Published : 22 Feb 2019 11:20 AM
Last Updated : 22 Feb 2019 11:20 AM
குப்பையைப் போல நாள்தோறும் அறிமுகமாகும் குறும்படங்கள் அதன் வடிவத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன. ஆனால், சமூகத்தின் பாய்ச்சலில் கண்டுகொள்ளப்படாமல் விடப்படும் சக மனிதப் பிரச்சினைகள் சார்ந்து கதைக் கருவைத் தேர்ந்துகொள்ளும் சில குறும்படங்கள் செய்நேர்த்தியுடன் வெளிப்பட்டு நம்மை ஈர்க்கத் தவறுவதில்லை. சமீபத்தில் வெளியான ‘இயக்கி’ குறும்படம் அந்த வகைமையில் அடங்குகிறது.
சமீபத்தில் இந்தியா முழுவதையும் அதிரவைத்தது, தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் இழப்பு மட்டுமல்ல; தமிழகத்தைத் தாண்டியும் வருத்தத்தைக் காற்றில் கரைத்த கால் டாக்ஸி ஓட்டுநரின் தண்டவாளத் தற்கொலையும்தான். 26 நிமிடங்கள் ஓடும் ‘இயக்கி’ குறும்படம் கால் டாக்சி ஓட்டுநர்களின் மன அழுத்தம் மிகுந்த அன்றாட வாழ்க்கையை உண்மையான புரிதலோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
ஓலா, உபர் போன்ற பல பன்னாட்டு, உள்நாட்டு கால் டாக்ஸி நிறுவனங்களில் தங்களது கார்களை இணைத்துக்கொண்டு, ஒரு நாளைக்கு இத்தனை டிரிப்புகள் முடித்தால்தான் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துசேரும் என்ற ‘டார்கெட்’ கலாச்சாரம் அவர்களை எத்தனை அலைக்கழிக்கிறது என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறது இந்தப் படம்.
தங்கள் உணவையும் உறக்கத்தையும் மறந்து உறவுகளுக்காக அவர்கள் ஓட வேண்டியிருக்கும் அவலம் அதிர்ச்சி அளிக்கிறது. பட்டதாரி இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தற்காலிகத் தீர்வாக கால் டாக்ஸி தொழில் கைகொடுத்தாலும் சொற்ப வருமானத்துக்காக அவர்கள் சுயமரியாதையை இழக்க வேண்டி வருவதையும் கூறும் காட்சிகள் உண்மைக்கு வெகு நெருக்கமாக இருக்கின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபவெறிக்கு இலக்காகும், சமூகமும் நிறுவனங்களும் இவர்கள் நம்மிலிருந்து வந்தவர்கள் என்பதைப் பார்க்கத் தவறுவதன் விளைவை எடுத்துக்காட்டியிருக்கும் விதம் யதார்த்தத்தின் வலிமிகுந்த பதிவு.
செய்நேர்த்தியும் உண்மைகளும் கூடிய இக்குறும்படத்தின் திரைக்கதையும் காட்சியாக்கமும் எவ்வாறு சாத்தியமானது என யோசிக்கையில் ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறார், ‘இயக்கி’ குறும்படத்தை எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ஷான். “இந்தப் படத்தை இயக்குவதற்காக ஒரு கால் டாக்சி ஓட்டுநராக என்னை இணைத்துகொண்டு சுமார் 500 ட்ரிப்புகள் ஓட்டி, அதில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்தான் திரைக்கதை அமைத்தேன்” என்கிறார்.
இந்தப் படத்தில் நவீன காலச் சென்னையின் நிலப்பரப்புக் காட்சிகள், பயணிகளின் முகங்கள், கதை சொல்லும் கோணங்கள் எனக் கதைக்களத்துக்குள் நம்மை பிரவேசிக்க செய்யும் ஒளிப்பதிவைச் சாத்தியமாக்கியிருக்கிறார் ஜெய்னுல் ஜாஃப்ரி.
அதேபோல் இசையமைப்பாளர் விபின் ஆர், எடிட்டர் பிரேம்.பி, படத்தைக் காணத் துண்டும் வரைகலையைத் தந்திருக்கும் எஸ்.சந்திரன் என மொத்தத் தொழில்நுட்பக் குழுவும் நேர்த்தியான பங்களிப்பை அளித்திருக்கின்றன. இப்படி ஒரு குறும்படத்தைத் தயாரித்ததற்காக அமிகா புரொடக்ஷன்ஸ், ராட்காஸ்ட் மீடியா ஆகிய இரு நிறுவனங்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. இன்றைய தேவையில் ‘இயக்கி’ போன்ற குறும்படங்களுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமான செயல்பாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT