Published : 16 Nov 2018 10:43 AM
Last Updated : 16 Nov 2018 10:43 AM
தென்னிந்திய சினிமாவின் முன்னணிப் பட நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில், வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துவரும் சுகுமார் இயக்கத்தில், கடந்த 2011-ல் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘100% லவ்’. ஏழு ஆண்டுகளுக்குப் பின், அதைத் தற்போது தமிழில் ‘100% காதல்’ என்ற தலைப்பில் மறுஆக்கம் செய்திருக்கிறார் எம்.எம்.சந்திரமௌலி. அவருடன் உரையாடியதிலிருந்து…
நாகசைதன்யா, தமன்னா இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்த படமல்லவா ‘100% லவ்’ ?
ஆமாம்! நாகசைதன்யா அப்போது பெரிய ஸ்டார் கிடையாது. தமன்னாவுக்கு டோலிவுட்டில் வரிசையாக மூன்று தோல்விகள். அப்படியிருக்கும்போது ஒரு சூப்பர்ஹிட் இயக்குநர் ஏன் இவர்களை வைத்து படம் பண்ணுகிறார் என்று சுகுமாரையே அப்போது கலாய்த்தார்கள். ஆனால் நாகசைதன்யா, தமன்னா இருவரையும் நட்சத்திரங்களாக்கிய படமென்றால் அது ‘100% லவ்’தான்.
ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மறுஆக்கம் செய்திருக்கிறீர்களே?
எல்லாத் திரைக்கதைகளுக்கும் ‘எவர்கிரீன்’ தன்மை அமைவதில்லை. இன்னும் 25 ஆண்டுகள் கழித்து ரீமேக் செய்தாலும் ‘100% லவ்’ ஜெயிக்கும். காலத்தை வெல்லும் காதல் கதை இது. அந்த அளவுக்கு எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய உளவியல் அணுகு முறையைத் திரைக்கதையில் கையாண்டிருக்கிறார் இயக்குநர் சுகுமார்.
அவர் எனது நீண்டகால நண்பர். அவரது படங்களில் ஒன்றைத் தமிழில் ரீமேக் செய்து இயக்கலாம் என்று நான் கேட்டபோது, 2015-ல் வெளியாகி ஹிட் அடித்த அவரது ‘குமாரி 21 எஃப்’ படத்தைப் பண்ணுங்களேன் என்றார். ஆனால் ஏனோ எனது உள்மனம் ‘100% லவ்’ பற்றித் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தது. அப்படித்தான் ‘100% லவ்’ தமிழில் தற்போது ‘100% காதல்’ ஆகியிருக்கிறது.
நாகசைதன்யா – தமன்னா ஜோடியை ஜி.வி.பிரகாஷும் – ஷாலினி பாண்டேவும் எந்த அளவுக்கு ரீபிளேஸ் செய்திருக்கிறார்கள்?
இதுபோன்ற ஒரு முழுமையான காதல் கதையில் நடிக்க இமேஜ் வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளாத அழகான நடிகர்கள் தேவை. அதற்குக் கல்லூரி மாணவர்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஜி.வி.பியும் ‘அர்ஜுன்ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டேயும் கச்சிதமாகப் பொருந்துவார்கள் என நினைத்தேன். நான் நினைத்ததுபோலவே இருவருக்குள்ளும் அற்புதமான கெமிஸ்ட்ரி. நடிப்பில் இருவருமே போட்டிபோட்டு அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.
எம்.எம்.சந்திரமௌலி என்ற உங்களது பெயர் ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியை நினைவுபடுத்துகிறது! உங்களைப் பற்றிக் கொஞ்சம்…
சித்தூர்தான் சொந்த ஊர். அதை ஆந்திராவின் ஊர் என்றே கூறமுடியாது. தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் ஊர்களில் அதுவும் ஒன்று. அங்கே தமிழ்ப் படங்கள் நேரடியாக ரிலீஸ் ஆகும். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றாலும் ஹைதராபாத் செல்ல மாட்டோம்.
பக்கத்தில் இருக்கும் சென்னைக்குத்தான் வருவோம். அப்படித்தான் தமிழ் சினிமாவின் மீதும் காதல் வந்தது. உடனே சென்னை வந்து தமிழ்நாடு அரசுத் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றேன். படிப்பு முடிந்ததுமே ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராகச் சேர்ந்து, பின்னர் அவரிடம் ஆபரேட்டிவ் கேமராமேனாகப் பல படங்களுக்குப் பணிபுரிந்தேன்.
பின்னர் அவர் இயக்கிய தமிழ், தெலுங்குப் படங்களுக்கும் அவரது இணை இயக்குநராகப் பணியாற்றினேன். அதன்பிறகு 30 படங்களுக்குமே ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தேன். பின்னர் விஜய் டிவியில் சில சீரியல்களைத் தயாரித்தேன். ஒரு கட்டத்தில் இங்கே போரடித்துவிட்டது. அதனால் 2010 வாக்கில் அமெரிக்கா சென்று நியூயார்க்கில் குடியேறினேன். அங்கே டெலி சீரியல்கள், சில ஹாலிவுட் படங்கள், விளம்பரங்கள் என்று பணிபுரிந்தேன்.
அங்கே பட விநியோகத்திலும் ஈடுபட்டேன். எவ்வளவு பணம் வந்தாலும் நமது ஊரில், நமக்குப் பிடித்த கலையைச் செய்துபார்ப்பதில்தான் சந்தோஷம் இருக்கிறது என்று சென்னைக்குத் திரும்பிவிட்டேன். வந்தவுடனேயே இயக்குநர் சுகுமார் என்னை அழைத்து நீங்கள் இயக்க, இது சரியான நேரம் என்று உற்சாகப்படுத்தினார். ‘100 % லவ்’ படத்தின் இந்தி மறுஆக்க உரிமையையும் எனக்குக் கொடுத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT