Published : 28 Dec 2018 10:52 AM
Last Updated : 28 Dec 2018 10:52 AM
திரைப்படங்களை இயக்குவது, தயாரிப்பது ஆகியவற்றின் வழியாக விவாதங்களை உருவாக்க முயலும் இயக்குநர்களில் பா.இரஞ்சித் முக்கியமானவர். திரைப்படத்துக்கு அப்பால், 'நீலம் பண்பாட்டு மையம்' என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் பலவிதக் கலைச் செயல்பாடுகளைத் தனது சொந்தச் செலவில் முன்னெடுத்துவருகிறார்.
இந்த ஆண்டும் ‘வானம் கலைத் திருவிழா’ என்ற தலைப்பில் டிசம்பர் 29-ம் தேதியான நாளை தொடங்கி மூன்று தினங்கள் நடக்கவிருக்கும் கலை, கலாச்சார நிகழ்வை, டிசம்பர் இசை சீசன் களைகட்டும் மயிலாப்பூரிலேயே நடத்துகிறார்.. அதுபற்றி அவருடன் உரையாடியதிலிருந்து…
உங்களது ஊடகம் திரைப்படம். ஆனால், கலைகளை ஒருங்கிணைப்பது, மேடையேற்றுவது ஆகியவற்றையும் செய்ய வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
எல்லாரிடமும் இயல்பாகவே கலை ஆர்வம் இருக்கிறது. காலப்போக்கில் நமக்குள் அதுவொரு ஆர்ட் ஃபார்மாக வடிவம் பெறுகிறது. வீட்டை வடிவமைப்பது, வரைவது, நாட்டுப்புற இசையைப் பாடுவது, அதற்கான வரிகளை இட்டுக்கட்டி அமைப்பது, ஆடுவது, பறை உள்ளிட்ட கருவிகளை இசைப்பது என வாழ்வனுபவத்திலிருந்து உருவாகும் கலை, பல்வேறு வடிவங்களில் உயிர்ப்புடன் இருக்கிறது. அந்தக் கலைகளை நாம் எங்கும்போய்க் கற்றுக்கொண்டு வரவில்லை. வாழும் சூழலில் இருந்து அந்தக் கலைக்கான உள்ளடக்கங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.
உதாரணத்துக்கு, சாவு வீட்டில் பாடப்படும் நாட்டார் பாடல்களை எடுத்துக்கொள்ளுங்கள். சாவுக்குச் சம்பந்தமில்லாத கதைகளை அந்தப் பாடல்களில் நீங்கள் கேட்க முடியும். தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இதுபோல் மக்களே உருவாக்கிக்கொண்ட எண்ணற்ற கலை வடிவங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு நம்மிடம் இல்லை. இந்தக் கலைகளுக்கு மனிதர்களுடன் எளிதில் உரையாடும் சக்தி இருக்கிறது ஆனால், அந்தக் கலைகளுக்கான பாராட்டுக் கிடைப்பதில்லை.
சிறுவயது முதலே நான் பார்த்து, கேட்டு, லயித்த இந்த மக்களின் கலைகள் ஏன் மேடை ஏற்றப்படுவதில்லை என்ற கேள்வி என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. நான் பின்பற்றிவரும் அரசியல் கொள்கைகளை, குறிப்பாக அம்பேத்கர் அரசியலை, சாதி ஒழிப்பு, வர்க்க வேறுபாடு, பாலின வேறுபாடு, இங்கிருக்கும் மதரீதியான அரசியல் என இவை அனைத்தையும் மக்களிடம் ஒரு விவாதமாக எடுத்துச்செல்ல, நிராகரிக்கப்பட்ட, மேடையேற்றப்படாத கலைகளையே சமூக மாற்றத்துக்கான கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்குத் திரையுலகில் எனக்குக் கிடைத்திருக்கும் முகவரி உதவுகிறது.
இதைத் தாண்டி, கலைகளைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்துவது என்பதில் உங்களைக் கவர்ந்த அல்லது தூண்டிய சக்ஸஸ் பார்முலா என்று ஏதேனும் இருக்கிறதா?
நிச்சயமாக. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்துக்குப் பின்னர் வந்த திராவிட இயக்கத்தினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குக் கலைகளை மிகத் தீவிரமான கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இலக்கியம், இசை, நாடகம், திரைப்படம் ஆகியவற்றை அண்ணா, கலைஞர் கருணாநிதியில் தொடங்கி அந்த இயக்கத்தில் அனைவருமே வெற்றிகரமாகக் கையாண்டு சமூக மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது நம் காலத்தின் சிறந்த சக்ஸஸ் ஃபார்முலா.
அடுத்து கருப்பினச் சகோதரர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வெற்றியாளர்களாகக் கருப்பின மக்கள் இருக்கிறார்கள். மார்டின் லூதர் கிங்கும் மால்கம் எக்ஸும் சிறந்த பேச்சாளர்களை உருவாக்கினார்கள். பாப் மார்லியின் இசையை உலக சமுதாயம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
இசை, இலக்கியம், மேடைப்பேச்சு, நடனம், விளையாட்டு என எல்லாக் கலை வடிவங்களையும் அவர்கள் தங்களின் இன எழுச்சிக்காகப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் ரஷ்ய இலக்கியங்கள், ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டதையும் பார்க்க முடியும்.
நல்ல கருத்துகளைக் கூறும் திரைப்படங்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை, காட்சிகளை சினிமாவில் பயன்படுத்தும்போது அவை எந்த அளவுக்கு மக்களைச் சென்று சேர்கின்றன, மக்களைப் பாதிக்கின்றன என்று நினைக்கிறீர்கள்?
திரைப்படத்தில் இடம்பெறும் சாதாரணமான ஒரு பாடல், எங்கோ கடைக்கோடியில் இருக்கும் மக்களிடம் எளிதாகச் சென்று சேர்ந்துவிடுகிறது. திரைப் பாடல்கள் திரும்பத் திரும்ப ஒலிக்கும்போது, அவற்றை டிவி திரையில் காணும்போது அவை தரும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. எனது ‘அட்டக்கத்தி’ படத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுவதைப் பற்றிக் கதையின் போக்கில் இயல்பாக ஒரு சிறு காட்சியை வைத்திருந்தேன்.
அது நிறையப் பேருக்குப் பிடித்திருந்தது. எங்கே சென்றாலும் அதைப் பற்றிப் பேசினார்கள். முதல்முறையாகத் திரைப்படத்தில் நாங்கள் உண்ணும் இறைச்சியைப் பற்றி வந்திருக்கிறது என்று கொண்டாட்ட மனநிலையுடன் சொன்னார்கள். அதே படத்தில் ‘அடி என் கானா மயில் குயிலே’ என்ற ஒப்பாரிப் பாடலை வைத்திருந்தேன். அது என் தாத்தாவுக்குத் தாத்தாவெல்லாம் பாடிக்கொண்டிருந்த பாடல்.
படம் வெளியான பிறகு இன்று அது எல்லோருக்குமான பாடலாக ஆகிவிட்டது. ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ படங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் விவாதப்பொருளாக ஆனபோது திரைப்படம் எனும் ஊடகத்தின் வீச்சை முழுமையாக உணர முடிந்தது. புறக்கணிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட ஒரு கலை திரைப்படத்தில் இடம்பெற்றால் மட்டுமல்ல, மேடையேற்றப்படும்போது கிடைக்கும் அங்கீகாரமும் பரவலாக்கமும் சமூக மாற்றத்துக்கான நகர்வுகளில் முக்கியமானது.
பொதுவுடைமைத் தோழர்கள் நடத்திவந்த கலை இரவுகள், பின்னர் மாநகரில் மாநில அரசுகளே நடத்திவந்த கலைத் திருவிழாக்கள் ஆகியவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவற்றின் தொடர்ச்சி என்றுகூட வானம் கலைத் திருவிழாவைக் கூறலாம். ஆனால், மக்களிடம் உளவியல்ரீதியாக மாற்றத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற அடுத்தகட்டச் செயல்பாட்டை நோக்கி அந்தக் கலைகளை நகர்த்த விரும்புகிறேன். திமுக ஆட்சியில் கவிஞர் கனிமொழியின் முயற்சியில் நடத்தப்பட்ட சங்கமம் நிகழ்வுகள் மிக முக்கியமான கலை இயக்கமாக இருந்தன. சங்கமம் வழியாகப் பல கலைஞர்களுக்குப் பொதுவெளியில் வெளிச்சம் கிடைத்தது. எண்ணற்ற கிராமியக் கலைஞர்கள் பயனடைந்தார்கள்.
நகர்ப்புறமக்களும் கிராமத்தையே கண்டிராத புதிய தலைமுறையினரும் நாட்டார் கலைகளை அறிந்துகொள்ளும் கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்வாக அது இருந்தது. ஆனால், இன்று கலைகள் மீதும் கலைஞர்கள் மீது அக்கறையோ நம்பிக்கையோ அற்றதாக அரசு இயந்திரம் இருக்கிறது. எவ்விதக் கலைநயமும் இல்லாமல் சென்னை, அரசு ஓவியக் கல்லூரியில் பால்வாடியைப் போல ஒரு காட்சி அரங்கத்தைக் கட்டியிருக்கிறார்கள். இது ஒன்றுபோதும் நமது அரசுகள் கலையை எப்படி அணுகுகின்றன என்பதற்கு.
இம்முறை டிசம்பர் இசை சீசன் கச்சேரிகள் நடைபெறும் முதன்மையான இடங்களில் ஒன்றான மயிலாப்பூரிலேயே கலைத் திருவிழாவை நடத்துகிறீர்களே?
ஒரே இடத்தில் நடத்தாமல் ஒவ்வோர் ஆண்டும் நிகழ்விடங்களை மாற்றிக்கொண்டே இருக்க விரும்புகிறோம். அப்படித்தான் மியூசிக் அகாடமி எதிர்ப்புறம் அமைந்திருக்கும் சி.எஸ்.ஐ. செயிண்ட் அப்பாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி எங்களுக்கு அமைந்தது. வானம் கலைவிழா யாருக்கும் போட்டிக்காக நடத்தப்படுவது என்று நினைத்துவிட வேண்டாம். ஒற்றுமைதான் முக்கியம். கலைவழியே முதலில் அதைச் சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம்.
விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகள், இளைய தலைமுறையினருக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப் பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்றுப் பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பிரளயன் இயக்கியிருக்கும் இரண்டு மணிநேர நாடகம், ஆணவக்கொலையைக் கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப் பேசும் புத்தகங்களைக் கொண்ட நூலகம், சமூகத்தின் வாக்குமூலமாக ஒலிக்கும் கவிதைகள், புத்தக வெளியீடுகள் என விரிவாக ஒழுங்கமைத்திருக்கிறோம்.
மிக முக்கியமாக நாங்கள் உருவாக்கியிருக்கும் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசையை ‘மகிழ்ச்சி’ என்ற பெயரில் ஒரு ஆல்பமாக வெளியிடுகிறோம்.
இந்தக் கலைவிழாவுக்கான தேடலில் கிடைக்கும் கலைஞர்களை உங்களது திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?
கண்டிப்பாக. ‘காலா’ படத்தில் இடம்பெற்ற ‘நிலமே எங்கள் உரிமை’ பாடலை அறிவு எழுதியிருந்தார். அவர் ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ வழியாக எனக்குக் கிடைத்த கலைஞர். அடுத்து நான் தயாரித்துவரும் ‘இரண்டாம் உலகப்போரில் கடைசிக் குண்டு’ என்ற படத்துக்கு ‘கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ ஆல்பத்தை உலகத் தரத்திலான ஒலியுடன் தயாரித்துக் கொடுத்திருக்கும் தென்மாதான் இசையமைக்கிறார். அந்தப் படத்துக்கான பாடகர்கள் இந்தக் குழுவைச் சேர்ந்த திறமைசாலிகள்தான். இவர்கள் அனைவருக்கும் பல திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது.
வணிக சினிமாவின் மீது நம்பிக்கை கொண்டவர் நீங்கள். அடுத்து நீங்கள் இயக்கவிருக்கும் ‘பிர்சா முண்டா’வின் வாழ்க்கைக் கதையை ஒரு வணிகத் திரைப்படத்துக்குரிய சுவாரசியத்துடன் தரமுடியுமா?
பிர்சா முண்டாவின் வாழ்க்கையே சாகசங்களாலும் சுவாரசியங்களாலும் நிரம்பியதுதான். மிகவும் என்கேஜிங்கான சம்பவங்கள் அவரது போராட்ட வாழ்வு முழுவதும் நிறைந்து கிடக்கின்றன. எளிய மக்களிடமிருந்து எழுந்துவந்த ஒரு மாவீரனைப் பற்றிய கதை என்பதால் மக்கள் அதைத் திரைப்படமாகக் கொண்டாடுவார்கள். அதற்கு ஏற்பவே திரைக்கதையை எழுதி வருகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT