Published : 04 Jan 2019 11:58 AM
Last Updated : 04 Jan 2019 11:58 AM
பொழுதுபோக்கு என்பதை அடையாளமாகக் கொண்ட இந்திய சினிமாவுக்குக் கலையும் கருத்தும் கொண்ட பரிணாமத்தை வழங்கிய படைப்பாளிகள் என்று சத்யஜித் ரே, ரித்விக் கட்டக் ஆகியோரின் வரிசையில் மிருணாள் சென்னும் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் 1923-ல் பிறந்த மிருணாள் சென், தனது மாணவப் பருவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலாசாரப் பிரிவில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். கட்சியின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், சமூக யதார்த்தங்களைக் கூர்மையாகத் தனது சினிமாக்களில் பிரதிபலித்த மார்க்சிஸ்ட் படைப்பாளி அவர். இந்தியத் தொழிலாளி வர்க்கத்தினரின் உணர்வுகளை நெருங்கிப் படம்பிடித்த இயக்குநர் அவர்.
புதிய சினிமா அலை: மிருணாள் சென் 1956-ல்முதல் கதைப்படமாக எடுத்த ‘ராத் போரே’ படம் அவராலேயே மோசமானது என்று நிராகரிக்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எடுத்த ‘பைசே ஷ்ரவண்’ ஒரு புதிய படைப்பாளியின் வருகையை அறிவித்தது. வங்காளத்தில் ஏற்படும் பஞ்சத்தால் நிலைகுலைந்து போகும் காதலின் கதையை நெகிழ்ச்சியாகச் சொல்லியிருப்பார் மிருணாள் சென்.
வங்கப் பிரிவினை ரித்விக் கதக்கைப் போன்றே மிருணாள் சென்னையும் வெகுவாகப் பாதித்த நிகழ்வு. “ஒரு பஞ்சத்தின் இயல்பு, குரூரம், அசிங்கத்தை நான் காண்பிக்க நினைத்தேன்” என்று இந்தப் படம் பற்றிப் பின்னர் நினைவுகூர்ந்தார். இந்திய அரசின் நிதியுதவியுடன் குறைந்த பொருட்செலவில் இவர் எடுத்த ‘புவன் ஸோமே’ திரைப்படம், இந்திய சினிமாவில் புதிய அலை உருவானதன் அடையாளம். அத்திரைப்படத்துக்காக அவருக்குத் தேசிய விருதும் கிடைத்தது.
‘ஏக்தின் பிரதிதின்’, ‘அகாலேர் சந்தானே’, ‘கந்தர், கோரஸ்’, ‘மிருகயா’ ஆகியவை அவரது சிறந்த படங்களாக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கருதப்படுபவை. ‘மிருகயா’ படத்தில்தான் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார். கினுவா என்ற மறக்க முடியாத பழங்குடிக் கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதையும் பெற்றார். கல்கத்தா என்ற நகரை மையக் கதாபாத்திரமாக்கி இவர் எடுத்த ‘இன்டர்வியூ’, ‘கல்கத்தா 71’, ‘பதாடிக்’ ஆகிய ட்ரையாலஜியே இவரது மாஸ்டர் பீஸ் படைப்பு எனக் கருதப்படுகிறது.
விருது குவித்த இயக்குநர்: கதை சொல்வதில் மட்டுமல்ல, சினிமா தொழில்நுட்பத்திலும் சாகச உணர்வைக் கொண்டிருந்த மிருணாள் சென்னின் திரைப்படங்களில் ஜம்ப்கட், மாண்டேஜ், ப்ளாக் அவுட், பாய்ண்ட் ஆப் வியூ ஷாட்கள் ஆகியவை பிரதான அம்சங்களாக இடம்பெற்றன. கேன், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ என சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை அதிகம் குவித்தவர் மிருணாள் சென்தான். பிரேம்சந்த் இந்தியில் எழுதிய ‘கஃபான்’ என்னும் சிறுகதையை அடிப்படையாக வைத்து இவர் தெலுங்கில் உருவாக்கிய ‘ஒக ஊரி கதா’வும் அவரது பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று.
கதைக்கரு, பாணி, வடிவம், மொழி எனத் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருந்தவர் மிருணாள் சென். “இலக்கியம், ஓவியம், இசை, மொழி எல்லாம் வடிவங்களிலும் எல்லா அம்சங்களிலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சினிமா மட்டும் ஏன் அப்படியே இருக்க வேண்டும்? நான் தொடர்ந்து என் கதை சொல்லலை மாற்றிக்கொண்டே இருந்தேன்” என்று ஒரு நேர்காணலில் கூறுகிறார்.
இந்தி சினிமாவை மாதிரியாகக் கொண்டு கேளிக்கையையே மையமாகவும் பொழுதுபோக்கையே முகமாகவும்கொண்டிருந்த இந்திய சினிமாவுக்குக் கலை முகத்தைக் கொடுத்த ஒரு தலைமுறை இயக்குநர்களில் ஒருவர் விடைபெற்றுக்கொண்டார்.‘பைசே ஷ்ரவண்’ திரைப்பட போஸ்டர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT