Last Updated : 22 Feb, 2019 11:10 AM

 

Published : 22 Feb 2019 11:10 AM
Last Updated : 22 Feb 2019 11:10 AM

திரைப்பட அறிமுகம்: திரும்பிப் பார்க்க வைக்கும்!

இந்து தமிழ் நாளிதழின் 2019-ம் ஆண்டுக்கான 'யாதும் தமிழே' நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று கோவையில் கோலாகலமாக நடந்தேறியது. 

இதன் பிற்பகல் அமர்வு, ‘சிம்மக் குரலும் திரைத் தமிழும்’ என்ற தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த தினத்தைக் கொண்டாடியது. இவ்விழாவின் ஒரு பகுதியாக சேரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘திருமணம்- சில திருத்தங்களுடன்' என்ற புதிய திரைப்படத்தை அறிமுகம்செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் தம்பி ராமையாவும், அதில் கதாநாயகனாக நடித்திருக்கும் அவரது மகன் உமாபதி ராமையாவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கூடுதல் மகிழ்ச்சி

நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் பிரித்து பேணி வளர்க்கிறோம். சமகாலத்தில் இம்மூன்று தமிழிலும் சத்தமில்லாமல் இயங்கும் ஆளுமைகளை அழைத்து விவாதித்து, இவற்றில் சாதனை படைத்தவர்களை கௌரவம் செய்யும் சிறப்பான நிகழ்வை 'இந்து தமிழ்' நாளிதழ் நடத்தத் தொடங்கியிருப்பது சிறப்பான தொடக்கம். தனியார் அமைப்புகள்தான் இதுபோன்ற விழாக்களை எடுத்துப் பாராட்டுவார்கள்.

ஆனால் 'இந்து தமிழ்' நாளிதழ் இத்தகைய நிகழ்வை நடத்தும்போது ஒரு தாய்மை கலந்த பாசம் ஏற்படுகிறது. எங்கோ கிடந்தவர்களை அழைத்துவந்து அவர்களை அடையாளம் காட்டுகிறீர்கள். செய்திகள் தருவதையும் தாண்டி, தற்காலத்தில் ஒரு பத்திரிகைக்கு கடமை இருக்கிறது என்று முன்மாதிரியை காட்டியிருக்கிறீர்கள்.

முத்தமிழில் ஒன்றான நாடகத்தி லிருந்துதான் அதன் குழந்தையான திரைப்படமும் வந்தது. இந்த மரியாதைக்குரிய நிகழ்ச்சியில் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ படத்தை அறிமுகம்செய்வதில் கூடுதல்

மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய விருதுகளைப் பலமுறைப் பெற்ற சேரன் இயக்கத்தில் எனது மகன் உமாபதி  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் மார்ச் 1-ம் தேதியன்று  திரைக்கு வருகிறது.” என்றவர், அடுத்து ‘தற்காலத்தில் திருமணம்’ என்ற தலைப்பில் பேசினார்.

அறிவியல் புரட்சி

அப்போது அவர், “ திருமணம் பற்றி பலருக்கும் பல எண்ணங்கள் இருக்கும். திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். திருமணம் ஆன சிலரோ ஏன்டா ஆச்சு என்று நினைப்பார்கள். மனிதனை திருமண பந்தத்திற்கு கொண்டுவர பெரியோர்கள் முயற்சி எடுத்தார்கள். இது நாகரிக மனிதன் கண்டறிந்த அறிவியல் புரட்சி. மனிதன் மனிதனாக இருப்பதற்குக் காரணம் திருமணம்தான்.

திருமண பந்தம் ஒருவனை மனிதனாக்குகிறது. அப்துல் கலாம் போல பிரம்மச்சாரிகள் சாதனையாளர்களாக இருந்தால் மட்டுமே, இந்த உலகில் பாராட்டு கிடைக்கும். சம்சாரிகளுக்கு சம்சாரம் இருந்தாலே மரியாதை. திருமணம் என்பது மனிதனின் கவுரவம். நம்மைக் கடுப்பேற்றும் பலரைப் பற்றியும் நாம் கோபப்படும்போது எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் என்று கோபப்படுவோம். அப்படியானால் ஒரு மனிதனை நிதானத்துக்கு கொண்டுவருவது திருமண பந்தம்.

அற்புதமான யதார்த்த இயக்குநர் சேரன். எனது மகன் உமாபதி ராமையாவுக்கு இந்த படத்தில் மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளார். ‘பாரதி கண்ணம்மா’ ‘பாண்டவர் பூமி’, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராப்’ என அடுக்கடுக்காக வெற்றிகளைக் கொடுத்தவர். ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ நமக்கு திருமணம் நடந்த நாட்களை மட்டுமல்ல; காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப் போகிற ஒவ்வொரு இளைஞனையும் யுவதியையும் திரும்பிப் பார்க்க வைக்கும்” என்று பேசினார்.

அவரது உரையைத் தொடர்ந்து ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’ திரைப்படத்தின் சிறப்பு ட்ரைலர் ‘யாதும் தமிழே’ அரங்கில் திரையிடப்பட்டு பலத்த கரவொலியைப் பாராட்டாகப் பெற்றது.

நாயகன் அறிமுகம்

அதன் பின்னர் தந்தை தம்பி ராமையாவுடன் மகன் உமாபதி ராமையாவும் மேடையில் கவுரவிக்கப்பட்டார். ‘திருமணம் - சில திருத்தங்களுடன்’படத்தில் உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ் நாயகன், நாயகியாக நடிக்க, சேரன் நாயகியின் அண்ணனாகவும் சுகன்யா நாயகனின் சகோதரியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, அனுபமா குமார், பாலசரவணன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்திருக்கும் படம் இது.

thiraippada-4jpg

இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

இயக்குநர் சேரனின் படங்களைக் கொண்டாடும் ரசிகரா நீங்கள்?

‘திருமணம் சில திருத்தங்களுடன்’ திரைப்படத்தைத் திரையரங்கில் வெளியாகும் முன்பே படக்குழுவினருடன் இணைந்து பிரத்தியேகக் காட்சியைக் காண ஆவலாக உள்ளீர்களா?

அப்படியானால் உங்களுக்காகக் காத்திருக்கிறது ஒரு போட்டி!

பிரத்யேகக் காட்சியில் கலந்துகொண்டு, படக்குழுவினருடன் உணவருந்தி மகிழக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.

அடுத்துவரும் நாட்களில் இந்து தமிழ் நாளிதழில் இதற்கான போட்டி விவரங்கள் வெளியாகும். உங்கள் விவரங்களைப் பதிவு செய்து அனுப்ப வேண்டியது மட்டுமே உங்கள் வேலை. காத்திருங்கள்.. பிரத்யேக ப்ரிமியர் காட்சிக்கான அழைப்பை வெல்லுங்கள்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x