Published : 07 Feb 2019 07:06 PM
Last Updated : 07 Feb 2019 07:06 PM
சமூகத்தின் மீதும் சக மனிதன் மீதும் அன்பை, அக்கறையைப் பொழியக் கற்றுத்தரும் படங்கள் சேரனுடையவை. இம்முறை ‘திருமணம் – சில திருத்தங்களுடன்’ என்ற படத்தின் மூலம் கல்யாணக் கதை சொல்ல வந்திருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..
திருமணம் பற்றிய புரிதலை எடுத்துக் கூறத்தான் இந்தப் படமா?
ஒரு திருமணம்ன்னு வந்துட்டா அதுல கௌரவம், கருத்து வேறுபாடு, வரதட்சணை, ஒற்றுமையின்மை, மரியாதை இப்படி ஆயிரம் கிளைக்கதைகள் இருக்கு. திருமணத்துக்குப் பிறகு ஏற்படுகிற உளவியல்ரீதியானபிரச்சினைகள் என்ன, அவற்றை எப்படிச் சரிசெய்வது?
திருமணம் நடப்பதற்கு முன்பே இதை எப்படி யோசிக்க முடியும்கிற கோணத்துலதான் இதுல தொட்டிருக்கேன். ‘தவமாய்த் தவமிருந்து’படத்துல அப்பாவோட அன்பு, ‘ஆட்டோகிராஃப்’ படத்துல கடந்து வந்த காதலின் நினைவுகள் பற்றியும் தாக்கம் உருவான மாதிரி, திருமணம்ன்னு வந்துட்டா எல்லாரும் தங்களைத் தொடர்புபடுத்தி பார்க்கிற படமா இது இருக்கும்.
படத்தில் உங்களது கதாபாத்திரம்?
என் படங்களில் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரமும் ஒவ்வொரு நேரத்துல கதையை நகர்த்திக்கொண்டு போவாங்க. இந்தப் படத்துல முக்கிய கதாபாத்திரம் தம்பி ராமையாவோட பையன் உமாபதி. தன்னோட திறமையால முன்னுக்கு வரணும்னு ஓடுகிறவர். கதையில நான் ஒரு மையப்புள்ளி. சுகன்யா படம் முழுக்க வாராங்க. அப்படி ஒரு ரோல். எனக்கு மாமாவாக தம்பி ராமையா வர்றார்.மனோபாலா, பாலசரவணன்னு நிறையப் பேர் இருக்காங்க. ஒவ்வொருவரும் கதையோடஒவ்வொரு காலகட்டத்த பேச வைப்பாங்க.
இன்றைய ரசிகர்களிடம் கதைப் படங்களை ரசிக்கும் பொறுமை இருப்பதாக நினைக்கிறீர்களா?
நல்ல படங்களைப் பார்க்க ரசிகர்கள் எப்போதும் தயாராகவே இருக்காங்க.இடைப்பட்ட காலத்துல ஒரு அலை வந்தது.அதுல சினிமாவோட தன்மை மாறுச்சு. அந்த அலையால ரசிகர்கள் பின்தங்கிதான் நின்னாங்க. இப்போ ‘பரியேறும் பெருமாள்’, ‘கனா’, ‘96’ போன்ற படங்களை நன்றாகக் கொண்டாடுறாங்க. இனி இந்த மாதிரி படங்கள்தான் ஓடும்.
‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தேசியகீதம்’ மாதிரியான உங்களது படங்கள் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்துகிறதே?
ஒரு திரைப்படம் காலம் கடந்து பேசப்படுகிறது என்பதைவிட அப்போது நிலவிய சமூகப் பிரச்சினைகள் இன்றைக்கும் தீர்ந்தபாடில்லை என்பதையே இது காட்டுகிறது. அந்த வகையில பார்க்கும்போது இன்னும் சமூகத்துல குறைபாடுகள் குறையவே இல்லை. என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு இது வேதனையை அளிக்கக் கூடியது.
நீங்கள் நாயகனாக நடித்திருக்கும் ‘ராஜாவுக்குசெக்’ படத்தில் நீங்கள்தான் ராஜாவா அல்லது ராஜாவுக்கு நீங்கள் செக் வைக்கிறீர்களா?
அந்த சஸ்பென்ஸை இப்போ சொல்ல முடியாது. அது எமோஷனல் திரில்லர் படம். என்னோட கதாபாத்திரம் ரொம்பவே அழுத்தமாக இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை உருவாக்கும் இயற்கையாக அமைந்த திருப்பங்கள் கொண்ட படம். நான் ரசித்து நடித்த கதை.
விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை எப்போதுதொடங்கப் போகிறீர்கள்?
இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்னு உறுதியானதும், ‘கதையைத் தயார்செய்யுங்க’ன்னு விஜய்சேதுபதி சொன்னார். கதை தயார். இதற்கிடையில அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் வரிசையாகப் படப்பிடிப்புகள் நடக்குது. நாங்கள் திட்டமிட்டிருப்பது பெரிய படம். ‘தயாரிப்பாளரை நானே தருகிறேன்’ என்று சேது கூறியிருக்கிறார். இந்தப் படம் வெளியானதும் இதே தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் இயக்கப்போகிறேன். அடுத்து விஜய்சேதுபதி படத்தைத் தொடங்குவதாக திட்டம்.
சினிமா நிகழ்ச்சிகளில் இப்போதெல்லாம் உங்களை அதிகம் பார்க்க முடிவதில்லையே?
இன்னைக்கு இருக்குற சூழல்ல எல்லாவற்றையும் மாற்ற முடியுமான்னுதெரியல. எனக்குன்னு சில கருத்துகள் இருக்கு. அதுக்கு என்கிட்ட சினிமா என்ற கலைஇருக்கு. இனி அது வழியே என் கருத்துகளை மக்களிடம் கொண்டு போகலாம் என இருக்கிறேன். மாறக்கூடியவர்கள் அதைப் பார்த்து மாறட்டுமே.
இந்த இடைவெளிக் காலம் உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
சினிமாவை நேசிப்பவன் நான். கடந்த மூன்று ஆண்டுகளில் நிறையப் பிரச்சினைகளைச் சந்தித்தேன். சேரனுக்குப் பிரச்சினைன்னு உலகம் முழுக்க தெரிந்த நிலையிலும் வெள்ளைசேது என்ற மனிதரின் அன்பால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பிரேம்நாத் நட்பு கிடைத்தது. நான் திரும்பவும் படம் இயக்க வேண்டும் என்பதுதான் அவர்களது விருப்பமாக இருந்தது. இந்த நேரத்தில் இருவருக்கும் நன்றி. ஒரு அறிமுக இயக்குநராக ‘பாரதி கண்ணம்மா’ படம் எடுத்தப்போ இருந்த சேரனைவிட இப்போ இன்னும் எனர்ஜியோட இருக்கேன்.
சேரனின் ‘சினிமா டு ஹோம்’ (C2H) திட்டம் இனி?
ஒரு தனி மனிதனாக அதை நான் மட்டுமே செய்ய முடியாது. எனக்கும் அந்த எண்ணம் இல்லை. யாராவது அதைத் தொடுவோம் என்று முன்வரும்போது அந்த சிஸ்டத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அப்போது இணைந்து பணியாற்றவும் செய்வேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT