Published : 21 Dec 2018 10:03 AM
Last Updated : 21 Dec 2018 10:03 AM
“ஐயா கேரக்டருக்காக தயாரானவுடனே, என் மனைவி குழந்தைகளுக்கு போன் பண்ணி 'எல்லாரும் தயாராகி வாங்க. பேமிலி போட்டோ எடுப்போம்' என்று கூப்பிட்டேன். ஏனென்றால், தன்னோட அப்பா வயதானவராக இருக்கும்போது போட்டோ எடுக்குற கொடுப்பினை எத்தனை பேருக்கு கிடைக்கும்னு தெரியல. என்னைப் பார்த்தவுடனே 'சூப்பரா இருக்குப்பா' என்று குழந்தைககளும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க" என்று தன் குடும்பத்தினர் அடைந்த சந்தோஷத்தை பகிர்ந்தபடி பேசத் தொடங்கினார் விஜய் சேதுபதி.
'சீதக்காதி' படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது இது வேறு வகை என்று தோன்றுகிறதே?
இப்படம் கலைக்கு சமர்ப்பணம். அது எந்தக் கலையாக இருந்தாலும் சரி. ஐயா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க முடியுமா என்று ரொம்பவே சந்தேகப்பட்டேன். படமாகப் பார்த்தவுடன் ஓரளவு பண்ணிருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்துருக்கு. ஒரு நடிகனாக நம்பிக்கை சற்று அதிகமாகியிருக்கு.
உங்கள் நண்பர், அப்படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரனுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்?
நமக்கு ஏற்றவாறு சினிமாத்துறை மாறாது. நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும். நல்ல இயக்குநராக இருப்பதோடு நில்லாமல், நல்ல வியாபாரியாகவும் இருக்க வேண்டும். நம் படத்தை மக்களை ப்பார்க்க வைக்கும் வேலைகளையும் நாம் செய்ய வேண்டும் என்ற அறிவுரை அவருக்குப் பலமுறை சொல்லியிருக்கேன்.
ரஜினியுடன் நடித்ததை ஒவ்வொரு காட்சி படமாக்கப்பட்ட பின்னரும் எப்படி உணர்ந்தீர்கள்?
‘மேற்குத்தொடர்ச்சி மலை', ‘96' போன்ற படங்களைப் பார்த்துவிட்டு பேசினார், பாராட்டினார். அதையெல்லாம் தாண்டி அவரோடு வேலை பார்த்ததைத் தான் பெரிதாக நினைக்கிறேன். ‘பேட்ட' படத்தில் இரண்டு பேருக்குமான காட்சிகளில், என் வசனத்தை எல்லாம் படித்துவிட்டு, இப்படி நடிக்கலாம் என்று போவேன். ஆனால், ரஜினி சார் ஒவ்வொரு முறையும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் நடிப்புக்கு முன், நான் நினைத்ததைத் தாண்டி வேறொன்றைக் கொடுப்பது மாதிரி ஆகிவிட்டது.
‘பேட்ட’ ஆடியோ விழாவில் ரஜினி உங்களை ‘மகா நடிகன்’ என்று புகழ்ந்தார். அதைப் பற்றி?
அது எனக்குக் கிடைத்த பொக்கிஷம். ரஜினி சார் உதிர்த்த அந்த வார்த்தைகள் என்னுடைய சொந்தம். எங்களைப் போன்றவர்களுக்கு ரஜினி சார், கமல் சார் தான் வழிகாட்டிகள். அவர்களின் பாதிப்பு இல்லாமல் நாங்கள் யாரும் சினிமாவுக்குள் வந்திருக்கவே முடியாது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் அன்பு செலுத்தும் ஒருவரிடம் இருந்து வரும் இதுபோன்ற வார்த்தைகளை மிகப் பெரியதாக நான் பார்க்கிறேன்.
‘சூப்பர் டீலக்ஸ்' படத்தில் உங்களுடைய தோற்றத்துக்குக் கிடைத் திருக்கும் வரவேற்பு பற்றிக் கூறுங்கள். அந்தப் படத்தின் இயக்குநர் பற்றியும்..
வரவேற்பை எல்லாம் விடுங்க. முதலில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவை ரொம்பவே நேசிக்கிறேன். அந்த மனுஷன் படத்தில் நடித்தால் நம்மை வைச்சு செய்வார். அதற்குக் காரணம் அவருக்கு சினிமா மீதிருக்கும் காதல் தான். எத்தனை வருடங்கள் கழித்து அந்தப் படத்தைப் பார்த்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சுருக்காங்கப்பா என்று சொல் வார்கள். அப்படியிருக்கிறது அவரது மெனக்கெடலும் உழைப்பும். ஆனால் இந்தப் படம் பண்ணினால் நமக்கு இந்த விருதுகள் எல்லாம் கிடைக்கும் என எண்ணி அவர் படம் பண்ணுவதில்லை என்பதுமட்டும் நிச்சயம்.
ஒரு முன்னணிக் கதாநாயகன் திடு திப்பென்று திருநங்கையாக நடித்துவிட முடியுமா?
திருநங்கையாக ஒருவர் மாறுவது சாபம் கிடையாது. இந்தச் சமூகம் அதைச் சாபமாக பார்க்கிறது. திருநங்கையாக நடிப்பதற்கு நான் போய் யாரையும் சந்திக்கவில்லை. நான் திருநங்கையாக உணர்ந்து தான் அந்தப் படத்தில் நடித்தேன். அக்கதையை என்னிடம் அவர் சொன்னவுடனே, நடிக்கிறேன் என்று சொல்லிட்டேன். ஆனால், நீங்கள் ஹீரோ, ஒரு வாரம் டைம் எடுத்துச் சொல்லுங்கள் என்றார். எப்போது கேட்டாலும் நான் நடிக்கிறேன். இதில் நான் இருக்கணும். அவ்வளவு தான் என்றேன்.
தற்போது வெப்சீரிஸ் காலம் தொடங்கி யிருக்கிறது. உங்களுக்கு அதில் நடிக்கும் எண்ணம் ஏதேனும் உள்ளதா?
அதுவொரு வகை. அதில் நடித்தால் மக்களிடம் போய் சேரமுடியும் என்றால் நடித்துதான் ஆக வேண்டும். அனைவரது கையிலும் போன் வந்துவிட்டது. ஆகையால், பயணிக்கும் போது பார்த்துக் கொண்டே போகிறார்கள். இது வரைக்கும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஒன்றுகூடப் பார்த்ததில்லை. நேரமில்லை. பொதுமக்களோடு சிரித்துப் பழகி மகிழ்விப்பவன் கலைஞன். ஆகையால், சினிமாவைத் தாண்டி மிகக் குறைந்த தொகையில் பொழுது போக்கு எதுவுமே இல்லை. என்ன வந்தாலும் அதற்கு அழிவு கிடையாது
படம்: தீரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT