Published : 26 Sep 2014 11:01 AM
Last Updated : 26 Sep 2014 11:01 AM
மதராசப்பட்டினம் படத்தில் ‘வெள்ளைக்காரப் பெண்மணி’யாகவே அறிமுகமானார் பிரிட்டன் நாட்டின் மாடலான ஏமி ஜாக்சன். அந்த ஒரு கதாபாத்திரத்தோடு கிளம்பிவிடுவார் என்று பார்த்தால், இன்றைய முன்னணி தமிழ்க் கதாநாயகிகளுக்குக் கடும் சவாலாக ஈடுகொடுக்கிறார். ஐ படத்தில் ஜீன்ஸ், புடவை எனக் கலக்கியிருக்கும் அவரை அந்தப் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் பிடித்தோம்.
உங்களுக்கு மொழி ஒரு பிரச்சினையாக இல்லையா?
திரும்பத் திரும்ப ஒரு மொழியையே கேட்கும்போது, அது எளிதாகிறது என்று நினைக்கிறேன். காதலுக்கு எப்படி மொழியில்லை என்கிறார்களோ, அதேபோல் சினிமாவுக்கும் மொழி ஒரு தடையில்லை என்று நினைக்கிறேன். முழுக்க முழுக்க உணர்வுகளையும் காட்சிகளையும் சார்ந்த கலை இது. இங்கே உணர்ச்சிகளைச் சரியாக வெளிப்படுத்த வேண்டும். அதுதான் முதல் படி.
அதன் பிறகு வார்த்தைகள் தாமாகவே உங்களைப் பின்தொடரும். சென்னை வந்த பிறகு இங்கேதான் என் நாட்களை அதிகமும் செலவிடுகிறேன். என்னால் இப்போது ஓரளவு தமிழில் பேச முடியும். ‘ஐ’யில் முன்னேற்றத்தைப் பார்ப்பீர்கள்.
மாடலிங்கை மறந்துவிட்டீர்களோ?
மாடலிங் என்னை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் மதராசப்பட்டினம் படத்திற்குக் கிடைத்த பாராட்டுகளுக்குப் பிறகு நடிப்புதான் நம்ம ஏரியாஎன்று முடிவு செய்தேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் மாடலிங் தொடரும்.
விஜய், கௌதம் மேனன், ஷங்கர் ஆகிய இயக்குநர்களில் யாரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
உண்மையாகவே இவர்களில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது. நான் புகழ்பெற்ற கதாநாயகியாக இருப்பதற்கு இயக்குநர் விஜய்தான் காரணம். அதை மறக்க முடியாது. எனக்கு உதவியோ அறிவுரையோ தேவைப்பட்டால் இயக்குநர் விஜயிடம் பெற்றுக்கொள்வேன். கௌதம் காதலை அணுவணுவாக ஆராய்ச்சி செய்யும் செல்லூய்ட் கவிஞர்.
ஷங்கர் சார் இயக்கத்தில் இத்தனை சீக்கிரம் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ‘ஐ’ படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு கணத்தையும் ரசித்தேன். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் மனதளவிலும் வளர்ச்சியடைந்திருக்கிறேன். அதற்குக் காரணம் ஷங்கர். எனது வளர்ச்சியில் அவருக்கு முக்கியப் பங்கிருக்கிறது.
விக்ரமுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து விட்டீர்களே?
ஆமாம்! அது அதிர்ஷ்டம்தான்.ஐ படத்தின் கதாபாத்திரத்துக்கான அவருடைய அர்ப்பணிப்புக்கு ஐ விட்னஸ் நான். கண்டிப்பாக அந்தக் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரும் நடித்திருக்க முடியாது. இது மிகையல்ல.
தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர் யார்?
இங்கு வரும்போதெல்லாம் நடிக்க மட்டுமே வருவதால், நண்பர்களோடு அதிகமாக வெளியே செல்வதில்லை. தமிழ் சினிமாவில் என்னுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் ஆர்யா. மதராசப்பட்டினம் படத்திலிருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம்.
ஏமி குடும்பத்துக்குக் கட்டுப்பட்ட பெண்ணா?
அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு! என் அம்மாவும் அப்பாவும்தான் எனக்குத் தூண்கள். தற்போது என் அப்பா என்னுடன் சென்னையில் இருக்கிறார், அது மட்டுமில்லாமல் ‘ஐ’ படப்பிடிப்பு முழுமையாகவே என் அம்மா என்னுடன் இருந்தார், எல்லா இடங்களுக்கும் வந்தார்.
சின்ன வயதிலிருந்தே நான் சுதந்திரமாக வளர்ந்தேன், எனக்கான முடிவுகளை நானே எடுப்பேன், இதுவரை எப்போதும் என்னுடைய குடும்பத்தின் வழிகாட்டுதல் எனக்கு இருந்திருக்கிறது, இனிமேலும் இருக்கும்.
உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய உணவு?
பணியில் இடைவெளி கிடைத்தால் கேரளா சென்று வருவேன். தேங்காய் சேர்த்த அனைத்துமே எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடித்த உணவுகள் மீனும், வெஜிடபிள் ஸ்டூவும் (vegetable stew).
அடுத்து தமிழில்?
சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. சூர்யாவோடு நடிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT