Published : 05 Sep 2014 12:56 PM
Last Updated : 05 Sep 2014 12:56 PM

ரீமேக்கா, நேரடிக் கதையா? எது பெஸ்ட்? - ஆர். கண்ணன் பேட்டி

பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களைத் தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வதில் கெட்டிக்காரர் என்று பெயரெடுத்தவர் ஆர். கண்ணன். ஆர்யா, ஹன்சிகா நடித்த சேட்டை படத்தைத் தொடர்ந்து தற்போது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தை ஒரே மூச்சில் இயக்கி முடித்திருக்கிறார். ஆனால் இந்தமுறை ‘ஒரிஜினல் கதையுடன்’ களமிறங்கியிருக்கிறார்... தி இந்துவுக்காக அவரைச் சந்தித்ததிலிருந்து...

ஜப் வி மெட் படம் உங்கள் இயக்கத்தில் ‘கண்டேன் காதலை’ என்ற ரோட் மூவியாக உருவானது. தற்போது இந்தப் படமும் ரோட் மூவி என்று கேள்விப்பட்டோம்?

ஆமாம். முதல் பாதிப் படம் ரயிலிலும், இரண்டாம் பாதி முழுக்க நெடுஞ்சாலையிலும் பயணிக்கும் கதை. தூத்துக்குடியில் ஆரம்பிக்கிற பயணம் சென்னையில் முடியும். விமல், சூரி, ப்ரியா ஆனந்த் மூவரும் ஒரே ரயிலில் பயணிப்பார்கள். அந்தப் பயணம், அவர்களது வாழ்க்கையை என்னவாக மாற்றுகிறது என்பதுதான் படத்தின் மையக் கரு.

படம் முழுக்க ஒரு டிராவல் மூட் இருக்கும். நான் இதுவரை எடுத்த படங்களில், கஷ்டப்பட்டு எடுத்த படம் இது என்று சொல்லலாம். 15 நாட்களுக்கு ஒரு ரயிலை வாடகைக்கு எடுத்துப் படப்பிடிப்பு நடத்தினோம். ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு என்பது சாதாரண விஷயமில்லை.

சூரி இந்தப் படத்தில் இரண்டாவது நாயகனா?

அழகு என்ற பாத்திரத்தில் விமலும், மைக்கேல் என்ற பாத்திரத்தில் சூரியும் அடிக்கும் காமெடி ரசிகர்களைக் கண்டிப்பாக வசியப்படுத்தும். சூரியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் கதாபாத்திரம் என்று சொல்லலாம். என்னுடைய எல்லாப் படங்களையும் புத்துணர்ச்சி இருக்கும். சூரியை முடிவு பண்ணிய உடனே, அவர் இதுவரைக்கும் பண்ணாதாடான்ஸ், ஃபைட் எல்லாம் பண்ண வைச்சிருக்கேன். ஏதாவது புதிதாகப் பண்ணினால் ரசிகர்கள் கண்டிப்பாக விரும்புவார்கள் என்பதால் வந்த எண்ணம்தான் இது. நான் நினைத்ததை விடச் சூரி பிரமாதமாகப் பண்ணியிருக்கார்.

உங்க படங்களுக்குத் தலைப்பு அத்தனையும் வித்தியாசமே இருக்கே! எங்கேயிருந்து பிடிக்கிறீங்க?

தலைப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பவன் நான். 'ஜெயம் கொண்டான்', ‘கண்டேன் காதலை', 'வந்தான் வென்றான்', ‘சேட்டை' இப்போ 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' இப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் எனது படங்களின் தலைப்பு வித்தியாசப்படும்.

‘சேட்டை' படத்திற்கு நான் வைத்த தலைப்பு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. ஆனால், அந்தத் தலைப்பு வேண்டாம் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறியதால் மாற்றினேன். இப்போ எல்லாருமே அந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுறாங்க.

ரீமேக் படங்கள் பண்ணுவதற்கும், நேரடிக் கதையைப் பண்ணுவதற்கும் என்ன வேறுபாட்டை உணர்ந்தீர்கள்?

ரெண்டுமே கஷ்டம்தான். சொந்தக் கதை பண்ணும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். அந்தச் சந்தோஷம் எனக்கு ரீமேக் படங்கள் பண்ணும்போது இருப்பதில்லை. அதுமட்டுமன்றி, ரீமேக் படங்கள் பண்ணும்போது நிறைய விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். காரணம், ஒரிஜினல் படத்தோடு கம்பேர் பண்ணிப் பார்ப்பார்கள்.

எப்போதுமே சொந்தக் கதை பண்ணும்போது நிறைய நேரம் எடுத்துக் கொள்வேன். ‘ஜெயம் கொண்டான்' 2 வருஷம் பண்ணிய கதை, ‘வந்தான் வென்றான்' ஒன்றரை வருஷம் பண்ணினேன். ஆனால், ரீமேக் படங்களுக்கு 6 மாதம் போதுமானது.

லட்சுமி மேனனைப் பாடகியாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இது உங்க ஐடியாவா, இசையமைப்பாளர் ஐடியாவா?

100% இமான் ஐடியாதான். இந்தப் பாட்டுக்கு ஒரு புதுமையான வாய்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். ரொம்ப நேரம் யோசித்தார். ‘கும்கி' புரோமோஷன் நேரத்துல லட்சுமி மேனன் பாடி நான் கேட்டிருக்கேன். அவங்க குரலைப் பயன்படுத்தலாமா என்று என்னிடம் கேட்டார். அப்புறம், நான் வரச்சொல்றேன், டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம் என்று கூறி லட்சுமி மேனனை வரச் சொன்னார்.

லட்சுமி மேனன் வந்தவுடனே, இமான் பாடிக் காட்டினார். உடனே பாடும் அறைக்கும் சென்று, ஒரே டேக்கில் பாடி அசத்தி விட்டார்.

அடுத்து நேரடிக் கதையா, ரீமேக்கா?

என்னிடம் ரொம்ப நாளா ‘அலங்காரம்' என்ற கதை இருக்கு. கதை, திரைக்கதை இப்படி எல்லாமே முடிஞ்சு முழுவடிவம் கொடுத்து வைச்சுருக்கேன். அதுதான் என்னுடைய அடுத்த படமாக இருக்கும். பெரிய நிறுவனம் மற்றும் ஹீரோவுடன் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் முடிவாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x