Published : 29 Aug 2014 12:08 PM
Last Updated : 29 Aug 2014 12:08 PM
“இப்போதெல்லாம் கோடிகளைக் கொட்டி ரூம் போட்டுக் கதை விவாதம் என்று சொல்லி இங்கும் அங்கும் பறக்கிறார்கள். ஆனால் போகிற போக்கில் அவரோட காரில் அமர்ந்து எழுதின கதைதான் இந்த ரொமாண்டிக் கலாட்டா கதை. படம் வெளிவந்தபோது அவரை ‘தென்னாட்டு சாந்தாராம்’என்று பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின. இப்படி என் நண்பனைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம். படத்தோட தலைப்பைப்போல அதுக்கு இங்கே நேரமில்லை”
தனி முத்திரை கொண்ட தன் படங்களால் தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்த இயக்குநர் ஸ்ரீதரைப் பற்றி, சமீபத்தில் நடைபெற்ற ‘காதலிக்க நேரமில்லை’படத்தின் 50 ஆண்டுப் பொன்விழா மேடையில் ‘சித்ராலயா’ கோபு பகிர்ந்துகொண்ட வார்த்தைகள்தான் இவை.
இயக்குநர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு வெளிவந்த முழுநீள ரொமாண்டிக் காமெடிப் படம் ‘காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா, சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. நடிகைகள் காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, இயக்குநர் ‘சித்ராலயா’கோபு, நடிகர் வி.எஸ். ராகவன், பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே. ஜேசுதாஸ் உட்பட அப்படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரவிச்சந்திரனின் மனைவி விமலா, கிரேஸி மோகன், இயக்குநர்கள் மனோபாலா, சேரன், நடிகர் ஆனந்த்பாபு, காந்தி கண்ணதாசன், ‘ஆல்பா மைண்ட் பவர்’ டாக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் சில காட்சிகளும், பாடல்களும், திரையிடப்பட்டன. ஒய்.ஜி. மெலடி மேக்கர்ஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
‘கல்யாணப் பரிசு’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ மாதிரியான படங்களைக் கொடுத்துவிட்டு முழு நீளக் காமெடி கதையைக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற அச்சம் அப்போது ஸ்ரீதருக்கு இருக்கவே செய்தது. உடன் இருந்த நண்பர்கள் உற்சாகப்படுத்தவே துணிந்து இறங்கியதால்தான் இந்தக் காமெடி காவியமே உருவாகியிருக்கிறது.
குமாரி சச்சு நாயகியாக வளர்ந்துகொண்டிருந்த காலக் கட்டத்தில் இந்தக் காமெடி கேரக்டரைப் பற்றி விளக்கியபோது முதலில் நடிக்கச் சம்மதிக்காமல்தான் இருந்திருக்கிறார். ‘‘படத்தில் ராஜஸ்ரீ ஒரு நாயகி, காஞ்சனா ஒரு நாயகி, நீயும் ஒரு நாயகி’ என்று சொல்லித்தான் என்னை ஏமாற்றி நடிக்க வைத்தார்கள். அன்று நான் இந்தப் படத்தில் நடிக்காமல் போயிருந்தால் இன்று இந்த சச்சு இல்லை. இதற்கு ஸ்ரீதருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்” என்று 50 ஆண்டுகளுக்கு முந்தைய நடிப்பு அனுபவத்தைப் பூரிப்போடு பகிர்ந்துகொண்டார் சச்சு.
மறக்க முடியாத அனுபவங்கள்
“தொடர்ந்து எங்கள் மீது கேமரா வெளிச்சம் விழுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர், ஸ்ரீதர்” என்ற காஞ்சனாவின் வார்த்தைகளும், “புதுமுகம் ரவிச்சந்திரனுக்கு ஜோடியாக நடிக்க யோசித்தாலும் ஸ்ரீதர் படம் என்பதால் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்தேன்” என்ற ராஜஸ்ரீயின் கணிப்பும் இன்றைய இளைய இயக்குநர்கள் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டிய வார்த்தைகள்.
“உம் பேருதான் கோபுவா. நீதான் ஸ்ரீதருக்கு சோத்துக் கையாமே” என்று திருவல்லிக்கேணி பகுதியினர், தன்னை அன்பாக விசாரிப்பார்கள் என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் கோபு”. என் மூன்றாவது பையன் ஸ்ரீராம், ‘என்னா கோபு, எப்படியிருக்கே? ’ என்பான். என்னடா பெத்த அப்பனையே பேர் சொல்லிக் கூப்பிடுறேன்னு கேட்டா.. ‘ ரோட்டுல போற வர்றவன் எல்லாம் கூப்பிடுறான், நான் கூப்பிட்டா என்ன என்று கேட்பான். அந்த அளவுக்கு என்னைப் பிரபலமாக்கிய பெருமை நண்பன் ஸ்ரீதரைத்தான் சேரும்” என்ற, கோபுவின் பேச்சு நிகழ்ச்சியில் அனைவரையும் சிரிக்கவும் நெகிழவும் வைத்தது.
காதலிக்க நேரமில்லை படத்தை மீண்டும் ரீமேக் செய்யப்போவதாகச் சொன்னார்கள். இப்போது ஸ்ரீதர் இங்கே உயிரோடு இருந்து ‘வாடா கோபு நாமளே படத்தை ரீமேக் செய்வோம்’ என்று கேட்டாலும் வேண்டாம் என்பேன். காரணம், பாலையாவுக்கு எங்கே போவது,? நாகேஷ் - பாலையா காம்பினேஷனை யார் நிரப்புவார்? ரவியோட டான்ஸ் மூவ்மெண்ட், வின்செண்ட் போட்டோகிராபி, கங்காவோட ஆர்ட் இதெல்லாம் இனி சாத்தியப்படுத்த முடியுமா?’ அதனால்தான் வேண்டாம் என்று சொல்வேன்” என்றார் கோபு.
“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்தை, அதே கலைஞர்கள் பங்கேற்றுக் கொண்டாடும் இந்த மேடை காலத்தை வென்ற இயக்குநர் ஸ்ரீதர் மாதிரி ஒரு இயக்குநரால் மட்டுமே சாத்தியம்” என்றார் நிகழ்ச்சியை வடிவமைத்து ஒருங்கிணைத்த ஒய்.ஜி. மகேந்திரன். இவரது எண்ணத்தில்தான் இந்த நிகழ்ச்சிக்கான கரு உருவானது என்பதையும் படம் சம்பந்தப்பட்ட கலைஞர்களைத் தொடர்புகொண்டு விழாவுக்கு வரவழைத்தவரும் இவரே என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.
அதே குரல் அதே பாடல்
‘என்ன பார்வை இந்தப் பார்வை’, ‘மாடி மேல மாடி வச்சி’ பாடல்களிலிருந்து ஓரிரு வரிகள் பாடி அரங்கத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்திய பாடகர் ஜேசுதாஸ், அந்தக் காலகட்ட இசைப் பயணம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதை மேடைக்குக் கீழே அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்த பாடகி எல்.ஆர். ஈஸ்வரி 50 ஆண்டுகளுக்கு முன் தான் பாடிய ‘மலரென்ற முகமொன்று’ பாடலைத் துடிப்பான இளம் பாடகியைப்போலப் பாடியபோது அவரது முகத்தில் நினைவுகளின் ஆனந்தத் தாண்டவம்.
இந்த நிகழ்ச்சியை ‘தி இந்து டாக்கீஸ்’ உடன் இணைந்து ஆல்பா மைண்ட் பவர், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், ராம் பிராப்பர்ட்டீஸ், ஹுண்டாய் மோட்டார் பிளாசா, அசோக் குரூப்ஸ், வெற்றி ரியல்ஸ், அப்பாஸ் கல்சுரல் ஆகியவை இணைந்து வழங்கின.
மூன்று மணிநேரத்துக்கு நிகழ்ச்சி நீண்டாலும் வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சி முடியும்வரை மேடை நிகழ்வுகளோடு லயித்துப்போய் உட்கார்ந்திருந்ததே ‘காதலிக்க நேரமில்லை’யின் காலத்தை வென்ற தன்மையைக் காட்டியது. நாகேஷ் பாலையாவுக்குக் ‘கதை’ சொல்லும் காட்சியை நிகழ்ச்சியின் கடைசியில் திரையிட்டது விழாவுக்குப் பொருத்தமான முத்தாய்ப்பாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT