Published : 11 Jan 2019 03:49 PM
Last Updated : 11 Jan 2019 03:49 PM

விடைபெறும் 2018: சினிமா புத்தகங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் காமிக்ஸ் திரைக்கதை!

திரைக்கதையின் காட்சிகள் அனைத்தையும் காமிக்ஸ் வடிவில் தந்த முதல் முயற்சி இது. ஸ்டோரி போர்டு தன்மையுடன் வரையப்பட்ட இந்தப் புத்தகம் முழுமையான முயற்சியாகவும் வெளிப்பட்டிருப்பது ஆச்சர்யம்.

விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ் | விலை ரூ.250 |

 

கினோ l கிறிஸ்டோபர் கென்வொர்தி | தமிழில்: திஷா

திரைப்படக் கல்லூரிகளில் லட்சங்களைச் செலவழித்தும் உதவி இயக்குநராகப் பல ஆண்டுகளைத் தொலைத்தும் சினிமாவைக் கற்றுகொண்ட காலம் மலையேறிவிட்டதற்கு இந்த மொழிபெயர்ப்பு நூல் சிறந்த சாட்சி. இந்த இரண்டு வழிகளையும் தவிர்த்துவிட்டு சினிமா கற்றுக்கொள்ளும் சாத்தியத்தை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம். விலை: 350

வெளியீடு: பேசாமொழி பதிப்பகம்

 

நிழற்பட நினைவலைகள் - ஒரு ரீவைண்ட் | l நேஷனல் செல்லையா | தொகுப்பாசிரியர்: பொன்ஸீ

இரண்டு தலைமுறைக் கலைஞர்களோடு சுமார் 60 ஆண்டுகள் 450 திரைப்படங் களில் பணியாற்றியவர் ஒளிப்படக் கலைஞர் ‘நேஷனல்’ செல்லையா. அவர் தனது நிழற்பட நினைவுகளைச் சுகமாக அசைபோட்டிருக்கிறார். மூடப்பட்டுவிட்ட ஸ்டுடியோக் களுக்குள் நம் விரல்பிடித்து அழைத்துச் செல்லும் புத்தகம்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ் | விலை ரூ.130

 

2019-ல் கவனம் ஈர்க்கும் புதுவரவுகள்

‘படத்தொகுப்பு: கலையும் அழகியலும்' l ஜீவா பொன்னுச்சாமி D.F.Tech.

படத்தொகுப்பு எப்படி நிகழ்கிறது, விதிகள், வகைகள், அடிப்படைத் தொழில்நுட்ப அம்சங்கள், அதன் ஐந்து முக்கியக் கூறுகள், பாடல் காட்சி- சண்டைக் காட்சிகளைப் படத்தொகுப்பு செய்யும் விதம்,  ஒலியில் படத்தொகுப்பு செய்யும் விதம், டைட்டில் பயன்பாடு, படத்தொகுப்புக்கு உதவும் மென்பொருட்கள், படத்தொகுப்பாளர்கள் குறித்த பட்டியல், வரலாறு எனப் படத்தொகுப்புத் துறையை மிக எளிமையாகவும் அழகாகவும்  விரிவாக எழுதியுள்ளார் திரைப்படக் கல்லூரி மாணவரான ஜீவா பொன்னுச்சாமி.

வெளியீடு: நிழல் - பதியம் பிலிம் அகாடமி |  விலை ரூ.350

 

திராவிட இயக்கமும் திரைப்படவுலகமும் l க.திருநாவுக்கரசு

அரசியலில் தீவிரமாக விளங்கிய திராவிட இயக்கம், அதே அளவுக்குத் தீவிரத்தோடு நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் இயங்கியது. டி.வி.நாராயணசாமி, கே.ஆர்.ராமசாமி, வளையாபதி முத்துகிருஷ்ணன் என்று ஏகப்பட்ட நடிகர்கள்., ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.ஜி.ராதாமணாளன், இராம.அரங்கண்ணல் என்று பல்வேறு வசனகர்த்தாக்களை உள்ளடக்கியது திராவிட இயக்கத்தின் கலையுலகப் பங்களிப்பு. இன்றைய தலைமுறைக்கு அறிமுகமில்லாத பல அரசியல் தலைவர்களையும் திரைக்கலைஞர்களையும் விரிவான தகவல்களோடு அறிமுகப்படுத்தும் நூல்.

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம் | விலை: ரூ.350

 

எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை l யமுனா ராஜேந்திரன்

திரைப்பட விமர்சனம் என்பது எல்லோரது கைக்கும் சென்றுவிட்ட காலம் இது. யமுனா ராஜேந்திரன் போன்ற தீவிர விமர்சகர்களின் பார்வை, அக்கலையை அதன் பம்மாத்துக்களில் இருந்து காப்பாற்றி வளர்க்கக்கூடியது என்பதை உணர்த்தும் புத்தகம் இது. உலக, இந்திய, தமிழ் சினிமாக்களை பற்றிய முழுமையான விமர்சன நோக்குடன் அணுகும் அலசல் கட்டுரைகள். சினிமா ரசனையை உயர்த்திக்கொள்ளவும் சினிமா விமர்சனத்தைச் சரியாகக் கையாளவும் மறைமுகமாகக் கற்றுத்தரும் நூல்.

வெளியீடு: பேசாமொழி பதிப்பகம் | விலை ரூபாய். 400

 

இந்து தமிழ் வெளியீடுகள்

சினிமா எடுத்துப் பார்! l எஸ்பி.முத்துராமன்

எழுதாத திரைக்கதை இல்லை, இயக்காத நட்சத்திரம் இல்லை எனும் விதமாகத் திரை இயக்கத்தில் முத்திரை பதித்த திரை ஆளுமை எஸ்பி.முத்துராமன். ‘கல்யாணம் பண்ணிப் பார்… வீட்டைக் கட்டிப் பார்’ என்ற முதுமொழியுடன் ‘சினிமா எடுத்துப் பார்’ என்ற புதுமொழியைத் தனது 60 ஆண்டு சினிமா அனுபவத்தின் வழியாகப் பகிர்ந்திருக்கிறார். இது அவரது திரைப்பயணம் மட்டுமல்ல; தமிழ் சினிமா வரலாற்றின் திடமான ஒரு பகுதியும்தான். 

 

காற்றில் கலந்த இசை l எஸ்.சந்திரமோகன்

இளையராஜாவின் திரையிசையைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இது, ஆழ்ந்த அவதானிப்பும் உயர்ந்த ரசனையும் கொண்டு அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிவிடும் ரசனையை மொழி வழியே மீட்டிய முதல் முயற்சி. இசை சார்ந்த, அறிவுத் துறைச் சொற்களை நாடாமலேயே இளையாராஜாவின் திரைப்பாடல்களில் நீங்கள் உணர்ந்த அத்தனையையும் புதுவிதமாக உணர வைத்து சிலிர்க்கவும் வைக்கும் அழகியல் பார்வை.

 

எம்.ஜி.ஆர் 100 - காலத்தை வென்ற காவியத் தலைவர் l தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட நூற்றாண்டு நாயகர் எம்.ஜி.ஆர், திரையிலும் அரசியலிலும் பதித்துச் சென்ற சாதனைச் சுவடுகளின் தொகுப்பு. இந்து தமிழில் வெளியாகி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளின் நூல் வடிவம்.

மொழி பிரிக்காத உணர்வு l எஸ்.எஸ்.வாசன்

இந்தி - தமிழ் ஆகிய இருமொழித் திரையிசைப் பாடல்களில் இருக்கும் இசைரீதியான சிறப்பைக் கடந்து, வெவ்வேறு மொழிகள் என்ற எல்லையைக் கடந்து, அவற்றுள் மையம் கொண்டிருக்கும் ரசனையின் ஒற்றுமையையும் கவித்துவ மேன்மையையும் பற்றி, நம் நினைவுகளைக் கிளறிவிட்டுச் சுவைபடப் பேசும் புத்தகம். புகழ்பெற்ற இந்திப் பாடல்களுக்கு அவற்றின் அர்த்தம் மாறாமல் துல்லியமான ஆனால், கவித்துவமான மொழிபெயர்ப்பும் தந்திருப்பது சிறப்பு. தமிழ்த் திரையிசைக்கு இந்நூல் ஓர் அணிகலன்!

 

காலமெல்லாம் கண்ணதாசன் l ஆர்.சி.மதிராஜ்

காலத்தால் அழியாத திரைப் பாடல்களைத் தந்தவர் கவியரசு கண்ணதாசன். கதையோடு உறவாடும் மொழியைத் தனக்கென வரித்துக்கொண்டு அந்த நுட்பத்தின் மூலம் உச்சம் தொட்ட சாதனையாளர். வாழ்வின் எல்லாத் திசைகளிலும் பயணித்தது அவரது திரைத் தமிழ். பாடல் எனும் வடிவத்தின் வழியாகத் தமிழர்களின் நெஞ்சங்களில் இனிமை சேர்த்த கவியரசரின் சுவை மிகுந்த பாடல்களைத் தொட்டுத் தொடரும் ரசனைமிகு  கட்டுரைகள்.

- இவற்றோடு உங்கள் சினிமா ரசனையின் முகம் பார்க்க உதவும் கண்ணாடிபோல் கருந்தேள் ராஜேஷ் எழுதிய ‘சினிமா ரசனை’, திரையுலகின் வியாபார வெற்றியைப் பேசும் கோ.தனஞ்ஜெயன் எழுதிய ‘வெள்ளித்திரையின் வெற்றி மந்திரங்கள்’ ஆகிய நூல்களும் சென்னை புத்தகக் கண்காட்சியின் அரங்கு எண் 65 - 66-ல் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x