Published : 01 Aug 2014 12:00 AM
Last Updated : 01 Aug 2014 12:00 AM
கடந்த மாதம் வெளியான 'அரிமா நம்பி’ படத்தின் வெற்றிக்கும், அதன் ஒளிப்பதிவுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. ஆனால் அதில் திளைத்திருக்காமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்துக்குச் சுறுசுறுப்பாக ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.
வெற்றியை உறுதி செய்யும் முன்னணி இயக்குநர்கள், முதல் வெற்றிக்காகப் போராடும் அறிமுக இயக்குநர்கள் என வேறுபாடு காட்டாமல் கதையை நம்பி கேமரா பிடிப்பவர் அவர். வண்ணங்களையும், ஒளியையும் சரியான கலவையில் குழைத்துத் தருவதில் இவரை நவீன ஒளிக் கலைஞனாக ஒருமித்த குரலில் அங்கீகரிக்கிறது இயக்குநர் வட்டம். ‘தி இந்து’வுக்காக அவரைப் பிரத்யேகமாகச் சந்தித்தபோது....
பள்ளிக் காலத்தில் சினிமா ஆர்வம் இருந்ததா?
மயிலாடுதுறையை ஒட்டிய குத்தாலம்தான் எனது சொந்த ஊர். தெரிந்தோ தெரியாமலோ கேமரா என்ற வார்த்தை, உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் நெருக்கமானது. நானும் என் நண்பர்கள் கேசவன், மனோகரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ’ கேமரா’ என்ற கையெழுத்துப் பிரதியை ஆரம்பித்தோம்.
எனது தமிழ்க் கையெழுத்து நன்றாக இருக்கும் என்பதால் நானே முழுப் பத்திரிகையையும் அச்சடித்ததுபோல எழுதிவிடுவேன். தேவையான இடங்களில் படங்களையும் வரைந்துவிடுவேன். அந்தப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் ஒரு வெள்ளைத் தாளை இணைத்து எங்கள் ஊரிலும் மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருக்கும் முக்கிய நூலகங்களிலும் பேருந்து நிலையங்களில் இருக்கும் நியூஸ் ஸ்டால்களிலும் போட்டுவிடுவோம்.
பிறகு மூவரும் தனித்தனியாகப் பிரிந்து ஒருவர் நூலகத்திற்கும், இரண்டு பேர் பேருந்து நிலையங்களுக்கும் சென்று எங்களது பத்திரிகையை யார் வாங்குகிறார்கள். நூலகத்தில் யாரெல்லாம் படிக்கிறவர்கள், படித்து முடித்ததும் கடைசிப் பக்கத்தில் தங்கள் கருத்துகளை எழுதுகிறார்களா என்று குறுகுறுப்புடன் கவனிப்போம்.
நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பாராட்டுகளும், ஆலோசனைகளும் அந்தப் பக்கத்தில் குவிந்தன. இடம் போதாமல் மற்ற பக்கங்களின் ஓரத்திலெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார்கள். 20 பிரதிகளில் ஆரம்பித்த எங்கள் பத்திரிகை 150 பிரதிகளை சைக்லோஸ்டைல் முறையில் அச்சடிக்கும் அளவுக்கு வரவேற்பு பெருகியது. எங்களுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அடுத்தகட்டமாகப் பேட்டிகளை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தபோது மயிலாடுதுறைக்கு வந்திருந்த கோமல் சுவாமி நாதனை சந்திக்க வைத்தார் அவருடன் வந்திருந்த கவிஞர் இளைய பாரதி.
கோமல் ஆசிரியராக இருந்த சுபமங்களா பத்திரிகையின் அறிமுகமும், அந்தப் பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இளைய பாரதியுடன் ஏற்பட்ட தொடர் சந்திப்பும் பெரிய திருப்பமாக அமைந்தது. “ தம்பி நீ ஏன் சென்னை வந்து சினிமா கற்றுக்கொள்ளக் கூடாது? “ என்றார் இளையபாரதி. அப்போதுதான் திரையுலகம் பற்றிய கற்பனையை நான் விரித்துக் கொண்டேன்.
சென்னையில் வாழ்க்கை எப்படியிருந்தது?
