Published : 30 Nov 2018 10:30 AM
Last Updated : 30 Nov 2018 10:30 AM
நெட்பிளிக்ஸ் ஒரிஜினல்ஸ் வரிசையில் சர்வதேச அளவில் பிரபலமான தொடர் ‘நார்கோஸ்’. 2015-ல் தொடங்கி வருடத்துக்கு ஒன்றாக வெளியான சீஸன்களின் நிறைவாக ‘நார்கோஸ்: மெக்சிகோ’வை நவம்பர் மத்தியில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டது.
திரைப்படங்களில் இல்லாத அளவுக்கு பாலியல், வன்முறை, போதைக் கலாச்சாரம் போன்றவை இணையத் தொடர்களில் மலிவாக நிறைந்திருக்கும். கதைக்கு அவசியமானபோதும் பெரும்பாலும் திணிக்கப்பட்ட காட்சிகளாகவே அவை இருக்கும். ஆனால் நார்கோஸ் தொடரின் மையமே போதைப் பொருள் சாம்ராஜ்யம் என்பதால், இணையத் தொடருக்கான இணையற்ற சுதந்திரம் இதில் வெகுவாகக் கைகொடுத்தது.
அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் அதிகாரபூர்வமற்ற பிரதான தொழிலாக, கொகெய்ன் போதைப் பொருள் உற்பத்தியும் கடத்தலும் நிலவியது.
உள்நாட்டுக் கலவரம், பொருளாதார நசிவு என நாட்டின் அலைக்கழிப்புகள் போதைக் கடத்தல்காரர்களுக்கு அனுகூலமானது. அவர்களின் மத்தியில் உருவான எஸ்கோபர் தனது 30 வயதுக்குள் உலகம் அதுவரை அறிந்திராத மிகப் பெரும் போதை சாம்ராஜ்யத்தை நிறுவினான்.
இந்த எஸ்கோபரின் சமகாலத்திய சம்பவங்களைக் கொண்டு உருவானதே நார்கோஸ் தொடர். வெற்றிகரமான தொடர்களின் இலக்கணமாக, அதன் கிளைக்கதை ஒன்றை நிறைவு சீஸனாக்கி ‘நார்கோஸ்: மெக்சிகோ’ என்ற தலைப்பில் தற்போது வெளியிட்டிருக் கிறார்கள். முந்தைய கதையோட்டத்தின் ஒரு பகுதியை மேலும் விளக்கமாக அலசும் ‘ஸ்பின் ஆஃப்’ தொடராக இது அமைந்துள்ளது.
எத்தன் எஸ்கோபர்
16 வயதில் ஒரு சோதா தாதாவிடம் அடியாளாகச் சேர்ந்த எஸ்கோபர், அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆசியுடன் சட்டவிரோதக் கடத்தல்கள் செய்து முக்கிய கேங்ஸ்டராக எப்படி வளர்ந்தான், அப்படி வளர்த்த அமெரிக்காவுக்கு எதிராகவே அவன் எப்படித் திரும்பினான் என்பதை அட்டகாசமாக தோலுரித்து இருக்கிறார்கள்.
ஆட்காட்டிகள் முதல் நீதிபதிகள் வரை தன்னை எதிர்த்தவர்களைக் கொன்று குவித்தாலும், உள்ளூர் மக்களுக்கு ராபின்ஹூட்டாக உதவிகளை அள்ளி வழங்கினான். உள்நாட்டுப் புரட்சிப் படைகளுக்கு புரவலர் ஆனான். சிறிய விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கி அதில் கொகெய்ன் கடத்தி அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலியானான்.
உள்நாட்டு எதிர்ப்புகளைச் சமாளிக்க அரசியலில் குதித்து ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமானான். கொலம்பியாவை அமெரிக்கா அதிகம் நெருக்கவே தானே கட்டிய சொகுசுச் சிறையில் சிலகாலம் இருந்தான். 43 வயதில் சுட்டுக் கொல்லப்படும் வரையிலான எஸ்கோபரின் ஒவ்வொரு நகர்வும் ஏராளமான புத்தகங்களாகவும், திரை படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் பின்னாட்களில் வெளியாயின.
நார்கோஸ்
நெட்பிளிக்ஸ் அதிரடியாக எஸ்கோபர் களமாடிய மண்ணிலிருந்தே காட்சிகளைப் படம் பிடித்துப் புதிய தொடரை வெளியிட்டது. தொடர் நெடுக நிஜமான படத்துணுக்களையும் கோத்து, ஒவ்வோர் அத்தியாயத்தையும் நம்பகத்தன்மையுடன் சுவாரசியம் ஆக்கியது. அமெரிக்கத் தயாரிப்பு என்பதால் எஸ்கோபர் கதையுடன், அவனை அடக்குவதற்கான அமெரிக்காவின் பகீரத முயற்சிகளையும் பதிவு செய்தது.
கொலம்பிய தேசத்தின் காடுகள், ஒன்ற வைக்கும் பின்னணி இசை, ’லேப்’ எனப்படும் கொகெய்ன் தயாரிப்புக் கூடங்கள் என ஹாலிவுட் திரைப்படத்திற்கான உழைப்பையும், பிரம்மாண்டத்தையும் நெட்பிளிக்ஸ் முயன்றது.
நிறைவு சீஸன் படப்பிடிப்பின்போது எஸ்கோபர் தம்பி பகிரங்க மிரட்டல் விடுத்ததும், படக்குழுவுக்கு உதவிய உள்ளூர் வழிகாட்டியைச் சுட்டுக்கொன்றதும் கூட நடந்தன. இந்த மிரட்டலுக்குப் பயந்து நான்காவது சீஸனின் கதையை கொலம்பியாவில் இருந்து மெக்சிகோவுக்குக் கொண்டு சென்றதாகவும் ஒரு தகவல் உண்டு.
ஆனால், முதல் சீஸனுக்குப் பிறகு சுற்றிச் சுற்றி ஒரே மாதிரியான மனிதர்களும் அவர்களின் நடவடிக்கைகளும் தொடரில் அலுப்பூட்ட செய்தன. அதிலும் திரைப்படம், புத்தகம் என எஸ்கோபர் வாழ்வை வெளியே அதிகம் அறிந்தவர்களுக்குச் சற்று ஏமாற்றத்தையும் தந்தன. தற்போது வெளியாகி இருக்கும் நிறைவு சீஸன், எஸ்கோபர் காலத்தில் இணையாக மெக்சிகோவில் இயங்கிய, அதிகம் அறியப்படாத ஆனால் கவனத்திற்கு உரிய நபர்களையும் சம்பவங்களையும் ஆவணங்களுடன் பதிவு செய்திருக்கிறது. அந்த வகையில் இந்த சீஸனைப் பார்க்கலாம்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT