரஜினி ரசிகர்கள் மோதிக்கொண்டு உண்மையான ‘வசூல் மன்னன்’ யார் என்று கெத்து காட்டினார்கள். ‘பேட்ட’ படத்தின் வசூல் ரூபாய் 125 கோடியைத் தாண்டிய பிறகுதான் அஜித் ரசிகர்களின் சுருதி குறைந்தது.

ஒரேஒரு ரஜினி

தற்போது, ‘ரஜினி ரஜினிதான்... எத்தனை வயதானாலும் ரஜினி மட்டும்தான் எக்காலத்துக்குமான சூப்பர் ஸ்டார், வசூலிலும் திரையரங்கைத் திருவிழா கூடமாக மாற்றுவதிலும் ரஜினி எனும் மந்திரத்தை அடித்துக்கொள்ள மாற்று இல்லை’ என்ற புகழாரங்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அவற்றின் உச்சமாக, ரஜினியின் நடிப்பில் கடந்த 7 மாதங்களில் வெளியான மூன்று படங்கள் ரூபாய் 1,000 கோடி வசூலைச் செய்துவிட்டன.

இது 1,100 கோடி ரூபாயை விரைவில் தொட்டுவிடும் என்ற விவாதமும் செய்திகளும் பரபரத்து வருகின்றன. ரஜினியின் நடிப்பில் கடந்த 7 மாதங்களில் வெளியான ‘காலா’, ‘2.0’, ‘பேட்ட’ ஆகிய மூன்று படங்களும் உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது உண்மைதான். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் ஒரேஒரு ரஜினிதான்.

ஆனால் இந்த ரூ.1,000 கோடி வசூல் என்பது ரஜினி எனும் சூப்பர் ஸ்டாருக்கான பிராண்ட் மதிப்பால் மட்டுமே சாத்தியமானதா என்பதைப் பலரும் விவாதிக்க மறந்துவிட்டனர். அது செலக்டிவ் அம்னீசியாவாகக்கூட இருக்கலாம்.

ஸ்டாருடன் ஸ்டார்

பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் டி.சி.ஆர். எனப்படும் டெய்லி கலெக் ஷன் ரிப்போர்ட்டைக் காணும் வாய்ப்புள்ள, பழுத்த அனுபவம் கொண்ட சிலரிடம் ரூ.1,000 கோடி வசூலின் பின்னணியில் இருக்கும் உண்மையான கள நிலவரம் கேட்டபோது, “இந்த 1000 கோடி ரூபாய் வசூல் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே அல்ல. கேரளா, கர்நாடக ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன், பாலிவுட் எனும் பெரிய சந்தையின் வசூலும் உலகச் சந்தையின் வசூலும் சேர்ந்தது” என்ற உண்மையைக் கூறினார்கள்.

பாக்ஸ் ஆபீஸை கூர்மையாகக் கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியபோது, “இந்த மூன்று படங்களுமே இயக்குநரின் படங்கள். அவற்றில் கரிகாலன், வசீகரன், சிட்டி, வேலன் என ஈர்ப்பு கொண்ட கதாபாத்திரங்களில் ரஜினி தோன்றியதே இந்தப் படங்களுக்கான வரவேற்புக்கு முக்கியக் காரணம்.

இவை ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தாம் என்றாலும் அவருக்கான ஹீரோயிசத்தைத் தாண்டிய கருத்துகள், காட்சி யமைப்புகள், கதைக்கான பிரம்மாண்ட படமாக்கம் ஆகியவை இந்தப் படங்கள் அனைத்திலுமே இருந்தன. மிக முக்கியமாக இந்தப் படங்கள் அனைத்துமே மல்டி ஸ்டாரர் படங்கள். ‘காலா’வில் ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரகனி, அஞ்சலி பாட்டில் என எதிர்பார்ப்புக்குரிய நடிகர்கள் இருந்தார்கள்.

‘பேட்ட’ படத்தில் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம், நவாஸுத்தின் சித்திக்கி, த்ரிஷா, சிம்ரன் எனப் பலர் இடம்பெற்றனர். ரஜினியின் பராக்கிரமத்தை முன்னிலைப் படுத்தும் காட்சிகள் இருந்தபோதும் ‘பேட்ட’ எல்லா நடிகர்களின் மீதும் பயணப்படும் கதையாக அமைந்ததே அதன் அசாதாரண வெற்றிக்குக் காரணம்” என்கிறார்கள்

‘2.0’ ஒரு விதிவிலக்கு!

‘காலா’. ‘பேட்ட’ படங்களுடன் ஒப்பிடும்போது ‘2.0’ எதிர்பாராத விதிவிலக்கான நிகழ்வு; ‘2.0’ இல்லாமல் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரஜினி நடித்த கதைப் படம் ஒன்று வெளியாகியிருந்தால், அது வெற்றியும் பெற்றிருந்தால் அதிகபட்சமாக 125 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம். அப்படிப் பார்த்தால் மூன்று படங்களின் வசூலும் 400 கோடி ரூபாயைத் தாண்ட வாய்ப்பே இல்லை. ஆனால் ‘2.0’ மட்டுமே 700 கோடி ரூபாய் வசூலை உலக அளவில் செய்திருக்கிறது.

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அது. ‘எந்திரன்’ படத்துக்குக் கிடைத்த வெற்றி, அதன் இரண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டரை வருடத் தயாரிப்புக்குப் பிறகு வெளியான ‘2.0’ படத்தின் 3டி தயாரிப்பு, விஷுவல் எஃபெக்ட் காட்சிகளின் உலகத் தரம் ஆகியவை ரசிகர்களை ஏமாற்றவில்லை.

இந்தியாவைத் தாண்டி உலக மார்க்கெட்டிலும் அதற்குப் பெரும் வரவேற்பு கிடைக்க இவையே காரணங்கள். ‘2.0’ படத்தை, 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட்ட பரந்த மார்க்கெட்டிங் உத்தியும் முக்கிய காரணம்” என்று விளக்குகிறார்கள்.

இதுதான் சினிமா

‘2.0’-ல் ரஜினி வசீகரனாகவும் சிட்டி ரோபோவாகவும் இரு பரிமாணங்களில் நடித்திருந்தாலும் பாலிவுட்டின் அக் ஷய் குமார் ஏற்றிருந்த பக் ஷிராஜன் கதாபாத்திரம் திரைக்கதையின் அசலான ஹீரோவாக அமைந்திருந்தது.

அந்தக் கதாபாத்திரத்தில் அக் ஷய்குமாரின் நடிப்பை ஊடகங்கள் புகழ்ந்துகொண்டாடியது பாலிவுட் களத்தில் அதன் வசூலை ஸ்திரப்படுத்தியது” என்ற இவர்களின் பார்வை ஒருபுறம் இருக்க “இந்த 1,000 கோடி ரூபாயில் (வரி உட்பட) விநியோகஸ்தர்கள், திரையரங்கினர் ஆகியோருக்கான வருவாய் 500 கோடி ரூபாய். எஞ்சியிருக்கும் 500 கோடி ரூபாயில் கதாநாயக நடிகருக்கான சம்பளம் 235 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் மிதிதான் மூன்று படங்களுக்கான நிகர லாபம். இதுதான் சினிமா” என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

எப்படியிருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதபடி அடுத்தடுத்து வெளியான மூன்று ரஜினி படங்களின் வசூல் சாதனை, அவர் இன்னும் பந்தயக் குதிரைதான் என்பதைக் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x