எனக்குச் சென்னை என்பது வரமாகவே அமைந்துவிட்டது. அரசு திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் பயிலவே விரும்பினேன். இயக்கத்தில் இடம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று ஒளிப்பதிவுப் பாடத்துக்கும் விண்ணப்பித்தேன். அதிர்ஷ்டவசமாக இரண்டுக்குமே எனக்கு அழைப்பு வந்தது. தன்னந்தனியாகச் சென்னைக்கு வந்தேன். கல்லூரி வளாகத்துக்குச் சென்றதும் எதில் சேருவது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
காரணம் இரண்டுக்கும் நேர்காணல் ஒரே நேரத்தில் நடந்தது. நான் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு பேராசிரியர் என்னை அழைத்து பிரச்சினை என்னவென்று கேட்டார். விஷயத்தைச் சொன்னேன். “ திரை இயக்கம் என்பது ஏஸ்தெடிகல் சென்ஸ். ஒளிப்பதிவு என்பது டெக்னிக்கல் சென்ஸ்.
இதை நீங்கள் படித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஏஸ்தெடிக் சென்ஸைப் படிக்காமலேயே வளர்த்துக்கொள்ள முடியும் “ என்றார். ஆஹா ஊரைப்போலவே இங்கேயும் நம் விரல்பிடித்துக் கூட்டிச் செல்லும் நல்லவர்கள் இருக்கிறார்களே என்று வியந்துபோனேன். சென்னையைக் குறித்து எனக்குச் சொல்லப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளோடுதான் இங்கே வந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.
ஒளிப்பதிவைப் படித்து முடித்ததும் யாரிடம் உதவியாளராகச் சேர்வது என்று எண்ணிக்கொண்டிருந்தபோது ராஜீவ் மேனன் எனக்குப் பிடித்துப் போனார். ஒருநாள் அதிகாலை 4:30 மணிக்கு வாக்கிங் செல்லக் கிளம்பிக்கொண்டிருந்த ராஜீவ் மேனன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். அவர்தான் திறந்தார். யார் வேண்டும் என்றார்.
உங்களிடம் உதவியாளனாகச் சேர விரும்புகிறேன் என்றேன். உள்ளே வா, இந்தா சாண்ட்விச் என்று அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததில் பாதியைப் பிட்டு எனக்குக் கொடுத்தார். அந்த நொடியே என்னை உதவியாளனாகச் சேர்த்துக்கொண்டார். என்னை சார் என்று கூப்பிடுவதாக இருந்தால் பொழுது புலரும் முன் இங்கிருந்து கிளம்பிவிடு. என்னை ராஜீவ் என்றுதான் கூப்பிட வேண்டும் என்றார். அடுத்து வந்த 8 ஆண்டுகள் அவரை விட்டு எங்கேயும் நான் நகரவில்லை. விளம்பரப் படங்களின் பிதாமகன் என்று அவரை நான் சொல்லுவேன்.
காட்சி மொழியின் அழகியல் என்றாலும், காட்சி மொழியின் யதார்த்தம் என்றாலும் அவற்றில் ராஜீவ் மேனன் விற்பன்னராக இருந்தார். விருப்பம் இருந்தால் அவனே கற்றுக்கொள்வான் என்று விட்டுவிடாமல் ஒரு குழந்தைக்குச் சொல்லித் தருவதைப் போல அவர் சொல்லித்தரும் அழகே தனிதான். இப்படித்தான் ஒளிப்பதிவு எனக்கு வசமானது.
நீங்கள் அறிமுகமான மின்னலே, காக்க, காக்க, இன்றும் பேசப்படுகின்றன. இந்த வாய்ப்புகள் எப்படி அமைந்தன?
நட்புதான் காரணம். ராஜீவ் மேனன் முதல்முறையாக ’மின்சாரக் கனவு’ படத்தை இயக்கியபோது அவரிடம் உதவி இயக்குநராக வந்து சேர்ந்தான் கௌதம் மேனன். அவனும் நானும் நண்பர்கள் ஆனோம். அந்தப் படம் வெளியான அடுத்த ஆண்டே, நான் படம் இயக்கத் தயாராகிவிட்டேன். இந்தக் கதையைக் கேள். நீதான் எனது ஒளிப்பதிவாளர் என்றான். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.
வேகம் மட்டுமல்ல, அத்தனை வேகத்திலும் தன் நட்புலகை விட்டுவிடாத அவனது தோழமையை எண்ணி வியந்துபோனேன். இப்படித்தான் மின்னலே படத்தில் தொடங்கிய எங்கள் கூட்டணி அடுத்து காக்க காக்க என்று தொடர்ந்தது. இன்றும் என்னைச் சந்திக்கிற ரசிகர்கள், தற்போது வெளியாகியிருக்கும் அரிமா நம்பியைப் பேசும் அதேநேரம் ’காக்க காக்க’ பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்குக் காட்சி யதார்த்தம் கொண்ட ஒளிப்பதிவு அது.
முதன்முறையாக ரெட் எபிக் கேமராவைப் பயன்படுத்தியவர் நீங்கள். டிஜிட்டல் படமாக்கல் இன்று தமிழ்சினிமாவை எப்படி மாற்றியிருக்கிறது. பிலிம் ரோலில் கிடைக்கும் தரம் டிஜிட்டல் ஒளிப்பதிவில் அப்படியே கிடைக்கிறதா?
பிலிம் ரோல் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்க முடியாது. ஒளிப்பதிவு டிஜிட்டலாக மாறியதில் தயாரிப்பாளரின் சுமை பாதியாகக் குறைந்துவிட்டது. பிலிம்ரோலில் படம்பிடித்தபோது அதை டிஜிட்டலாக மாற்றி, போஸ்ட் புரடெக்ஷன் முடித்து பிறகு மீண்டும் நெகட்டிவ், பிரிண்ட் என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் நிலைதான் இருந்தது.
ஆனால் இன்று டிஜிட்டலாகப் படம்பிடித்து, டிஜிட்டலாக ஒளிபரப்புவதுவரை மொத்தமாக மாறி விட்டோம். பிலிம் ரோலின் தரத்தை டிஜிட்டலில் கொண்டுவர கேமராக்களிலேயே நிறைய வசதிகள் வந்துவிட்டன. அந்த வசதிகளோடு ஒளிப்பதிவாளரின் ஒளியமைப்பு முறையும், தேர்ந்தெடுக்கும் வண்ணக்கலவையும் இணைந்துகொள்ளும்.
அதேநேரம், ஒளிப்பதிவாளர் தனது படைப்புத் திறனையும் காட்சியில் பொருத்த வேண்டும். மிக முக்கியமாக இயக்குநரின் இரண்டு கண்களாகவும் ஒரு ஒளிப்பதிவாளர் இருந்தால் டிஜிட்டல் ஒளிப்பதிவில் நாம் இன்னும் பல எல்லைகளைத் தொட முடியும்.
ஒளிப்பதிவாளர்கள் அனைவரும் இயக்குநர் களாக ஜெயித்துக்காட்டும் காலகட்டம் இது. நீங்கள் எப்போது இயக்கத்தில் இறங்க இருக்கிறீர்கள்?
அதற்கான காலம் கனிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். கைநிறைய பல நண்பர்களின், உறவினர்களின் வாழ்க்கைக் கதைகள் என்னைத் திரைக்கதையாக்கு என்று துரத்திக் கொண்டிருக்கின்றன. என்றாலும் என் ஒளிப்பதிவைக் காதலிக்கும் நண்பர்களை நான் கைவிடத் தயாராக இல்லை.
காரணம் அவர்கள் கொண்டு வரும் கதைகளில் திரியும் கதாபாத்திரங்களில் ஒன்றுபோல நானும் அவர்களது கதைகளில் தொலைந்து விடுகிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒளியின் உலகில் உருவம் தந்து, அவர்களது பிரச்சினைக்கு ஒரு தீர்வையும் தந்து திரையில் அவை உயிர்பெறும்வரை நான் என் கேமராவின் இயக்கத்துக்கு இடைவேளை விட முடிவதில்லை. மிகச்சரியாகத் திட்டமிட்டு விரைவில் படம் இயக்குவேன். அது எல்லோருக்குமான படமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT