Published : 15 Feb 2019 11:26 AM
Last Updated : 15 Feb 2019 11:26 AM
பெரிய திரைக்காகத் தயாராகி டிஜிட்டல் தளத்தில் வெளியானது ‘சிகை’. தற்போது அந்த வரிசையில் கடந்த வாரம் ஜீ5 வெளியிட்ட கிரைம் திரில்லர் திரைப்படம் ‘களவு’.
கள்ளக் காதல், செயின் பறிப்பு, வரதட்சிணைக் கொடுமை, குடியில் கெடும் இளைஞர்கள், அலட்சிய போலீஸார் என்று அன்றாடச் செய்திகளில் நாம் கடந்துபோகும் துண்டுச் செய்திகளையே கண்ணிகளாகக் கோத்து ‘களவு’ செய்திருக்கிறார்கள். படத்தின் தொடக்கத்தில் பொருள் சார்ந்த களவுச் சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது. அதைத் தொடர்ந்து உறவில், உணர்வில், கடமையில், பரஸ்பர நம்பிக்கையில் என மனித வாழ்வின் சகலத்திலும் பல்லிளிக்கும் ஏராளமான களவுகள்மீதும் அவை சார்ந்த கயமைகள்மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறது ‘களவு’ திரைப்படம்.
களவுச் சம்பவமொன்றில் சாட்சியங்களின் அடிப்படையில் 3 இளைஞர்களை போலீஸ் வளைக்கிறது. சம்பவத்தின் மையமான பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும்போது, அவளைக் கொல்வதற்கான முயற்சிகள் தொடங்குகின்றன. இதற்கிடையே இளைஞர்கள் மூவரும் தங்கள் மீதான பழியிலிருந்து விடுபடப் போராடுகிறார்கள்.
கலையரசன், கருணாகரன் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, அபிராமி, வாட்சன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். முதியவர் வேடத்தில் சின்னி ஜெயந்த் வரும் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வெங்கட் பிரபு சிரித்தபடியே மிதப்பான இன்ஸ்பெக்டராக வருகிறார். மத்திய வர்க்கத்து தந்தையாக வரும் சேத்தன் அடக்கி வாசிக்கிறார்.
எதிர்பாராத கிளைமாக்ஸ் வைத்திருக்கும் நம்பிக்கையில் ஆங்காங்கே சில காட்சிகள் இழுவை யானாலும் படத்தில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. துரோகத்தின் வலியை இயலாமையுடன் சுமக்கும் கணவன், ஏழ்மையிலும் தன்மானத்தில் நிமிரும் காவலாளி, மகன் மீதான பாசத்தில் பரிதவிக்கும் தந்தை என திரில்லர் கதையின் ஊடறுக்கும் கலவையான காட்சிகள் படத்தைத் தாங்குகின்றன. பணம் குறித்து கலையரசனும் நல்லவன் குறித்து கருணாகரனும் முன்வைக்கும் ‘நறுக்’ வசனங்கள் ஈர்க்கின்றன. எழுதி இயக்கி உள்ள முரளி கார்த்திக் கிளைமாக்ஸில் அழுத்தம் பதித்திருக்கிறார்.
போதையின் பாதை
தணிக்கை கடிவாளம் கிடையாது என்பதால் இணையத் தொடர்களில் வரம்பற்ற வன்முறை, பாலியல், போதைப் பொருள் காட்சிகள் சாதாரணம்! அதிலும் பாப்லோ எஸ்கோபர் பாதிப்பில் மைதா மூட்டைகளைச் சிதறடித்து கொகெய்ன் போதைக் கடத்தல் என்று படுத்தவும் செய்வார்கள்.
சற்றே வித்தியாசமாக ‘ஜீ5’ வெளிட்டிருக்கும் ‘மிட்டா’வில், சுதேசி போதைப் பொருளைக் கையில் எடுத்திருக்கிறார்கள். கஞ்சா என்ற போதை வஸ்துவின் பயன்பாடு அதில் திளைக்கும் இளைஞர்கள், அதற்காக நடக்கும் பார்ட்டிகள், கடத்தல் வைபவங்கள் எனச் சகலமும் இதில் வருகின்றன. கஞ்சா விற்பனை செய்யும் முகவர் முகவரி தவிர்த்து போதையின் பாதையில் அனைத்தையும் சிலாகித்துத் தருகிறார்கள்.
பார்ப்பவர்களைக் கமறச் செய்யும் அளவுக்கு அத்தியாயங்கள் நெடுக சகலரும் புகைத்துத் தள்ள, அந்த மேகத்தினுள் கதையைத் தேட வேண்டியிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் தாமதமாய் அதை உணர்ந்தவர்களாக சுயமாக பகடி செய்துகொள்வதுடன், ‘தொடரும்’ வேறு போடுகிறார்கள். டார்க் காமெடிக்கான முயற்சி, போதை உலகுக்கே உரிய தனித்துவ இசை, போதையாளர் பார்வையிலான காட்சிகளைச் சித்தரிக்கும் வித்தியாச ஒளிப்பதிவு என ஈர்க்கும் அம்சங்களும் மிட்டாவில் உண்டு.
‘க்ளிஷே’ காதல்
இளமை பொங்கும் காதல் கதையாக வெளியாகி இருக்கும் ஜீ5 இணையத் தொடர், டி7(D7). நண்பனுக்குப் பெண் பார்க்க உடன் செல்லும் நாயகனும் அங்கே பெண்ணின் தோழியாக வரும் நாயகியும் தங்கள் நண்பர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் அவர்களிடையே காதல் அரும்புகிறது. ஆனால், பிற்பாடு பிகு செய்யும் நாயகன் தன்னுடன் லிவ்-இன் பாணியில் 7 நாட்கள் கழிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடுகிறான். அந்த நிபந்தனைக்கு நாயகி உடன்பட, ஏழாவது நாளில் எதிர்பாரா சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
தொடக்கமும் முடிவும் மட்டுமே சுவாரசியம் தரும் கதையின் இடைப்பட்ட காட்சிகள் பலவற்றிலும் பார்த்துச் சலித்த ‘க்ளிஷே’க்களால் நிரப்பி உள்ளனர். ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் வேறு. ஆனபோதும் முதன்மைக் கதாபாத்திரங்களில் களையான நடிகர்களைக் கொண்டு ஓரளவு ரசிக்கச் செய்கிறார்கள். காதலிக்கும் இளசுகளை மனத்தில் வைத்து அவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஜாலியான தொடர் டி7.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT