Published : 01 Feb 2019 09:43 AM
Last Updated : 01 Feb 2019 09:43 AM

திரைப் பள்ளி 30: ஜெயம்ரவியின் நோக்கமும் சீக்குவென்ஸின் நோக்கமும்

கையாளப்படும் கதைக்கருவைப் பொறுத்துத் திரைக்கதையானது தனது வடிவம், உத்திகள் ஆகியவற்றைத் அதுவே தீர்மானித்துக்கொள்கிறது என்பதே பெரும்பான்மையான திரைக்கதை எழுத்தாளர்களின் அனுபவமாக இருக்கிறது.

அதேபோல், திரைக்கதையின் மூச்சுப் பையாக இயங்கும் காட்சிகளில், காலம் (Time), இடம் (Space), நோக்கம் (Purpose), செயல் (Action), சூழ்நிலைப் பொருத்தம் (Context) ஆகிய அம்சங்கள் எவ்வாறு ஒரு காட்சியை இயக்குகின்றன என்பதைக் கடந்த சில வாரங்களாகப் பார்த்தோம். இந்தக் காட்சிகள் இயங்க வேண்டுமானால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக மாறுவது மிக முக்கியம். அப்படிக் காட்சிகள் மாறும்போதுதான் கதை நகரும் சுவாரசியத்தைத் திரைக்கதையால் நடத்திக் காட்ட முடியும்.

மித்ரனின் நோக்கமும் சீக்குவென்ஸின் நோக்கமும்

அடுத்தடுத்து வரும் சில அல்லது பல காட்சிகளுக்கு இடையில் ஒரே நோக்கம் இருந்தால் அந்தக் காட்சிகளின் தொகுப்பை ‘சீக்குவென்ஸ்’ என்கிறது திரைக்கதை இலக்கணம். உதாரணத்துக்கு மோகன் ராஜா எழுதி, இயக்கிய ‘தனி ஒருவன்’ படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் வரிசையாக இடம்பெறும் பல காட்சிகள் எப்படி ஒரே நோக்கத்தைக் காட்டும் சீக்குவென்ஸாக இயங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.

ஐபிஎஸ் தேறி, காவல் அதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடிக்கும் கட்டத்தில் இருக்கிறார்கள் நாயகன் மித்ரனும் அவனுடைய நண்பர்களும். தொடர் செயின் பறிப்பு, குழந்தைக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் தொழில்முறைக் குற்றவாளிகள் 32 பேரை மித்ரன் தன் நண்பர்களுடன் கூட்டாகச் சேர்ந்து போலீஸிடம் பிடித்துக்கொடுக்கிறான்.

பயிற்சி அதிகாரிகள் என்ற அடையாளத்தை மறைத்துக்கொண்டு அதைச் செய்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து செய்த ஆபரேஷன்களுக்கு அர்த்தமில்லாமல் போகும்விதமாக அவர்கள் பிடித்துக்கொடுத்த ஒரு குற்றவாளி, உள்துறை அமைச்சருடன் காவல் பயிற்சிக் கல்லூரிக்கே உள்துறை அமைச்சருடன் ஒரே காரில் வந்து இறங்குகிறான்.

இதைப் பார்த்து மித்ரனைத் தவிர மற்ற நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்தக் குற்றவாளிக்குத் தனது முகம் அடையாளம் தெரிந்துவிடக் கூடாதே என்று சல்யூல்ட் வைப்பதுபோல் தனது முகத்தை மறைத்துக் கொள்கிறான் மித்ரனின் நண்பன். இது இந்த சீக்குவென்ஸின் முதல் காட்சி.

சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அந்தக் குற்றவாளி, காவலர்கள் மத்தியில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்டு அதிர்ச்சியடையும் நண்பர்கள், அக்குற்றவாளியைக் கண்டு எந்த அதிர்ச்சியும் அடையாத மித்ரனைத் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார்கள். இது இரண்டாவது காட்சி.

நண்பர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாத மித்ரன், செயின்பறிப்பின்போது தடுக்க முயன்று கொல்லப்பட்டவரின் மனைவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதைக் கூறி நண்பர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அவரைச் சாந்திப்பதும், பாதிக்கப்பட்ட அந்தப்பெண் ‘தனது சாட்சி செல்லாது’ என்று நீதிமன்றம் கூறிவிட்டதைக் கூறி அழுவதும் மூன்றாவது காட்சி.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நியாமான கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் இதற்காகவா நாம் காவல் அதிகாரிகளாக மாறப்போகிறோம் என்ற குழப்பத்துடன் மருத்துவமைக்கு வெளியே வரும் நண்பர்கள், குழப்பம் ஏதுமில்லாமல் இருக்கும் மித்ரனிடம் “இத்தனைக்குப் பிறகும் நீ எதுவும் பேசாமல் இருப்பது ஏன்?” எனக் கேட்கிறார்கள். அதற்கு அவன், “இந்த ஒருத்தன் மட்டுமில்ல; நாம இதுவரைக்கும் பிடித்துக்கொடுத்த 32 குற்றவாளிகளும் இப்போ வெளியேதான் இருக்காங்க” என்று பதில் கூறுகிறான். “அப்போ நாம இதுவரைக்கும் நாம் கஷ்டப்பட்டது எல்லாம் வீண்தானா?” என ஒருவன் கேட்கிறான். அதற்கு மித்ரன், “ இல்ல.. ஒரு அணு அளவு கூட வீணாகல!” எனக் கூறுவது நான்காவது காட்சி.

அப்படிக் கூறிய மித்ரன், நண்பர்களைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு பெரிய அறையைக் காட்டுகிறான். அந்த அறை முழுவதும் சுவர்களில் செய்தித்தாள்களில் வெளியான குற்றச் செய்திகளின் பேப்பர் கட்டிங்குகள், புகைப்படங்கள், தடய அறிவியல் குறிப்புகள், ஆதாரங்கள் எனப் பலவற்றை மித்ரன் ஒட்டி வைத்திருப்பதைப் பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

செயின் பறிப்பின்போது தாக்கிக் கொல்லப்பட்ட ராமர் ஒரு சமூக சேவகர் என்றும் செயின் பறிப்புபோல் நாடகம் நடத்தி, அவரை ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கான காரணத்தையும் அந்தக் காரணத்தின் பின்னணியில் இருக்கும் பெரிய குற்றவாளிகள் பற்றியும் மித்ரன் எடுத்துக் கூறுகிறான். “சின்னச் சின்னச் குற்றங்களுக்குப் பின்னால் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட குற்றங்கள் இருப்பதாக” அந்த அறையில் இருக்கும் ஆதரங்களுடன் நிரூபிக்கிறான்.

தான் ஆராய்ந்து பார்த்த 500 குற்றங்களின் பின்னணியில் ஒளிந்திருப்பது வியாபாரப் பேராசை என்கிறான். அந்த 500 குற்றங்களின் சூத்ரதாரிகள் அந்த நகரத்தில் வாழும் வெறும் 15 பேர் என்றும் அந்த 15 பேரில் அதிகக் குற்றம் செய்பவன் எவனோ, எவன் ஒருவனை அழித்தால் குறைந்து 100 தொழில்முறைக் குற்றவாளிகளாவது அழிந்துபோவார்களோ அவனையே தான் முதலில் அழிக்கப்போவதாகவும் அவனையே தனது எதிரியாக நினைப்பதாகவும் மித்ரன் தனது நோக்கத்தை முன்வைப்பது ஐந்தாவது காட்சி.

இந்த ஐந்து காட்சிகளும் மித்ரன் ஏன் சிறு குற்றவாளிகளைச் சட்டை செய்யவில்லை என்பதையும் அவர்களை இயக்கும் பெருங்குற்றவாளிகளில் யாரைத் தனது எதிரியாக முடிவுசெய்கிறான் என்ற கதாபாத்திரத்தின் நோக்கத்தையும் முன்வைக்கின்றன. ஐந்து காட்சிகளும் கதாநாயகனின் தனிப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்தும் ஒரே நோக்கத்தைக் கொண்டிருப்பதால் இவற்றை ஒரு சீக்குவென்ஸாகக் கொள்ளலாம்.

குறைந்த நேரம் கொண்ட குறும்படங்கள் ஒரே சீக்குவென்ஸாக முடிந்து போய்விடலாம். இனி கழுகு குறும்படத்துக்கான திரைக்கதையில் நான்காவது காட்சியை அதன் துணைக்காட்சியுடன் முழுமையான விவரிப்பு கொண்ட திரைக்கதையாக எழுதிப் பார்போம்…

காட்சி எண் 4. மாலை மங்கும் நேரம் – சாலை – வெளியே

சென்னையின் ஐடி காரிடார் சாலையின் பிஸியான போக்குவரத்தை பிளைஓவர் நடைபாலத்திலிருந்து பார்க்கிறது கேமரா. வாகனங்கள் எங்கும் தேங்காமல் அசுரவேகத்தில் விரைந்து கொண்டிருக்கின்றன. பிளைஓவர் நடைபாலத்திலிருந்து சாலையின் நடைமேடை நோக்கிக் கீழே இறங்கும் அருணின் அப்பாவின் தோளில் ஒரு அலுவலகப் பை, கையில் மதிய உணவுப் பை.

அந்த நடைப்பாலத்தை ஒட்டியிருக்கும் பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருக்கும் பயணிகளின் மிட் (mid) பாய்ண்ட் ஆஃப் வியூவில் நடந்துவரும் அருணின் அப்பாவை கேமரா பார்க்கிறது. அருணின் அப்பா பேருந்து நிறுத்தத்தை நெருங்கி அங்கே நிற்கும் தெரிந்த ஒருவரைப் பார்த்து குளோஸ் அப்பில் புன்னகைக்கிறார். அவரும் ஐ லெவல் ஷாட்டில் பதிலுக்குப் புன்னகைக்கிறார். அப்போது சிறுசேரியிலிருந்து கே.கே.நகர் செல்லும் 570 தடம் எண் பேருந்து வந்து நிற்கிறது. ஃபுல் ஷாட்டில் (Full shot) பயணிகள் அனைவரும் ஓடிச்சென்று பேருந்தில் ஏறுகிறார்கள். அருணின் அப்பா அந்தப் பேருந்தில் ஏறச் செல்கிறார்.

அப்போது பேருந்தின் வலப்புறம் ஓவர்டேக் செய்ய வேண்டிய ஒரு பைக் இளைஞன், பேருந்தில் ஏறிக்கொண்டிருப்பவர்களின் மிக அருகில் இடிப்பதுபோல இடப்புறமாக ராங் சைடில் ஓவர்டேக் செய்கிறான். பேருந்தில் ஏறச் சென்ற அருணின் அப்பா, அவனது எதிர்பாராத நுழைவால் திடுக்கிட்டுத் துள்ளி விலகுகிறார். அவனது செயலைச் சகித்துக்கொள்ள முடியாமல் தனது கையை அவனை நோக்கி நீட்டிக் கடுகடுப்புடன் திட்டுகிறார்.

அருணின் அப்பா

“ டேய் பொறம்போக்கு…”

 பைக் இளைஞன் பைக்கை நிறுத்தித் திருப்பிப் பார்த்துப் பேசுகிறான்.

பைக் இளைஞன்

“ யோவ்.. பொளைச்சுப் போயிறு… வந்தா பொளந்துடுவேன்..”

அப்போது பேருந்தின் நடத்துநர் அருணின் அப்பாவை அழைக்கிறார்.

நடத்துநர்

“ இளங்கோ சார்… வாங்க சார்… சில்லறப் பசங்ககிட்ட வாய் குடுத்துறாதீங்க”

நடத்துநர் சொன்னது அந்த இளைஞன் காதில் விழவில்லை. நடத்துநர் சொன்னத்தைக் கேட்டு பேருந்தில் ஏறுகிறார் இளங்கோ.

பைக் இளைஞன்

 “அந்தப் பயம் இருக்கட்டும்!”

எனக்கூறிவிட்டுப் பைக் இளைஞன் விருட்ரென்று பைக்கை நகர்த்திச் செல்கிறான். அருணின் அப்பாவுடைய பெயர் இளங்கோ என்பது இந்தக் காட்சியில் உணர்த்தப்படுகிறது.

காட்சி 4 ஏ - மாலை மங்கும் நேரம் – பேருந்து/உள்ளே

ஜன்னலை ஒட்டிய இருக்கை ஒன்றில் இளங்கோ அமர்கிறார். அவருக்குப் பக்கத்து இருக்கையில் அதே பேருந்தில் பயணிக்கும் இளங்கோவைப் பார்த்து பேருந்து நிறுத்தத்தில் புன்னகைத்த அந்தத் தெரிந்த முகத்துக்குரியவர் வந்து அமர்கிறார். இளங்கோவின் முகத்தில் பதற்றமும் கோபமும் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது. ஜன்னலுக்கு வெளியே சாலையைக் கவனிக்கிறார். கார்கள், பேருந்துகள், பைக்குள் விரைகின்றன.

ஒரு பெண் புல்லட் ஓட்டிச் செல்வதைப் பார்க்கிறார். இன்னொரு பைக்கில், ஓட்டிச் செல்லும் இளைஞனை இறுக அணைத்தபடி அமர்ந்திருக்கும் பெண்ணைக் கவனிக்கிறார். அவள் கண்களை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளை மூடியிருக்கிறாள். அப்போது காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் ‘விர்ர்ர்ரூம்ம்ம்ம்’ என்ற பைக் சத்தம் இந்த ஷாட்டின் மீது சவுண்ட் ஓவராக ஒலிக்கிறது. சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்க்கிறார் இளங்கோ.

பெட்ரோல் டேங் மீது ஹெல்மெட் வைக்கப்பட்டிருக்க, பைக்கின் ஆக்ஸிலேட்டரை அருண் அசுர வேகத்தில் முறுக்கி ஓட்டிக்கொண்டிருக்கிறான். நொடிக்குள் 570 பேருந்தை ‘விர்ர்ர்ரூம்ம்ம்ம்’ என்ற சத்தமும் ‘குர்ர்ராராரா…’ என்ற விநோதமான ஹாரன் சத்தமும் ஒலிக்க பேருந்தை நொடிக்குள் கடந்து செல்கிறது அருணின் பைக். அதைப் பார்க்கும் இளங்கோவனின் முகம் குளோஸ் அப்பில் மேலும் இறுக்கமாகிறது. அப்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர் இளங்கோவன் முகத்தைப் பார்த்துப் பேசுகிறார்.

பக்கத்து இருக்கைக்காரர்

“இவனுங்கள ஒண்ணும் பண்ண முடியாது சார்! இந்த மாதிரி அராத்துகளாலத்தான் ஆக்ஸிடெண்ட்ஸ் பெருகிப்போச்சு… பைக் வாங்கிக்கொடுத்த ஃபேரண்ட்ஸ சொல்லணும்...”

இளங்கோவன் எந்தப் பதிலும் கூற முடியாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது நடத்துநரின் குரல் கேட்கிறது அவரது முகத்தில் வாய்ஸ் ஓவராக ஒலிக்கிறது.

நடத்துநரின் குரல்

“இந்தச் சில்லறப் பிரச்சன பெரிய பிரச்சனை.. எத்தனை இரநூறுக்கு சில்லற கொடுக்குறது.. ஆங்?”

- காட்சி முடிவு -

ஒருவரிக் கதை அமைப்பில் 4-வது காட்சி மட்டுமே இருந்தது. ஆனால், திரைக்கதையை விவரித்து எழுதும்போது 4ஏ என்ற துணைக்காட்சியை ஏன் எழுத வேண்டி வந்தது என நினைக்கலாம். பேருந்துக்குள் ஏறும் வரை வெளியே நடப்பவையில் இடம் வேறு. காலம் ஒன்று. பேருந்துக்குள் பயணித்தபடி இளங்கோவன் காண்பதும் சக பயணியின் கருத்தை எதிர்கொள்வதிலும் அவர் வெளிப்படுத்தும் உணர்விலும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இருப்பினும், இரு காட்சிகளிலும் இடம் மாறுபடுவதால் துணைக் காட்சியின் தேவை உருவாகிவிடுகிறது.

இனி, உங்கள் குறும்படத்துக்கான கதைக்கருவைத் தேர்ந்துகொண்டு திரைக்கதையை நீங்களே எழுதி, ஷாட்கள் பிரித்துப் படமாக்கத் தயாராகுங்கள். அதற்குமுன் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய கலைகளின் அடிப்படையான விதிகளைக் கொஞ்சம் தெரிந்துகொண்டு திரைக்கதை எழுதத் தொடங்குவது உங்கள் புரிதலை மேலும் வளப்படுத்தும். திரைப்பள்ளியின் அடுத்த பாகத்துக்காகக் காத்திருங்கள். அதில் திரைப்பட உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் அடுத்த முக்கியக் கலையை அறிந்துகொள்ளத் தயாராகுங்கள்.

(திரைப்பள்ளி முதல் பாகம் நிறைவடைந்தது)

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x