Published : 06 Dec 2018 05:56 PM
Last Updated : 06 Dec 2018 05:56 PM
கடந்த அக்டோபர் 1 அன்று காலஞ்சென்ற ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த தினம், அவரைக் கொண்டாடக் கிடைத்த அரிய மைல்கல் தருணம். அதை உணர்ந்த ’இந்து தமிழ்’ நாளிதழ், ‘சிம்மக் குரலோன் 90’ என்ற தலைப்பிட்டு, அந்த நடிப்புப் பல்கலைக்கழகத்துக்குக் கடந்த வெள்ளியன்று (நவம்பர் 30) விழா எடுத்தது.
சென்னையில் நடந்த விழாவாக இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து, இந்து தமிழ் வாசகர்களும் சிவாஜி கணேசனின் ரசிகர்களும் சென்னையில் குவிந்து அரங்கத்தை நிறைத்தனர்.
மூன்று மணிநேரம் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண் கொட்டாமல் இறுதிவரை ரசித்த அவர்கள், விழா முடிந்தபிறகும் கலைந்து செல்லாமல் நெடுநேரம் விழா அரங்கில் நின்று, “நாங்கள் நேசிக்கும் சிவாஜிக்கு இப்படியொரு பிரம்மாண்ட விழாவை எதிர்பார்த்து வரவில்லை; எங்களை நெகிழவும் நீண்ட நேரம் மகிழவும் வைத்துவிட்டீர்கள்” என்று விழாக் குழுவினரை மனம் நிறையப் பாராட்டிய பின்னரே விடைபெற்றுச் சென்றனர்.
சிவகுமாரின் பாராட்டு
விழா முடிந்து ஊர் திரும்பிய பின்னர், ‘சிம்மக் குரலோன் 90’ விழா அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது எனக் குறிப்பிட்டு வாசகர்கள், சிவாஜி ரசிகர்கள் அனுப்பிவரும் கடிதங்கள், இந்து தமிழ் அலுவலகத்தில் குவிந்து வருகின்றன. வாசகர்கள் பலர் தொலைபேசி வழியாகவும் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துவருகின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க, ’சிம்மக் குரலோன் 90’ விழாவில் 'இந்து தமிழ்’ தயாரித்துத் திரையிட்ட மூன்று காணொலிகளின் யூடியூப் இணைப்புகள் வாட்ஸ் அப் மற்றும் முகநூல் வழியாக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அவை, பன்முகக் கலைஞர் நடிகர் சிவகுமாரின் ஸ்மார்ட் பேசிக்கும் சென்றதில், அந்தக் காணொலிகளைக் கண்ட அவர் “ நானறிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி 90 நிமிடங்களுக்கு நான் பேசியிருக்கும் வீடியோ உரை, பொங்கல் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
நம் காலத்தின் அபூர்வக் கலைஞனாகிய நடிகர் திலகத்துக்கு, ’இந்து தமிழ்’ நாளிதழ் எடுத்த விழாவைப் பற்றி சிவாஜியின் ரசிகர்கள் என்னிடம் வியந்து சொல்லக் கேட்டேன். அந்த விழாவுக்காக, இந்து தமிழ் தயாரித்துத் திரையிட்ட மூன்று வீடியோ இணைப்புகள் எனது வாட்ஸ் அப்புக்கு வந்தபோது ஆவலுடன் பார்க்கத் தொடங்கினேன்.
பார்த்து முடித்ததும் மீண்டும் சிவாஜி காலத்தில் ஒருமணிநேரம் வாழ்ந்துவிட்டு வந்த அனுபவம் கிடைத்தது. அப்படி உணர வைத்த இந்து தமிழுக்கு என் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
ராம்குமார் கடிதம்
சிவகுமாரின் பாராட்டு ஒருபுறம் இருக்க, சிவாஜி கணேசனின் மூத்த மகனும் ’சிம்மக் குரலோன் 90’ விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவருமாகிய ராம்குமார் கணேசன் நெகிழும் வார்த்தைகளால் பாராட்டுக் கடிதம் ஒன்றை இந்து தமிழ் நாளிதழுக்கு அளித்திருக்கிறார்.
அதில் “அன்பு மிக்க இந்து தமிழ் திசை ஆசிரியருக்கு வணக்கம். தங்களுடைய மேலான நாளிதழ் நடத்திய ‘சிம்மக் குரலோன் 90’ நிகழ்ச்சியைப் பற்றி, ஏராளமான சிவாஜி ரசிகர்கள் தொடர்புகொண்டு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். அன்றைய விழா மேடையில் நான் கூறியதைப் போன்று, இந்து என்றால் கவுரவம், இந்து என்றால் உயர்தரம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
நடிகர் திலகத்தின் நடிப்புச் சிறப்புகளைக் கூறிய காணொலித் தொகுப்பு, ஒய்.ஜி.மகேந்திராவின் ‘டாப் டென்’ வரிசை, நடிகர் திலகத்துடன் பணிபுரிந்த சன்றோர்களின் கருத்துரை, போட்டிகளில் வென்றோருக்கான பரிசளிப்பு என விழாவை மிக நேர்த்தியாக நடத்தியது பாராட்டுக்குரியது.
குறிப்பாக, நடிகர் திலகத்தின் நன்கொடைகளைப் பற்றி இந்து தமிழ் நாளிதழ் தொகுத்தளித்த காணொலி, மிகவும் அபூர்வமான தகவல்களைக் கொண்டு, இதுவரை பலர் அறியாத செய்திகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தெய்வப்பிறவி. நான் அவரது மகன் என்றாலும், நான் அவருடைய ரசிகன் என்பதில் இன்னும் பெருமை கொள்கிறேன். ‘தி இந்து’ குழும நாளிதழ்கள் முதல் தரமானவை.
அந்நிறுவனமே முன்னின்று சிவாஜியின் 90-வது பிறந்த தினத்தைக் சிறப்பாகக் கொண்டாடியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.
தங்கள் குழுமத்துக்கு லட்சக் கணக் கான சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் நடிகர் திலகத்தின் நண்பர்கள், எங்கள் குடும்பம் சார்பிலும் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் என்ற முறையிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்கள் இந்து குழுமத்துக்கு நடிகர் திலகத்தின் ஆசியும் வாழ்த்துகளும் ஆசியும் எப்போதும் இருக்கும். நன்றி” எனக் குறிப்பிட்டு தி இந்துவுக்கும் சிவாஜிக்கும் இடையிலான நீங்காத அன்பின் நினைவாகத் தனது கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார்.
அர்ப்பணிக்கப்பட்ட ஆசிரியர் பக்கம்
சிம்மக் குரலோன் 90 விழாவுக்குக் குவிந்துவரும் பாராட்டுகளுக்குத் தொடக்கமாக அமைந்தவை, இந்து டாக்கீஸ் இணைப்பிதழ் கடந்த 8 வாரங்களாக சிவாஜிக்காக வெளியிட்டுச் சிறப்பித்து வந்த சிறப்புப் பக்கங்கள். அதன் தொடர்ச்சியாக சிவாஜி நடித்த படங்கள் மற்றும் கதாபாத்திரங்களைப் பற்றிய இரண்டு அறிவுப் போட்டிகளை நடத்தியது.
கொண்டாட்டத்தின் உச்சமாக, நடந்த சிம்மக் குரலோன் 90 விழா தினத்தன்று வெளியான இந்து தமிழ் நாளிதழில், அதன் ஆசிரியர் பக்கங்கள் சிவாஜியின் பன்முகக் கலையாளுமைக்கு அர்ப்பணிக்கப்பட்டன
கொண்டாட்டத்தின் நிறைவாக, ‘சிம்மக் குரலோன் 90’ நினைவுத் திருவிழாவும் பரிசுப் பெருவிழாவும் சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள வாணி மகால் அரங்கில் நடந்தபோது மாலை 6 மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற அறிவித்திருந்தபோதும் மாலை 3 மணிக்கெல்லாம் அரங்கில் பார்வை யாளர்கள் வரத் தொடங்கினார்கள்.
மூன்று காணொலிகள்
நிகழ்ச்சி நிரலில் அறிவித்தபடி மாலை 5.50 மணிக்கு நடிகர் திலகம் ரசிகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராகவேந்திரன், முரளி சீனிவாஸ் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கிய 70 நிமிடங்களைக் கொண்ட காணொலியின் திரையிடலோடு விழா தொடங்கியது. அதில் சிவாஜிகணேசன் நடித்த 24 திரைப்படங்களில் இருந்து அவரது நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டும் குறிப்பிடத் தக்கக் காட்சிகள் எடுத்தாளப்பட்டிருந்தன.
அதன்பின்னர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா தனது ரசனையை ஒட்டி அவர் வரிசைப்படுத்தியிருந்த சிவாஜியின் சிறந்த 10 படங்களைக் குறிப்பிட்டு அவர் பங்கேற்றக் காணொலி காட்சியும் திரையிடப்பட்டன. நிகழ்வின் இறுதியில் ‘இந்து தமிழ்’பிரத்யேகமாகத் தயாரித்திருந்த ‘தி இந்து கண்ட சிவாஜி சாம்ராஜ்ஜியம்’ என்ற சிறப்புக் காணொலி காட்சி திரையிடப்பட்டது. நிகழ்ச்சியின் நடுவே போட்டியில் வெற்றி பெற்ற வாசகர்களுக்கு ரசிகர் களுக்கு ராம்குமாரும் பிரபுவும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்.
விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி, இந்து தமிழின் வாசகர்கள், போட்டியில் வென்ற வாசகர்கள், சிவாஜியின் ரசிகர்கள், அபிமானிகள், கலையுலகினர் வரை, ‘இதுவொரு பிரம்மாண்ட விழா’ என வியந்துபோற்றிய சிம்மக் குரலோன் – 90 விழாவை இந்து தமிழுடன் இணைந்து, ஸ்ரீகாளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், பொன் வண்டு டிடெர்ஜெண்ட், கல்யாண் ஜுவல்லர்ஸ், சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் ஆகிய நிறுவனங்கள் ‘செலபரேஷன் பார்ட்னர்’களாக இருந்து கொண்டாடியிருக்கின்றன
படங்கள்: க.ஸ்ரீபரத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT