Published : 21 Dec 2018 10:04 AM
Last Updated : 21 Dec 2018 10:04 AM
“படத்தைப் பற்றி நாம் பேசுவதைவிட அதைப் பார்க்கும் மக்களும் சக இயக்குநர்களும் பேசவேண்டும். எனது படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டிப் பேசியதை மறக்க முடியாது. மக்களின் அங்கீகாரத்துக்காக எனது ‘பெட்டிக்கடை’ காத்திருக்கிறது” என்று உரையாடத் தொடங்கினார் சமுத்திரக்கனி - சாந்தினி நடிப்பில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இசக்கி கார்வண்ணன்.
‘பெட்டிக்கடை’ என்ற தலைப்பு இதுவொரு சிறிய பட்ஜெட் படம் என்பதைச் சொல்கிறது. கதையும் அப்படித்தானா?
அதுதான் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாம் இழந்துவரும் மண்ணையும் பாரம்பரியத்தையும் காத்துக்கொள்ள வேண்டும் என்ற சீரியஸான கருத்தைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லும் கதை. இது எனக்கு முதல் படம். சினிமாவில் முதல் வாய்ப்பை அழுத்தமான ஒரு பதிவாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கதையைப் படமாக்கியிருக்கிறேன்.
பெட்டிக்கடை என்ற நம் பண்பாட்டில் மறைந்துபோன ஒரு அற்புதத்தை அதன் உறவுச் சங்கிலி அறுந்துபோனதால் அதன் வழியாக நாம் இழந்துவிட்ட உணவுப் பாரம்பரியத்தை, சூப்பர் மார்க்கெட் ஆன்லைன் விற்பனை என்கிற மாயை எப்படிக் காலியாக்கி இருக்கிறது என்ற கருத்தை நேரடியாகக் கூறாமல் இரண்டு கிராமங்களுக்கு இடையிலான பிரச்சினையாக உருவகப்படுத்தி இருக்கிறேன்.
அந்த வகையில் ‘பெட்டிக்கடை’ என்ற தலைப்புதான் எளிமையாகத் தெரியுமே தவிர உள்ளடக்கம் ரசிகர்களை உலுக்கும். அதே நேரம் கிராமங்கள் இன்று எப்படி நகரங்களாக மாறி நிற்கின்றன என்பதை நக்கலான நகைச்சுவை வழியாகச் சொல்லும்.
இதுபோன்ற கதைகளில் சமுத்திரக்கனி டெம்பிளேட் கதாபாத்திரம் ஏற்கிறார். இதிலும் அப்படித்தானா?
நீங்கள் சொல்வதுபோல்தான் என்றாலும் அவரது முந்தைய கதாபாத்திரங்களின் நோக்கங்களோடு ஒப்பிடும்போது இதில் அவரை நான் பயன்படுத்திக்கொண்டிருப்பது நமது கிராமங்களின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கத் துடிக்கும் ஒருவராக. கதையின் நாயகன் அவர்தான். சமுத்திர பாண்டி என்ற ஆசிரியராக வருகிறார்.
அடுத்த தலைமுறைக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதைத் தனது செயல்கள் வழியாக காட்டுற கேரக்டர். வழக்கம்போல் பின்னியிருக்கிறார். அவரது நடிப்பைப் பார்க்கும்போது நிஜமாகவே ஆசிரியர் தொழிலை நேசித்துச் செய்திருக்க வேண்டிய ஒருவரைத் தமிழ் சினிமா தனக்காகக் களவாடிக் கொண்டு வந்துவிட்டதோ என்று தோன்றும்.
வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்?
கதாநாயகியின் சவால் ஒன்றில் தான் படம் தொடங்குகிறது. வேலை மாற்றலாகி கிராமம் ஒன்றுக்கு வருகிறது சாந்தினியின் குடும்பம். ஒருநாள் ஓமவாட்டர் தேவைப்படுகிறது. அதைவாங்கப் பெட்டிக்கடையைத் தேடினால் இல்லை. ஆனால், சூப்பர் மார்கெட் இருக்கிறது. பாரம்பரியமான, உடலுக்கு ஊறுவிளைவிக்காத அத்தனை பொருட்களும் கிடைக்கும் சில்லறை விற்பனையின் மையமாக இருக்கும் பெட்டிக்கடை இந்தக் கிராமத்தில் ஏன் இல்லை என்று அவர் விசாரிக்கும்போதும் மற்றொரு கிராமத்தின் தலையீடு இருப்பதைத் தெரிந்துகொள்கிறார்.
அந்தக் கிராமத்தைத்தான் கார்ப்பரேட்டாக உருவகப்படுத்தியிருக்கிறேன். பல முன்னணி சூப்பர் மார்க்கெட் நிறுவனங்களைத் துணிந்து தாக்கியிருக்கிறேன். கதாநாயகி சாந்தினி குடியேறிய கிராமத்தில் பெட்டிக்கடை தொடங்கப் போராடுவதும் அதன் பின்னணியில் முட்டுக்கட்டையாக இருக்கும் கார்ப்பரேட் அரசியலும் கதாபாத்திரங்களின் வடிவில் உலாவருகின்றன.
சாந்தினி தனது கதாபாத்திரத்தை அற்புதமாகச் செய்திருக்கிறார். சமுத்திரகனி - சாந்தினி தவிர, ‘மொசக்குட்டி’ படத்தில் அறிமுகமான வீரா மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி வர்ஷா. மூன்றாவதாக சுந்தர் – அஸ்மிதா என்ற ஜோடியும் உண்டு. மொட்டை ராஜேந்திரன் இன்றைய கிராமத்தின் ‘வை-பை’ மனிதராக வருகிறார்.
படத்தின் தலைப்பை ஒட்டி – ‘பெட்டிக்கடை – நோ ஜி.எஸ்.டி’ –டேக் லைன் வைத்திருக்கிறீர்களே, பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
வராது என்று நம்புகிறேன். வந்தால் கதையின் நாயகியைப் போலப் போராடி வெற்றிபெறுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT