Last Updated : 07 Feb, 2019 07:02 PM

 

Published : 07 Feb 2019 07:02 PM
Last Updated : 07 Feb 2019 07:02 PM

ஈரானிய பட விழா: யதார்த்தத்தின் தரிசனம்

சென்னையில் உள்ள உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஈரானியத் திரைப்படங்களைக் காட்டவிருக்கிறது ‘ஈரானிய பட விழா’. சென்னை சர்வதேசப் படவிழாவை ஒருங்கிணைத்துவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம் மும்பையில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசு கலாச்சார இல்லத்தோடு  இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலையன்ஸ் பிரான்சேஸ் மையத்தில் பிப்ரவரி 11 முதல் 13வரை மூன்று நாள்கள் மாலைப்பொழுதுகளில் ‘ஈரானிய பட விழா’வை நடத்துகிறது.

தாரானேவுக்கு வயது 15. தாய் இல்லாத அந்தச் சிறுமியின் தந்தை சிறைக் கைதி. கம்பள வியாபாரியான அமீர்,  தாரானே மீது ஆசைகொள்கிறான்.  இருவருக்கும் திருமணம் நடத்திவைக்கப்படுகிறது. அமீருக்கும் தாரானேவுக்கும் இடையில் எத்தகைய மனப்பொருத்தமும் இல்லாமல் போக இருவரும் நான்கு மாதங்களில் மணவிலக்கு செய்துகொள்கிறார்கள்.

ஊரையும் உறவையும் விட்டு ஜெர்மனிக்கு அமீர் சென்றுவிடுகிறான்.  அத்தருணத்தில் தான் கருவுற்றிருப்பது தாரானேவுக்குத் தெரியவருகிறது.  தன்னுடைய குழந்தையைப் பெற்றெடுக்க முடிவுசெய்யும் தாரானேவின் கதைதான், ‘ஐ ஏம் தாரானே, ஐ ஏம்15 இயர்ஸ் ஓல்ட்’ (I am Taraneh, I am Fifteen Years Old) திரைப்படம்.

தொடு உணர்வால் உலகை ரசிக்கும் ஓர் பார்வையற்ற சிறுவனின் வாழ்வனுபவம்,  ‘தி கலர் ஆஃப் பேரடைஸ்’ (The Color of Paradise). இணையத்தின் வழியாக நண்பர்களாகி, பின்பு கேளிக்கைக்காகப் பேராபத்தில் சிக்கிக்கொள்ளும் இரு இளைஞர்களின் கதை, ‘கிரேசி கேஸில்’ (Crazy Castle). தன்னுடைய மாணவியிடம் காதல்வயப்பட்டு அவதிப்படும் கல்லூரிப் பேராசிரியர் பற்றியது, ‘ஸ்வீட் டேஸ்ட் ஆஃப் இமேஜினேஷன்’ (Sweet Taste of Imagination).

விபத்தில் சிக்கி நினைவிழக்கும் நபர் ஒருவரின் விசித்திரமான உலக அனுபவங்களின் திரை வடிவம், ‘அல்ஸைமர்’ (Alzheimer). 16-வயதில் பருவமடைகிறான் ஆராஷ். அதுவரை தாயின் வளர்ப்பில் இருந்தவன் இனித் தனியே வசிக்கும் தந்தையோடு இருக்க முடிவெடுக்கிறான். பிறகு அவன் சந்திக்கும் பெண்ணால் அவன் வாழ்க்கையின் திரை மாறுவதைச் சொல்கிறது ‘வெட் ட்ரீம்ஸ்’(Wet Dreams) படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x