Published : 14 Dec 2018 09:37 AM
Last Updated : 14 Dec 2018 09:37 AM
சோவியத் ரஷ்யா உதிர்ந்துவிட்ட பிறகு சிறு தேசமாகிப்போன தற்கால ரஷ்யாவின் திரைப்படங்கள் மிகுந்த சுதந்திர உணர்ச்சியுடன் வெளிப்பட்டு வருகின்றன. இன்று மதியம் 2 மணிக்கு தேவி திரையரங்கில் திரையிடப்படும் ‘அரித்மியா’ (Arrhythmia) என்ற ரஷ்யப் படம், அசலான அவல நகைச்சுவையை விரும்பும் ரசிகர்களுக்கு அடர்த்தியான விருந்து.
மருத்துவத் துறையில் ‘அரித்மியா’ என்றால் இதயம் இயல்புக்கு மாறாகத் துடிக்கும் பிரச்சினையைக் குறிக்கும். நடுத்தர வயதில் இருக்கும் நாயகன் ஒலெக் (Oleg) மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ உதவியாளனாக வேலை செய்பவன். பல நேரங்களில் ஆம்புலன்ஸ் வண்டியிலும் தனது வேலையைக் கவனிப்பவன்.
பாராமெடிக்கல் துறையில் அவன் கற்றுக்கொண்டவற்றையும் மீறிச் செய்யும் பல அதிரடிகள் காரணமாக நிறைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறான். உயிருக்குப் போராடும் மனிதர்களது கடைசி மணித்துளிகளில் அவர்களின் உயிரை இழுத்துப் பிடித்து நிறுத்தும் அவனது வேலையில் மன அழுத்தம் என்பது மனைவியைப் போல எப்போதும் அவன் கூடவே இருக்கிறது.
அதைச் சமாளிக்க மதுவை நாடும் அவன், தன்னைவிட வயதில் குறைந்த இளம் டாக்டர் மனைவியான கட்யாவின் (Katya) உணர்வுகளுக்குப் போதிய முக்கியத்துவம் தரமுடியாமல் அவனது வேலை படுத்துகிறது. பொறுமையிழக்கும் கட்யா ஒரு முடிவுக்கு வந்து ஓலெக்கிடம் மணவிலக்கு கோருகிறாள். திருமண வாழ்க்கை, பணியிடம் ஆகிய இரண்டு இடங்களிலும் ஊசலாடும் ஓலெக்கின் அவலமான தருணங்கள் உங்களைச் சிரித்துக்கொண்டே சமகால ரஷ்ய வாழ்வைத் தரிசிக்கவும் செய்யும். ஓலேக்கும் காட்யாவும் பிரிந்தார்களா அதற்கு அவசியமில்லாமல் போனதா என்பதையெல்லாம் திரையில் கண்டுகளிப்பதே அந்தப் படத்தின் இயக்குநர் போரிஸ் கிளிப்நிக்கோவுக்கு நீங்கள் தரும் மரியாதை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT