Last Updated : 28 Dec, 2018 10:52 AM

 

Published : 28 Dec 2018 10:52 AM
Last Updated : 28 Dec 2018 10:52 AM

சி(ரி)த்ராலயா 47: எழுத்துக்கு முதுமை இல்லை!

சென்னை தேவி திரையரங்கின் உரிமையாளர் கௌரிஷங்கரின் கோரிக்கையை கோபுவும் ஸ்ரீதரும் ஏற்றுக்கொண்டனர்.

மெரினா காந்தி சிலையின் பின்பாக அமர்ந்து நகைச்சுவைக் காதல் கதை ஒன்றை உருவாக்கினார்கள். அந்தப் படம் ‘தென்றலே என்னைத் தொடு’. கதை, வசனம் ஸ்ரீதர் கோபு என்றே டைட்டிலில் குறிப்பிடப்பட்டது. மோகன், ஜெயஸ்ரீ, தேங்காய் ஸ்ரீனிவாசன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த படம். ஸ்ரீதரின் காதல் ரசம், இளையராஜாவின் இனிய இசை, கோபுவின் நகைச்சுவை ஆகிய அம்சங்கள், அந்தப் படத்துக்குப் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டு வந்தன.

‘தென்றலே என்னைத் தொடு’ படத்துக்குப் பின் ஸ்ரீதர் சிறிது காலம் திரைப்படத் துறையிலிருந்து விலகியிருக்க விரும்பினார். அந்த நேரத்தில் கோபுவின் மகனுக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. தன்னை இயக்குநராக்கிய ஏவி.எம் நிறுவனத்தாரை அழைப்பதற்காக நேரே சென்றிருந்தார். அழைப்பிதழை ஏவி.எம்.சரவணனிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு கோபு புறப்பட்டார். அறைக்கதவை நோக்கி நடந்த கோபுவை அழைத்தார் சரவணன்.

“கோபு சார்... ஒரு நிமிஷம்... நீங்க ஒருத்தரை உடனே மீட் பண்ணணும்” என்று கூறித் திரும்ப அழைத்தவர், யாரையோ இண்டர்காமில் அழைத்தார். அடுத்த நிமிடம் அறையின் உள்ளே நுழைந்தார் கலகலப்புக்குப் பெயர் போன இயக்குநரான ராஜசேகர்.

சரவணன் விஷயத்துக்கு வந்தார். “கோபு சார்.. ராஜசேகர் இயக்கத்துல ஒரு படம் பண்ணறோம். அந்தக் கதையை ஒரு ஐந்து நிமிஷம் கேட்டுட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்க” என்று சொன்னதுமே சுருக்கமாகக் கதையைச் சொன்னார் ராஜசேகர். கதையைக் கேட்ட கோபு, “என்ன ஆச்சரியம்! இதே மாதிரி ஒரு கதையை நாங்க நாடகமா போட்டிருக்கோம். கே.கண்ணன் நடிச்சிருக்காரு.!’’ என்று சொல்ல, “நல்லதாப் போச்சு... நீங்களே திரைக்கதை, வசனத்தை எழுதிடுங்க!’’ என்றார் ஏவி.எம்.சரவணன். அந்தப் படம்தான் ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’.

எனர்ஜி குறையாத எழுத்து!

பாண்டியராஜன், ஊர்வசி, மனோரமா, எஸ்.எஸ். சந்திரன், சிலுக்கு ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம். அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்படி எழுதியிருந்தார் கோபு. மனோரமா ஆச்சிக்கு கோபுவின் வசனங்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி. கண்ணாத்தா பாட்டி வேடத்தில் பிளந்து கட்டியிருந்தார். “இப்படி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று கோபு வீட்டு திருமணத்திற்கு வந்திருந்த மனோரமாவைச் சூழ்ந்துகொண்டு பெண்கள் புகழ்ந்தனர்.

திரைக்கதையில் புதுமை, காலத்திற்கேற்ற நகைச்சுவை என்று படம் பரபரப்பாக ஓடியது. “ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, எவ்வளவு பெரிய எழுத்தாளரா இருந்தாலும், எழுத்துல தளர்ச்சி வந்துடும். இவ்வளவு வயசுக்கப்புறமும் எனர்ஜி குறையாம தரமான உங்க பிராண்ட் காமெடியைத் தந்திருக்கீங்க!’’ என்றார் இயக்குநர்.

அதற்கு கோபு “எழுத்துக்கு என்றுமே முதுமை கிடையாது.” என்றார். அபாரமான இயக்கம், விறுவிறுப்பான திரைக்கதை, வசனம், ஆகியவற்றுடன் சரவணனும் குகனும் ஒரு புதுமையான காரியத்தைச் செய்திருந்தனர். சூப்பர் கார் என்ற ஐடியாவுடன் ஒரு ஜகஜ்ஜால காரைப் பயன்படுத்தி அதைச் சுற்றி கிளைமாக்ஸ் காட்சியை அமைக்க, படம் வெள்ளிவிழா கொண்டாட அதுவும் முக்கியக் காரணமாக அமைந்தது.

“ ‘காதலிக்க நேரமில்லை’க்குப் பிறகு பூரண மகிழ்ச்சியைக் கொடுத்த படம், ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’” தான் என்கிறார் சித்ராலயா கோபு. அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி படத்தின் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கோபுவின் நகைச்சுவையைச் சிலாகித்து பேசியதையும் அவரது கையால் ஷீல்ட் வாங்கியதையும் பெருமையாக நினைக்கிறார் கோபு. ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ வெற்றிக்குப் பிறகு, கோபுவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை நல்கியது ஏவி.எம் நிறுவனம்.

பணம் வாங்க மறுத்த பாடகர்!

தாங்கள் முன்பு எடுத்திருந்த ஒரு படத்தைச் சற்றே மாற்றி, அண்ணன் தங்கை பாசத்தைச் சித்தரிக்கும் கதை ஒன்றை நகைச்சுவையாக எடுக்க வேண்டும் என்று சரவணன் விரும்ப, ‘வசந்தி’ என்னும் அந்தப் படத்தை கோபு எழுதி இயக்கினார். இந்தப் படத்தில் சமூக சேவகியாக நகைச்சுவையில் மனோரமா அமர்க்களப்படுத்தியிருந்தார். சந்திரபோஸும் தேவாவும் இணைந்து போஸ்தேவா என்ற பெயரில் கூட்டாக நாடகங்களுக்கு இசையமைத்த காலம் உண்டு.

கோபுவின் நாடகத்துக்கும் போஸ்தேவா இசைமையமைத்திருக்கின்றனர். அந்த உரிமையில் கோபு சந்திரபோஸிடம், “கவிப்பேரரசு வைரமுத்து அருமையான வரிகளை எழுதியிருக்கிறார். நீங்களும் அந்தப் பாட்டுக்கு நல்ல மெட்டு கொடுக்கணும்!’’ என்று கேட்க, அவரும் பிரமாதமான ஒரு மெட்டைப் போட்டிருந்தார். அந்தப் பாடல்தான் இன்றும் வானொலியில் ஒலித்துக்கொண்டிருக்கும் ‘சந்தோசம் காணாத வாழ்வுண்டா?’.

அந்தப் பாடலைப் பாட வந்த பாடகர் ஜேசுதாஸ் கோபுவிடம், “இந்த மாதிரி ஒரு நல்ல கருத்தான பாடலைப் பாடின திருப்தி போதும். பணம் வேண்டாம்” என்று மறுத்தார். அந்தப் படம் சுமாராக ஓடியது.

சத்தியராஜுக்கு ஒரு படம்

வசந்திக்குப் பிறகு, மீண்டும் ஏவி.ஏம் அழைத்து சத்யராஜ் நாயகனாக நடிக்கும் படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும்படி கேட்டுக்கொண்டது. அந்தப் படம் ‘உலகம் பிறந்தது எனக்காக’. சத்யராஜ் கலகலப்பான நடிகர். கோபுவின் நகைச்சுவையை மிக அழகாகப் பிரதிபலித்தார். இரட்டை வேடத்தில் தோன்றிய சத்யராஜ், உண்டைக்கட்டி கோவிந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்தார். படத்தின் இயக்குநர் எஸ்பி.முத்துராமன். மிகச் சிறந்த இயக்குநர். நல்ல பண்பாளரும் கூட.

லைட்மேன் தொடங்கி அனைவருக்கும் மரியாதை தருபவர். தன்னைப் பற்றியும் பெருமை பேச மாட்டார். அதிக ரஜினி படங்களை இயக்கிய பெருமையை உடையவர். ஏ. வி. எம் நிறுவனத்தார், புதுமை விரும்பிகள். எதையும் வித்தியாசமாகச் செய்பவர்களும் கூட. இளையராஜா, எம்.எஸ். வி. ஷங்கர் கணேஷ், சந்திரபோஸ் என்று வழக்கமான இசையமைப்பாளர்களை விட்டு விட்டு, இந்தியில் பிசியாக இருந்த ஆர். டி பர்மனை ஒப்பந்தம் செய்தார்.

ரவி, லக்ஷ்மிகாந்த் பியாரிலால், ஷங்கர் ஜெய்கிஷன் ஆகியோரோடு பழகிய கோபுவுக்கு ஆர்.டி.பர்மனின் நட்பும் கிடைத்தது. மூன்று நாட்களுக்குச் சென்னையில் தனது குழுவினருடன முகாமிட்டு பாடல்களுக்கு மெட்டமைத்தார். உலகம் பிறந்தது எனக்காக நன்றாக ஓடிய படம்.

அதன்பிறகு வாசன் பிரதர்ஸ் என்ற நிறுவனத்துக்காக கோபு எழுதிய இயக்கிய படம் ‘டெல்லி பாபு’. பாண்டியராஜன் இரு வேடங்களில் நடித்த அந்தப் படம் சுமாராக ஓடியது.

யார் அந்தப் பெண்?

அதன்பின்னர் கோபுவைத் தேடிவந்த ஒய்.ஜி மகேந்திரன், “ ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் எடுக்கப் போகிறோம். நான்தான் கதாநாயகன். நீங்க எழுதி இயக்கினால்தான் நல்லா வரும்!’’ என்றார் ஒய்.ஜி. மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி. பார்த்தசாரதி, கோபுவின் மாமனார் வீட்டுக்கு மிக நெருங்கிய நண்பர். அவர் கூறியதும், உடனே ஒகே சொன்னார் கோபு.

அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒரு பெண்ணை அழைத்து வந்த மகேந்திரன், அவரை கோபுவுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயலலிதாவை போன்றே கான்வென்ட்டில் படித்த பெண். துருதுருப்புடன் காணப்பட்டார். கண்களில் ஒருவித காந்தம். பிற்காலத்தில் மிகவும் கனமான கதாபாத்திரங்களில் அநாயாசமாக நடித்துப்புகழ்பெற்றவர்.

“கோபு சார்.. இந்தப் பெண் உங்க நெருங்கிய நண்பரின் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. கண்டுபிடியுங்க பார்க்கலாம்.’’ என்று புதிர் போட்டார் ஒய்.ஜி.மகேந்திரன். அந்தப் பெண்ணையே உற்றுப்பார்த்து ‘யாராக இருக்கும்?’ என்று மண்டையை உடைத்துக்கொண்டிருந்த கோபுவுக்கு கடைசிவரை பிடி கிடைக்கவில்லை.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x