Published : 09 Nov 2018 11:36 AM
Last Updated : 09 Nov 2018 11:36 AM
அந்நிய மண்ணில் ‘சிவந்த மண்’ படமாகிக்கொண்டிருந்தது. படக்குழு அப்போது பாரிஸ் நகரத்தில் முகாமிட்டிருந்தது. அன்று படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பி ஆயிற்று. அந்த ஹோட்டலின் பெரிய பூங்காவில் உலா போய்விட்டு தன் அறைக்குத் திரும்பிச் செல்ல லிப்டில் ஏறினார் கோபு. அப்போது உள்ளே நுழைந்தார் ஒருவர்.
அவர் தி.மு.க எம்.பி. முரசொலி மாறன். “என்ன கோபு சார் இங்கே. அதுவும் வேட்டியுடன்?” - மாறன் கேட்டார். “நான்தான் வேட்டி! சிவாஜி, ஸ்ரீதர் எல்லாரும் லுங்கியோட வாக்கிங் போறாங்க. ‘சிவந்த மண்’ ஷூட்டிங், இங்கதான் தங்கியிருக்கோம்” என கோபு பெருமையுடன் சொன்னார். “தப்பு பண்ணிட்டீங்களே கோபு” என்றவர், அவர்கள் படக்குழுவைக் காண வந்தார் மாறன்.
மாறனைப் பார்த்ததும் சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் வியப்பு. நல விசாரிப்புகளுக்குப் பின் முரசொலி மாறன் ஒரு குண்டைத் தூக்கி போட்டார். “ஸ்ரீதர்... இன்னும் ரெண்டு நாள் நீங்க இந்த ஹோட்டல்ல தங்கினீங்கன்னா ‘சிவந்த மண்’ படத்தோட பட்ஜெட் முழுவதையும் இந்த ஹோட்டலுக்கே செலவழிக்க வேண்டியிருக்கும். நல்லவேளை, நான் கோபுவைப் பார்த்தேன். உடனே காலி பண்ணிக்கிட்டு, வெளியிலே நான் சொல்லுற ஓட்டலுல போயி தங்குங்க. வசதியாவும் இருக்கும். சிக்கனமாவும் இருக்கும்” என்றார்.
ஸ்ரீதர் அலறியடித்தபடி டேராவைத் தூக்கச் சொன்னார். ஒரு நாள் தங்கியதற்கான ஹோட்டல் பில் வர, அந்த ஹோட்டல் பில்லைப் பார்த்ததுமே கோபுவின் கண்களில் ரத்த கண்ணீர் “டேய் ஸ்ரீ... இந்த பைசாவுக்கு ‘நெஞ்சில் ஒரு ஆலயம்’ மாதிரி மூணு படங்களை எடுத்திருக்கலாம்” என்று சொல்ல, “தலைக்கு வந்தது முரசொலி மாறனால போச்சு” என்றார் ஸ்ரீதர். அனைவரும் மாறன் கூறிய ஹோட்டலில் தங்கிப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்கள்.
நாடு திரும்பிய படக்குழு
“பார்வை யுவராணி கண்ணோவியம்’’ பாடலை ஈபிள் டவரில் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா பரபரப்புடன் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்தார். அவரது கண்கள் கலங்கி இருந்தன. ஸ்ரீதரின் தாயார் காலமாகிவிட்டதாகத் தகவல் வந்திருப்பதாக அவர் கூறியதும் ஸ்ரீதர் அதிர்ந்து கலங்கிப்போனார். சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக்கொண்டு, கோபுவைத் தனியே அழைத்த ஸ்ரீதர், “கோபு... கஷ்டப்பட்டு பெரிய நட்சத்திரங்களோட கால்ஷீட்டை வாங்கிட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கோம்.
ராஜியை (சி.வி.ராஜேந்திரன்) வச்சுக்கிட்டு மீதிப் படப்பிடிப்பை முடிச்சுட்டு வந்து சேருங்க. நானும் தேவசேனாவும் கிளம்பறோம்” என்று சொன்னவுடன் கோபுவும் ராஜேந்திரனும் மறுத்து விட்டார்கள்.
“எங்களையும் பிள்ளை மாதிரிதானே உங்கம்மா பார்த்தாங்க நாங்களும் வருவோம் ஸ்ரீ” என்று சொல்லிவிட்டனர். சிவாஜி கணேசனிடம் துக்கச் செய்தியைக் கூறியபோது, அவரும் கண்டிப்புடன் கூறிவிட்டார். “கால்ஷீட் எப்ப வேணுமானாலும் கிடைக்கும்… ஆனால் அம்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த மறுபடி வாய்ப்பு கிடைக்காதுப்பா! நீ துக்கப்பட்டிருக்கும்போது இங்கே படப்பிடிப்புல எங்களுக்கு எப்படிக் கவனம் போகும். எல்லாரும் கிளம்புவோம் ஸ்ரீதர். நீ எப்பக் கூப்பிடுறியோ அப்ப கால்ஷீட் தரேன்” என்று சிவாஜி கூறினார். அதே உத்திரவாதத்தை ராஜேந்திரகுமாரும் வஹீதா ரஹ்மானும் தந்தனர். உடனே அனைவரும் சென்னைக்குக் கிளம்பினோம்.
தோல்வி கண்ட ‘தர்த்தி’
தாயாரின் காரியங்கள் முடிந்ததும் சென்னையிலேயே பிரம்மாண்ட அரங்கங்களை நிர்மாணித்துப் படப்பிடிப்பைத் தொடர்ந்தார் ஸ்ரீதர். ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடலை அமர்க்களமாகப் படம்பிடித்தார். இந்த இடத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியைப் பற்றிக் கூறியே ஆக வேண்டும். தமிழில் எம்.எஸ்.வி போட்டிருந்த இந்தப் பாடல் மெட்டை சங்கர் - ஜெய்கிஷன் மற்றும் லதா மங்கேஸ்கருக்குப் போட்டுக் காட்டியது சித்ராலயா.
ஈஸ்வரியின் பாட்டைக் கேட்ட லதா, “இந்த அளவு சுவாசத்தைக் கையாண்டு முனகுவது என்னால் இயலாத காரியம். அற்புதமாகப் பாடியிருக்கிறார் ஈஸ்வரி!” என்று லதாவே வியந்து பாராட்டினார் என்றால் ‘பட்டத்து ராணி’ பாடலுக்கு இதைவிட வேறு என்ன ஏற்றம் வேண்டும்?
1969 தீபாவளித் திருநாளில் சிவந்த மண்ணும் ஒரு மாதத்துக்குப் பின் ‘தர்த்தி’ படமும் வெளியாயின. ‘சிவந்த மண்’ நன்றாக ஓடினாலும் ‘தர்த்தி’ படுதோல்வியைத் தழுவியது. இதனால் சித்ராலயாவுக்குப் பெருத்த நஷ்டம். இனி, இந்திப் படவுலகில் காலை வைக்க வேண்டாம் என்று ஸ்ரீதர் தீர்மானமான முடிவுக்கு வந்தார்.
இந்த நேரத்தில் சிவாஜி கணேசனைக் கதாநாயகனாக வைத்து, ‘ஹீரோ 72’ என்ற படத்தை அறிவித்தார் ஸ்ரீதர். அந்தப் படமே பின்னர் ‘வைரநெஞ்சம்’ ஆனது. இந்த படத்தின் நாயகியாக பத்மப்ரியா என்ற புது நடிகையை அறிமுகம் செய்யத் தீர்மானித்தார். அசப்பில், பார்ப்பதற்கு ஹேமமாலினியைப் போலவே இருந்தார் பத்மப்ரியா.
இந்த நேரத்தில் கோபு இயக்கிய ‘காசேதான் கடவுளடா’ படம் பெரும் வெற்றியைப் பெற்றது. கோபுவே இயக்குநராகி விட்டார். இனி அவர், ஸ்ரீதருடன் பணி புரிவாரா என்று பத்திரிகைகள் எழுதின. காரணம் அப்போது அவருக்குப் புதிய படங்களும் ஒப்பந்தம் ஆகத் தொடங்கியிருந்தன.
ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும். ஸ்ரீதர் தானே காரை ஓட்டிக்கொண்டு கோபுவின் வீட்டுக்கு வந்தார். உடன் அவர் மனைவி தேவசேனாவும் வந்திருந்தார். அப்போது கோபு கே.கண்ணனுக்காக ஒரு நாடகத்தை எழுதிக்கொண்டிருந்தார். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதர், திடீரென்று, கோபுவையும் அவரது மனைவி கமலாவையும் தங்களுடன் கிளம்பச் சொன்னார். ஸ்ரீதரைப் பார்த்தபோது ஒருவித பதற்றத்தில் அவர் இருந்ததை ஊகிக்க முடிந்தது.
கோபுவும் அவர் மனைவியும் எங்கே, எதற்கு என்று கேள்வி கேட்காமல் கிளம்பினார்கள். ஸ்ரீதரின் கார் வடபழனி நோக்கி விரைந்து, அங்கிருந்த பிரிவியூ திரையரங்கு ஒன்றில் நுழைந்தது.
ஏதோ ஒரு படத்தைத் தங்களுக்குக் காட்டவே ஸ்ரீதர் தன்னை சம்சாரம் சகிதமாய் அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்துபோனது கோபுவுக்கு. “என்னடா படம்?” என்று கோபு கேட்க, ஸ்ரீதர், “தெலுங்குப் படம்டா, நாகேஸ்வர ராவ் நடிச்சது” என்று மட்டும் கூறினார். படம் ஓடத் தொடங்கியது. அந்த ‘தசரா புல்லோடு’ என்ற தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ, சந்திரகலா ஆகியோர் நடித்திருந்தனர். ராஜேந்திர பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார்.
அதன் தயாரிப்பாளர் ஜக்கம்பத்தி ஆர்ட் பிச்சர்ஸ் ஸ்ரீதருக்கு நன்கு அறிமுகமானவர்கள். படம் தொடங்கியதும் கோபு படத்தின் கதையோட்டத்தில் கரைந்துபோனார். திடீரென்று, கோபுவின் காதுக்கு அருகில் வந்த ஸ்ரீதர், “கோபு... இந்தப் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்சது. நான் ஏற்கெனவே பார்த்துட்டேன். உனக்குக் காட்டத்தான் இந்த ஸ்பெஷல் ப்ரிவியூ. இந்தப் படத்தோட உரிமையை வாங்கி தமிழ்ல எடுக்கலாம்னு இருக்கேன். நீ அபிப்ராயம் சொன்ன பிறகுதான் இறுதி முடிவு எடுப்பேன்” என்று கிசுகிசுத்தார்.
கோபுவுக்கு மகிழ்ச்சி. “கதை நல்லா இருக்கு. நீ காதல் மன்னன். நிச்சயம் இந்தப் படத்தை இன்னும் பெட்டரா எடுப்பே. நாகேஸ்வர ராவ் ரோலுக்கு சிவாஜியைப் போட்டா நல்லா இருக்கும்” என்று கோபு தன் கருத்தைச் சொல்லிக்கொண்டிருந்தபோதே, ஸ்ரீதர் அவர் காதில் மீண்டும் கிசுகிசுக்க, அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார் கோபு. வழக்கமாக, தெலுங்குப் படங்களைத் தமிழில் எடுக்கும்போது நாகேஸ்வர ராவ் நடித்த படங்களை சிவாஜி கணேசனை வைத்தும், என்.டி ராமராவ் நடித்த படங்களை எம்.ஜி.ஆரை வைத்தும் எடுப்பதை ஒரு ஃபார்முலாவாகவே கடைப்பிடிப்பது வழக்கம்.
அந்த எண்ணத்தில்தான், ஸ்ரீதர் தான் அந்தப் படத்தைத் தமிழில் தயாரிக்கப் போவதாகக் கூறியதும், அவரை உற்சாகப்படுத்தும் எண்ணத்துடன், “சிவாஜி கணேசனைப் போட்டு இந்தப் படம் எடுத்தால் நன்றாக ஓடும்..!” என்று கோபு கூறக் காரணம். ஆனால், ஸ்ரீதர் தனது பால்ய நண்பரின் காதில் இரண்டாம் முறையாக கிசுகிசுத்தது இதைத்தான்..
“கோபு.. இந்தக் கதையைச் சற்றே மாற்றி நான் எம். ஜி. ஆரை வைத்து எடுக்கலாம் என்று இருக்கிறேன்”. ‘தனது ஆருயிர் நண்பனா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறான்’ என்று அரண்டு போனவராக ஸ்ரீதரைப் பார்த்தார் கோபு.
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com | படங்கள் உதவி: ஞானம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT