Published : 04 Jan 2019 11:58 AM
Last Updated : 04 Jan 2019 11:58 AM
முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்த ஆண்டில் முதல் படமாக வெளிவரவுள்ளது ‘தேவ்’. உலகத்தரம் வாய்ந்த அவரது ‘ஸ்டுடியோ ஹெச்’சில் மும்முரமாகப் பணிபுரிந்து கொண்டிருந்தவரிடம் பேசியதிலிருந்து...
2018-ல் உங்களுடைய இசையில் படம் வெளியாகவில்லை. ஏன்?
அதற்கு நான் காரணமல்ல. பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி நடிப்பில் உருவான ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்துக்கு சுமார் 6 மாதங்கள் பணிபுரிந்தேன். அப்படம் ட்ராப்பாகிவிட்டது. ‘துருவ நட்சத்திரம்’ வெளிவருவதாக இருந்தது. அதுவும் வெளிவரவில்லை. ‘தேவ்’ படமும் 2018 செப்டம்பரில் வெளிவரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் இப்போதுதான் தயாராகியுள்ளது. என் பணிகளை நான் செய்துகொண்டே இருந்தேன். 2019- ல் நிறையப் படங்கள் வரும்.
‘தேவ்’ பாடல்கள் குறித்து...
எப்போதுமே இளமை ததும்பும் படங்களுக்கு இசையமைப்பது எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் ‘வாரணம் ஆயிரம்’ படத்துக்குப் பிறகு அந்த பாணியில் அமைந்த படம் ‘தேவ்’. மொத்தம் 5 பாடல்கள் என்றாலும் 15 பாடகர்கள் பாடியுள்ளனர். அனைவரது வார்த்தை உச்சரிப்புமே மாறுபடும். அந்த வகையில் ஒவ்வொருவரையும் பாடவைத்து, எந்த வரி யாருடைய உச்சரிப்பில் அழகாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் இணைத்துப் பாடலாக்கியுள்ளேன். பாடல்கள் உருவாக்கத்திற்கு வெளிநாடு செல்வார் என்ற பெயர் எனக்கு உண்டு.
டியூன் உருவாக்கத்தின்போது எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என நினைப்பேன் எனவே, வெளிநாடு செல்லத் தோன்றும். நல்ல அமைதியான சூழலில்தான் நல்ல ட்யூன்கள் கிடைக்கும். இயக்குநருடன் சென்று டியூன்களை உருவாக்கும்போது, இருவருமே கதை, காட்சியமைப்புகள் குறித்து முழுமையாகப் பேசி இறுதி செய்ய முடிகிறது. ஆனால், இப்படத்தின் பாடல்கள் கொடைக்கானலில்தான் உருவாயின.
நீங்கள் மிக்ஸிங்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்களாமே. ஏன்?
சிற்பி, ஆதித்யன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் அனைவருமே டியூனை இறுதிசெய்து கொடுத்துவிடுவார்கள். அதைப் பாடலாக உருவாக்கும் பணி என்னுடையது. சுமார்
600-க்கும் மேற்பட்ட படங்களில் கீபோர்டு பிளேயராக வேலை செய்துள்ளேன். முன்பெல்லாம் பாடகர்களின் குரல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, இசைக் கருவிகளுடைய முக்கியத்துவத்தைக் குறைப்பார்கள். சில பாடல்களில் மிக்ஸிங் சரியாகவே இருக்காது. அப்படியொரு இரைச்சல் இருக்கும்.
அப்போது என்னென்ன தவறுகள் நடந்ததோ, அதெல்லாம் நாம் பண்ணக் கூடாது என முடிவு பண்ணினேன், இப்போது பாடல்களை உருவாக்குவதில் தொடங்கி, அதை மிக்ஸிங் செய்து, இறுதி செய்வதுவரை அனைத்தையும் நானே செய்கிறேன். அப்படிச் செய்வதால் முழுமையான திருப்தி கிடைக்கிறது. மேலும், வெளிநாடுகளில் சில திரையரங்குகள் மற்றும் ஸ்டுடியோக்களில் இசையின் துல்லியத்தைக் கணக்கிட என்னோட பாடல்களைப் போட்டு இறுதி செய்கிறார்கள். இதன் வீடியோக்கள் இணையத்திலேயே இருக்கின்றன. ஒரு படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகாமல் போகலாம். ஆனால், இசை அப்படியல்ல. பெயரே தெரியாத படத்தின் பாடல்கூட நம் நினைவில் நிற்கும்.
இசையமைப்பாளர்களின் ராயல்டி குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன?
உலக அளவில் மிகவும் போற்றப்படும் இசையமைப்பாளர் மொசார்ட். அவர் அரண்மனையில் பணிபுரிந்து வந்தார். அப்போது அரசாங்கம் சொல்லும் விஷயங்களுக்காக மட்டுமே இசையமைத்து வந்தார். அதற்கு அரண்மனை முழுச் செலவையும் செய்து வந்தது. இன்று இசையுலகில் மொசார்ட்டைத் தான் பல இசையமைப்பாளர்கள் கொண்டாடுவார்கள். அரண்மனை செலவு செய்து மொசார்ட் உருவாக்கிய இசைக்கு இப்போதும் ராயல்டி செல்கிறது. எங்கு தெரியுமா? அரண்மனைக்கு அல்ல. மொசார்ட் அருங்காட்சியத்துக்குச் செல்கிறது. இதுதான் என் நிலைப்பாடு.
ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்கிறீர்களா?
ரஜினி சாருடைய படத்துக்கு மட்டும் இன்னும் பணிபுரியவில்லை. அப்படியொரு விஷயம் நடந்தால் மகிழ்ச்சிதான். இதுவரை எதுவும் முடிவாகவில்லை. அவருடைய படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற ஏக்கமுள்ளது. ஆனால், உதவியாளராக இருந்தபோது பல ரஜினி சாருடைய படங்களுக்கு கீபோர்டு வாசித்துள்ளேன்.
கார், வாட்ச், ஷூ என உங்களிடம் இருக்கும் அனைத்துமே விலையுர்ந்ததுதான் என்று சொல்கிறார்களே, அப்படியா?
நான் அடிமட்ட குடும்பத்திலிருந்து வந்தவன். 10-வது வரை தான் படித்தேன். அதற்குப் பிறகு கீபோர்டு பிளேயரானேன். சிறுவயதிலேயே இசையமைப்பாளராகும் வாய்ப்பு வந்தது. அப்போது கொஞ்சம் கடன் இருந்தது. அதெல்லாம் அடைத்துவிட்டு தான் இசையமைப்பாளராக வேண்டும் என முடிவு பண்ணினேன். நான் கீபோர்டு பிளேயராக இருந்தபோது, பல முன்னணி இசையமைப்பாளர்கள் விலையுர்ந்த கார்களில் வருவதைப் பார்த்துள்ளேன்.
அப்போது, நாமும் இப்படி ஆக வேண்டும் என நினைத்தேன். கோட் போட்டுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழக் கூச்சப்படக் கூடாது என முடிவு செய்தேன். வசதி வந்தவுடன் வாழ்க்கை முறையை மாற்றினேன். விலையுர்ந்த கார் வைத்துக்கொண்டு நான் பார்ட்டிகள், பப்புகளுக்குச் செல்வதில்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் சர்ச்சுக்குச் செல்வேன். என்னை மாதிரியாக வேண்டும் என இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
படம்: பி.கே.பிரவின்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT