Published : 09 Nov 2018 11:37 AM
Last Updated : 09 Nov 2018 11:37 AM
நவம்பர் 11: முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவு
சமூகத்தில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் திரை வழியே கொண்டுவந்துவிடும் திரைத்துறையினர், போர்கள் தொடர்பான கதைகளையும் போரிலும் போரைக் காரணம் காட்டியும் அரங்கேற்றப்படும் மனிதத் தன்மையற்ற நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு போரையும் அதன் அரசியலையும் மையமாக வைத்து பிரம்மாண்டமானப் படங்களை உருவாக்கிய இயக்குநர்கள் ஹாலிவுட்டில் பலர் உண்டு.
மாறாக, போர் காட்சிகளை மையப்படுத்தாமலேயே, போரின் விளைவுகளைச் சொன்ன படங்கள் உலக அரங்கிலேயே குறைவுதான். போரால் மக்கள் படும் துயரங்களையும் போரின் தாக்கங்களையும் போரால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கசிந்துருகும் மனிதத்தையும் குண்டுமழை பொழியும் போர் மேகங்களுக்கு மத்தியில் வாழ்ந்தபடி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் எடுக்கும் முடிவுரை இல்லா முயற்சிகளையும் போர்த் திரைப்படங்கள் பேசியிருக்கின்றன.
திரைப்படம் வழியே போரின் ஆக்கிரமிப்பு சுயநலம் எனும் முகமூடியைக் கிழித்துக் காட்டிப் பெரும் வெற்றி பெற்ற படங்களும் உண்டு. பொதுவாக சினிமாவில் போர்க் காட்சிகளைவிட, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சினிமாக்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியா பெரிய போர்களை எதையும் சந்திக்காததாலோ என்னவோ, சொல்லிக்கொள்ளும்படியான போர்த் திரைப்படங்கள் நம்மிடம் இல்லை.
பாலிவுட்டில் ‘1971’, ‘கார்கில்’ சமீபத்தில் வெளியான ’காஸி அட்டாக்’ எனச் சில படங்களே போர்களை அடிப்படையாகக் கொண்ட தேசியப்பற்றை நேரடியாகப் பிரச்சாரம் செய்திருக்கின்றன. மிக அருகாமையில் இலங்கையில் உள்நாட்டுப்போர் நடந்தும், அதன் தாக்கம் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்துவந்தபோதும் அதன் பின்னணியைக் கொண்டு தமிழ் சினிமாவில் எந்தப் படமும் உருவாகவில்லை.
16 படங்கள்
போர்ப் படங்களைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என நினைக்கலாம். ஏனென்றால், முதலாம் உலகப் போர் நிறைவுற்ற நூற்றாண்டு இது. 1914-ல் தொடங்கிய இந்தப் போர், 1918 நவம்பர் 11-ம் தேதி அதிகாரபூர்வமாக முடிந்தது.
நாகரிக வாழ்க்கை தொடங்குவதற்கு முன்பு நாடு பிடிக்கும் ஆசையிலும் பலத்தைக் காட்டும் கர்வத்தாலும் மனிதர்களுக்குள் இருந்த குரூரங்களின் வெளிப்பாட்டாலும் போர்கள் நடந்தேறின. ஆனால், நாககம் தழைத்தோங்கத் தொடங்கிய பிறகு இனம், நிறம், மொழி, மதம், நாடு, கலாச்சாரம், ஆயுதப் போட்டி, அயல்நாட்டின் வளங்களை சூறையாடுதல் எனப் போர்களின் பின்னுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் காரணங்கள் ஏராளம்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போரைப் பற்றி உலகில் உள்ள எல்லாத் தரப்பு மக்களும் நுணுக்கமாக உணர்ந்துவிட முடியாது. போரும் அதன் தாக்கமும் எப்படியிருக்கும் என்பதைத் திரைப்படங்கள்தான் மக்களுக்குத் திரை வழியே வெளிச்சம் போட்டுகாட்டின. அப்படி உலகை உலுக்கிய சிறந்த திரைப்படங்கள் பலவற்றைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங். ‘போர்த்திரை’ என்ற பெயரில் வெளியான இந்த நூல், சர்வதேச அளவில் பேசப்பட்ட
16 போர் தொடர்பான திரைப்படங்களைப் பற்றி ஆழமாகப் பேசுகிறது. ஒரு திரைப்பட ஒளிப்பதிவாளரின் பார்வையில் இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர், கொரியப் போர் போன்ற பரிச்சயமான போர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படங்களை நூலாசிரியர் தேர்ந்துகொண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதில் தொடர்புடைய போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட கதையைச் சொல்லும் ‘ஜட்ஜ்மெண்ட் அட் ந்யூரெம்பர்க்’ (1961);
அல்ஜீரிய விடுதலைப் போரின் கதையைத் திரை வழியே சொன்ன ‘தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்’ (1967); அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் துணை நின்ற ‘மைக்கேல் காலின்ஸ்’ (1996) போன்ற படங்கள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டமான 1939-ல் வார்சா வானொலி நிலையத்தின் மீது போடப்பட்ட வெடிகுண்டால், நிறுத்தப்பட்ட வானொலி சேவையையும் செய்தி அறிவிப்பாளரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி பியானிஸ்ட்’ (2002), இரண்டாம் உலகப் போரின் மனித உணர்வுகளற்ற கோரத்தை நுணுக்கமாக வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்தப் படமும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைவிட நாஜிக்களின் உச்சபட்ச கொடுமைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ படத்துக்கும் நூலாசிரியர் அறிமுகம் தந்திருக்கிறார்.
அரிதான முயற்சி
உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்த ஒரு சிறுமியின் அலறல் ஒளிப்படம் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. போர்க்களத்தில் உயிரைத் துச்சமென நினைத்து பகுங்குக் குழிகள் வழியாக போர்க் களத்தை உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லும் ஒளிப்படக்காரர்கள் பற்றிய ‘தி பேங் பேங் கிளப்’ (2011) படம் வாசிக்கும் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.
சமூக ஊடகங்கள் வழியாக எகிப்து தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைத்த ‘தி சோஷியல் நெட்வொர்க்’ (2010) போன்ற அண்மைக்கால படங்களையும் ‘போர்த்திரை’ தொட்டுப் பேசியிருக்கிறது. போர்கள் பற்றிய பல படங்கள் தொகுக்கப்பட்டிருந்தாலும், முதலாம் உலகப் போர் பற்றிய படம் எதுவும் இல்லாதது ஏமாற்றம்தான்.
போர்த் திரைப்படங்களைப் பற்றி மட்டுமே எழுதாமல், அந்தப் போரின் பின்னணியையும் அதில் ஆழமாகப் பொதிந்துள்ள அரசியலையும் எளிமையான வார்த்தைகளில் கோத்திருப்பது ‘போர்த்திரை’
புத்தகத்தில் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறது. தமிழில் திரைத்துறை குறித்த நூல்கள் அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில், போர் திரைப்படங்களை மையப்படுத்தி வந்திருக்கும் இந்த நூல் ஒரு அரிதான முயற்சி. திரை ஆர்வலர்கள் நூலகத்தில் இருக்க வேண்டிய ஒன்று.
நவம்பர் 11: முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவுபோர்த்திரை ஆசிரியர்: விஜய் ஆம்ஸ்ட்ராங் பக்கம்: 120 விலை: ரூ. 100 பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் தொடர்புக்கு: 044 65157525ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் |
தொடர்புக்கு: karthikeyan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT