Published : 15 Feb 2019 10:56 AM
Last Updated : 15 Feb 2019 10:56 AM
கௌரவத் தோற்றங்கள் நீங்கலாக 24 படங்களைக் கடந்துவிட்டார் நடிகர் ஜெய். தனது 25-வது படமாக ‘அறம்’ படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிக்கும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
கோபி நயினார் இயக்கத்தில் நீங்கள் நடிப்பது ‘கறுப்பர் நகரம்’ கதையா?
அதைப் பற்றி நான் இயக்குநரிடம் கேட்கவில்லை. ஆனால், அவர் கூறிய கதையில் வடசென்னை இளைஞனாக, ஒரு கால்பந்து விளையாட்டு வீரனாக நடிக்கிறேன். உண்மையான கால்பந்து வீரனாக நடிக்க வேண்டும் என்பதற்காகச் சர்வதேச அளவில் விளையாடிப் புகழ்பெற்ற ஒருவரிடம் கால்பந்துப் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன். அவரும் என்னுடன் நடிக்கிறார்.
பத்திரிகையாளர்களையும் ஊடகங்களையும் விட்டு ஒதுங்கியே இருக்கிறீர்களே ஏன்?
நான் கூச்ச சுபாவி. மேடை, மைக்கைக் கண்டாலே அலர்ஜி. வேறு எந்தக் காரணமும் இல்லை. இனி அப்படி இருக்கப்போவதில்லை. எதற்கும் எப்போதும் என்னைத் தொடர்பு கொண்டு பேசலாம்.
‘ஜெய் - அஞ்சலியுடன் காதல்’ என்று தொடர்ந்து செய்திகள் வலம் வந்ததே?
அவை வதந்திகள். ‘பலூன்’ படத்தின் படப்பிடிப்பில் அஞ்சலியுடன் பணியாற்றிதோடு சரி. அதன்பிறகு அவரைச் சந்திக்கவேயில்லை. அவர் தற்போது தெலுங்குப் படவுலகில் பிஸியாக இருக்கிறார்.
அப்படியானால் இந்தக் காதலர் தினத்தை நீங்கள் கொண்டாடப் போவதில்லையா?
மம்மூட்டியுடன் கொண்டாடப் போகிறேன். காதலர் தினத்தன்று கேரளத்தின் கொச்சியில் ‘மதுர ராஜா’ படப்பிடிப்பு இருக்கிறது. அங்கே நான் இருந்தாக வேண்டும்.
முதன்முறையாக மலையாளப் படத்தில் நடிக்கிறீர்கள். அதுவும் மம்மூட்டியுடன்....
ஆமாம். ‘மதுர ராஜா’ படத்தில் மம்மூட்டியின் தம்பியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மோகன்லால் நடித்த ‘புலிமுருகன்’ படத்தின் இயக்குநர் வைசாக் இயக்கும் படம். ‘மதுர ராஜா’ படப்பிடிப்பின்போது விஜயின் தம்பியாக ‘பகவதி’ படத்தில் நடித்தது நினைவுக்கு வருகிறது. மதுரையில் இருந்து சென்று கேரளத்தில் வாழும் அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை. மலையாளப் படமென்றாலும் நானும் மம்மூட்டியும் படத்தில் தமிழில்தான் பேசிக்கொள்வோம்.
உங்களைப் பற்றிய வதந்திகள் பற்றிக் கவலைப்படுவதில்லையா?
ப்ளஸோ மைனஸோ நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்களே என்று விட்டுவிடுவேன். நமக்குப் பேச வாய்ப்புக்கிடைக்கும்போது அதைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிடுவேன். எனது நட்பு, குடும்ப வட்டாரத்தில் என்னைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் என்பதால் அவர்களும் அவற்றை மனத்தில் ஏற்றிக்கொள்வதில்லை.
நீங்கள் தனிக் கதாநாயகனாக நடிப்பதைவிட மல்டி ஸ்டாரர் படங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறீர்களே ஏன்?
‘சென்னை 28’, ‘சுப்ரமணியபுரம்’ என்று எனது சினிமா பயணம் தொடங்கியதே மல்டி ஸ்டாரர் படங்கள் வழியாகத்தான். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன். பாலிவுட் கூட இன்று மல்டி ஸ்டாரர் படங்களைத்தான் அதிகம் நம்புகிறது. எனக்கான ஒரு மார்க்கெட் உருவாகும்வரை மல்டி ஸ்டாரர் படங்களிலும் நடிப்பேன். அதுபோன்ற படங்களில் கதை இன்னும் அழுத்தமாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.
‘சுப்ரமணியபுரம்’ படத்துக்குப் பின் அதற்கு இணையாகவோ அதைவிடச் சிறந்த படமொன்றிலோ நடிக்கவில்லையே…
கோபி நயினாரின் படம் இதற்குப் பதிலாக அமையும். அதேபோல் ‘சுப்ரமணியபுரம்’ சசிகுமார் சாரிடம் மீண்டும் அவர் இயக்கி, அவருடன் நான் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன். கோபி நயினார் படம் தவிர, அண்ட்ரூ பாண்டியன் என்ற புது இயக்குநரின் படத்தில் நடிக்கிறேன். அதுவொரு அறிவியல் புனைவுக் கதை. எனக்குப் பெயர் பெற்றுத் தந்த படங்கள் அனைத்துமே புதிய இயக்குநர்களின் படங்கள்தான்.
இசையமைப்பாளர் தேவா அப்பாவுடன் நான் இருந்தபோது… முதல் படத்துக்காகப் போராடும் நிறைய உதவி இயக்குநர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது கஷ்டம் தெரியும் என்பதால்தான் புதிய இயக்குநர்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் கௌதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பெரிய இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க ஆவலாக இருக்கிறேன்.
‘பார்ட்டி’ படத்தில் என்ன கதாபாத்திரம் ஏற்றிருக்கிறீர்கள்?
இதுவரை நான் நடிக்காத செமி வில்லன் கதாபாத்திரம். படப்பிடிப்புக்கு முன்புவரை கொஞ்சம் சீரியஸான ரோல், நீ நடிப்பாயா என்று கேட்டார் இயக்குநர் வெங்கட்பிரபு. படப்பிடிப்புக்குச் சென்றதும் எனது கேரக்டர் காமெடி வில்லனாக மாறிவிட்டது. வெங்கட்பிரபுவிடம் ஏன் இப்படி மாற்றிவிட்டீர்கள் என்று கேட்டேன்.
“சீரியஸாகத்தான் இருந்தது, நீ படப்பிடிப்பு வந்தபிறகு காமெடியாக மாறிவிட்டது” என்றார். உண்மைதான். மற்ற படங்கள் என்றால் சூட்டிங் இடைவேளையில்தான் விளையாடுவோம். வெங்கட்பிரபு படம் என்றாலே விளையாட்டுக்கு நடுவில் போரடித்தால் படப்பிடிப்பு நடத்துவோம்.
இசைக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற முறையில் அதில் ஈடுபாடு இருக்கிறதா?
நிச்சயமாக. வெஸ்டர்ன் பியானோவில் லண்டன் ட்ரினிட்டி கல்லூரித் தேர்வுகளில் ஐந்து கிரேடுகள் முடித்திருக்கிறேன். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும்போது பியானோவுடன்தான் இருப்பேன். கம்ப்யூட்டரில் ஒரு முழுப் பாடலுக்கான இசையை புரோகிராம் செய்யவும் எனக்குத் தெரியும்.
உங்களது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படங்கள்?
‘பார்ட்டி’, ‘நீயா 2’ என இரண்டு படங்கள் தயாராக இருக்கின்றன. இரண்டுமே ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான படமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT