Published : 07 Feb 2019 06:49 PM
Last Updated : 07 Feb 2019 06:49 PM
மல்யுத்த வீராங்கனை ஒருவரின் நிஜக்கதை ‘ஃபைட்டிங் வித் மை ஃபேமிலி’ (Fighting With My Family) என்ற தலைப்பில் உருவாகியிருக்கிறது. அதைத் தயாரித்திருப்பவர் முன்னாள் மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான ட்வைன் ஜான்சன்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சரயா பிவிஸ். இவருடைய பெற்றோர் உட்படக் குடும்பத்தில் அனைவருமே தொழில்முறை மல்யுத்த வீரர்கள். சரயாவுக்கும் அவருடைய சகோதரனுக்கும் குழந்தைப் பருவத்திலிருந்தே உலக அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெறுவது கனவாக இருந்தது. பல முயற்சிகளுக்குப் பின்னர் சரயாவின் 12-வது வயதில் இதற்கான வாய்ப்பு கிடைத்தது. பெய்ஜ் (Paige) என்ற மேடைப் பெயரில் பங்கேற்று மல்யுத்தப் பதக்கங்களை சரயா வெல்லத் தொடங்கினார். இங்கிலாந்து, அமெரிக்கா மட்டுமன்றிப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் பெய்ஜ் பங்கேற்ற போட்டிகள் வரவேற்புப் பெற்றன. தனது 25-வது வயதில் கழுத்தில் அடிபட்டதன் காரணமாக 2017-ல் அவர் ஓய்வு பெற்றார்.
பெய்ஜ் மேற்கொண்ட தொடக்க கால முயற்சிகள், போராட்டங்கள், சாதனைகள் ஆகியவை குறித்து 2012-ல் ‘தி ரெஸ்ட்லர்ஸ்: ’ஃபைட்டிங் வித் மை ஃபேமிலி’ என்ற ஆவணப் படம் வெளியானது. முன்னாள் மல்யுத்த வீரரான ‘தி ராக்’ ட்வைன் ஜான்சன், இந்த ஆவணப் பதிவைத் தழுவி ஹாலிவுட் திரைப்படமாக்கத் திட்டமிட்டார். அதன்படி பெய்ஜ் பாத்திரத்தில் ஃப்ளோரன்ஸ் ப்யூ நடிக்க, ஜாக் லோடன், நிக் ஃப்ராஸ்ட் உள்ளிட்ட பலர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த பயோபிக் உருவாகிவிட்டது. ஸ்டீஃபன் மெர்சன்ட் எழுதி இயக்கி உள்ளார். ‘தி ராக்’ ஆக ட்வைன் ஜான்சனே தோன்றி இருப்பதுடன் தயாரிப்பிலும் இணைந்திருக்கிறார்.
தொழில்முறை வீராங்கனை குறித்த படமென்பதால் புகழ்பெற்ற மல்யுத்த மேடைகளில் நேரடியாகப் படமாக்கியுள்ளனர். பெய்ஜ் தோன்றும் உக்கிரமான மல்யுத்தக் காட்சிகளில் அமெரிக்கத் தொழில்முறை மல்யுத்த வீராங்கனையான டெஸ்சா பிளான்சர்ட்டைப் பயன்படுத்தி உள்ளனர்.
நிஜ வீராங்கனையின் சாகசக் கதையை நகைச்சுவையாக விவரிக்கும் ‘ஃபைட்டிங் வித் மை ஃபேமிலி’, பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT