Last Updated : 01 Aug, 2014 09:10 AM

 

Published : 01 Aug 2014 09:10 AM
Last Updated : 01 Aug 2014 09:10 AM

சிங்கம் மறுபடியும் சீறுமா?

சூர்யா இதற்கு முன்பு சென்னை டானாக நடித்த படம் ‘ஸ்ரீ’. அதன் பிறகு அப்படியொரு கதாபாத்திரத்தை அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. தற்போது அஞ்சான் திரைப்படத்தில் ‘ராஜு பாய்’ என்ற ஸ்டைலிஷ் மும்பை டானாக நடித்திருப்பதில் அவரது ரசிகர்கள் குஷியாகியிருக்கிறார்கள். சூர்யாவும் அஞ்சானின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் உற்சாகத்தில் இருக்கிறார். சூர்யாவைச் சந்திக்க இதைவிடப் பொருத்தமாக ஒரு தருணம் அமையுமா என்ன?

அஞ்சான் படம் பற்றிக் கூறுங்கள்

அஞ்சாதவன் என்பது தலைப்பின் பொருள். கதை நடக்கும் இடம் மும்பை. படப்பிடிப்பும் அங்கேதான் நடைபெற்றது. கதை சொல்லும்போது என்மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார் இயக்குநர் லிங்குசாமி. படப்பிடிப்பு முடிந்தவுடன் இன்று நான் அவரது ரசிகனாகிவிட்டேன். காரணம், அவர் படமெடுக்கும் தன்மை, சுறுசுறுப்பு, எந்தக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லித்தரும் பாங்கு, இவை எல்லாவற்றையும்விட அவர் அன்பாக, சகோதரத் தன்மையுடன் பழகும் விதம் இருக்கிறதே, அதை என்னால் மறக்கவே முடியாது.

அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸுடன் சேர்ந்து என்னையும் ஒரு சகோதரனாகச் சேர்த்துக்கொண்டார் என்பதுதான் உண்மை. அஞ்சான் படத்தில் எனது ரசிகர்கள் விரும்பும் அனைத்தும் இருக்கும். இதில் நான் ராஜு பாய், ,கிருஷ்ணா என்ற இரு வேடங்களில் நடிக்கிறேன். இது ஒரு கேங்க்ஸ்டர் படம் என்ற நிலையைத் தாண்டி அனைவரும் விரும்பும் படமாக அமைந்திருக்கிறது. எனக்கு மட்டுமல்ல எங்கள் யூனிட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். மக்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

பாடிய அனுபவம் எப்படி?

எனக்கு புது அனுபவம், எனென்றால் நான் பாத்ரூம் பாடகர்கூட இல்லை. ஆனால் இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இருவரும் சேர்ந்து என்னை உற்சாகமூட்டி இரண்டு மணிநேரத்தில் பாட வைத்தார்கள். அஞ்சான் இசைத்தட்டு வெளியான உடன் எனக்குப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் அந்தப் பாராட்டுக்கு உரியவர்கள் இவர்கள் இரண்டு பேரும்தான்.

ஒரு வருடத்திற்கு ஒரு படமா?

ஒரு வருடத்திற்கு இரண்டு படம் கொடுக்க நான் விரும்புகிறேன். ஆனால் அது சில பல காரணங்களால் தள்ளிப்போகின்றன. என்னுடைய படங்களின் தயாரிப்பும், விநியோகமும் சாதனை என்ற எண்ணத்தையும் மீறி, ஜனரஞ்சகமான படங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறேன்.

என்னை வைத்துப் படம் எடுக்கும் இயக்குநர்கள், புதிதாக என்னைத் திரையில் காட்ட விரும்புகிறார்கள். அதனால் ஒவ்வொரு படமும் வித்தியாசமாகிறது. மக்கள் விரும்பும் படமாக அது மாறிவிடுகிறது. இதன் விளைவாகவே ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் இடைவெளி அதிகமாகிறது. இதைக் குறைக்க முயற்சி செய்கிறேன். அடுத்த வருடம் இது சாத்தியமாகும் என நம்புகிறேன் .

இந்தியில் நடிக்க விருப்பம் இல்லையா?

விருப்பம் இல்லை என்று சொல்லுவதைவிட, நேரம் இல்லை என்பதுதான் சரியான பதில். காரணம் என்னுடைய படங்கள் அனைத்தும் தென்னக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், தமிழில் எனக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவுக்குத் தெலுங்கிலும், ரசிகர்கள் என்மீது அன்புமழை பொழிகிறார்கள். பல தெலுங்கு தயாரிப்பாளர்கள் நேரடித் தெலுங்குப் படத்தில் என்னை நடிக்க கேட்டிருக்கிறார்கள். அதுகூட அடுத்த வருடம் நடக்கும் என நினைக்கிறேன். இப்போதைக்கு நேரடி இந்திப் படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை.

மும்பையில் அஞ்சான் படப்பிடிப்பு நடைபெற்றபோது ரசிகர்களின் அன்புத்தொல்லை இருந்ததா?

அன்பு என்று சொல்லிவிட்டு ஏன் தொல்லை என்கிறீர்கள்? அவர்களது பாசத்தில் இணைந்து நான் சந்தோஷப்பட்டேன் என்று கூறுங்கள். என்னை அவர்களுக்கு நன்றாக அடையாளம் தெரிகிறது. என்னைச் சந்தித்து, கைகொடுத்துத் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொள்கிறர்கள்.

அமெரிக்காவிலேயே என்னைச் சந்தித்துப் பேசுகிறார்கள் என்றால் மும்பை எம்மாத்திரம்? படப்பிடிப்புக்குத் தடங்கல் வராதவண்ணம் என்னைச் சந்திக்கிறார்கள், பேசுகிறார்கள், அன்பைப் பொழிகிறார்கள் என்றால் அது மிகையாகாது.

அஞ்சான் படத்தில் அடிபட்டதன் விளைவு?

அஞ்சான் படத்தின் சண்டைக் காட்சிகளில் நானே நடிக்க வேண்டும் என விரும்பினேன் அப்படி நடிக்கும்போது அடிபட்டது. அடிபட்ட பிறகு தினமும் பிசியோதெரபி செய்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தினமும் சண்டைக் காட்சிகளில் மட்டுமே நடிக்கும் நடிகர்கள், குறிப்பாக ஸ்டண்ட் கலைஞர்கள் நிலைமையை நினைத்தேன்.

அவர்களுக்கு என்னாலான சிறிய உதவியைச் செய்ய விரும்புகிறேன். வருடத்திற்கு இரண்டு முறை இலவசமாக பிசியோதெரபி வகுப்பு வைத்து, அவர்களது உடலையும் உள்ளத்தையும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புகிறேன். அதையும் கூடிய விரைவில் செய்ய முடிவு செய்துள்ளேன்.

சிங்கம் மூன்றாம் பாகம் உண்டா?

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அடுத்த வருடம் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். அது சிங்கம்-3ஆக மாறுமா என்று எனக்கு இப்போது தெரியாது. காரணம், சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம்-2 படம் பண்ணப் போகிறோம் என்று யாருமே நினைக்கவில்லை. சிங்கம் படத்தின் முதலிரண்டு பாகங்களுமே இந்தியில் மீண்டும் எடுக்கப்பட்டு , முதல் பாகம் அங்கே மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இரண்டாம் பாகமும் வெளிவர இருக்கிறது. சிங்கம் படத்தின் தமிழ் நாயகன் என்ற பெயர் எனக்குக் கிடைக்கப்பெற்றதால் இந்தி மொழி பேசும் மக்களிடையே எனக்குப் பெயர் கிடைத்துள்ளது. உங்களைப் போலவே பொறுத்திருந்து பார்க்கலாம் சிங்கம்-3 பற்றி.

விக்ரம்.கே.குமார் இயக்கத்தில் நீங்கள் நடிப்பதால் தமிழில் மனம் வருமா?

இயக்குநர் விக்ரம்.கே.குமார் சமீபத்தில் இயக்கி வெற்றிபெற்ற தெலுங்குப் படம் மனம். இதில் நாகேஸ்வர ராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, அவருடைய மகன் நாக சைதன்யா ஆகிய மூவரும் இணைந்து நடித்திருந்தனர். என் தந்தை சிவகுமார், மனைவி ஜோதிகா ஆகிய இருவருமே நடிகர்கள் என்பதால் இந்தக் கேள்வி எழுந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் அப்படி ஒரு படம் எடுக்கும் முடிவில் இயக்குநரும் இல்லை, நானும் இல்லை. இப்போது நான் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதற்கு பிறகு இயக்குநர் ஹரி படத்திலும், பின்னர் விக்ரம்.கே. குமார் படத்திலும் நடிக்க இருக்கிறேன்.

அஞ்சான் வெளியாகவிருக்கும் சமயத்தில் உங்கள் மனநிலை எப்படியிருக்கிறது?

உண்மையாக உழைத்திருக்கிறோம். மக்களுக்குச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படத்தைக் கொடுக்க இருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை வெற்றி நிச்சயம், காரணம் எல்லா தரப்பு ரசிகர்களையும், வயது வித்தியாசமின்றி மகிழ்விக்கத் தயாராகிவிட்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x