Published : 02 Nov 2018 11:27 AM
Last Updated : 02 Nov 2018 11:27 AM
பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக ஜொலிக்க முடியும் என்பதுதான் 40-களின் தமிழ் சினிமாவில் நியதியாக இருந்தது. அதை உடைத்தெறிந்து, வசன உச்சரிப்பாலும், தன்னுடைய உடல்மொழி சார்ந்த நடிப்புத் திறத்தினாலும் விதவிதமான கதாபாத்திர பரிணாமங்களாலும், மக்களைத் தன்வசம் இழுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
“தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு பிறந்தது. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவர் அமரிக்காவில் பிறக்காதது” என்றார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அப்படிப்பட்ட ஒரு கலைஞரோடு பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றது எனது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனைச் சந்தித்தேன். அப்போது அவர், “ நான் சிவாஜிக்காக ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’ படத்தில் மிருதங்கம் வாசித்தேன். அந்தப் படம் வெளியான பிறகு, ‘சில இடங்களில் சிவாஜி அளவுக்கு உங்கள் வாசிப்பு இல்லை’ என்று பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என்றார். எந்த அளவுக்குச் சிறப்பான நடிப்பைச் சிவாஜி வெளிப்படுத்தியிருந்தால், புகழ்பெற்ற தொழில்முறை வித்வானின் இயல்பான வாசிப்பைக்கூட இப்படி விமர்சிக்கத் தோன்றியிருக்கும்!
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி நடிகர் திலகம் சிவாஜி 1988-ம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற அந்தக் கட்சியின் தலைமை அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவருடைய நேரம் தவறாமை எனும் உயர்ந்த பண்பு, அரசியலிலும் தொடர்ந்தது. பொதுவாக எந்தக் கட்சிப் பொதுக் கூட்டம் என்றாலும் மாலை 6 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தால், 7.30-க்குத்தான் தொடங்கும். முக்கியத் தலைவர்கள் 8 மணிக்கு மேல்தான் வருவார்கள். சிவாஜியோ கூட்டம் மாலை 6 மணி என்று போட்டிருந்தால் துல்லியமாகக் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மேடையில் இருப்பார். “ கட்சி மீட்டிங்கை சீக்கிரம் நடத்தி முடித்தால்தானே கூட்டத்துக்கு வருபவர்கள் சீக்கிரம் வீடு போய்ச்சேர முடியும்’’ என்பார்.
படப்பிடிப்பின்போது சிவாஜியைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருப்பார். ஆம்... பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும். அருகில் உதவியாளர் அடுத்த காட்சிக்கான வசனங்களைப் படித்துக் காண்பித்துக் கொண்டிருப்பார்; அப்போது இயக்குநர் ‘டேக் ரெடி’ என்று கூறியவுடன், சிங்கம் போல எழுந்துவந்து, காட்சியை ஒரே டேக்கில் நடித்துக் கொடுப்பார். நான் சொல்லும் இச்சம்பவங்கள் நடைபெறும்போது சிவாஜி 60 வயதில் இருந்தார்.
கட்சி அலுவலகத்துக்குச் சில ரசிகர்கள் தினந்தோறும் வருவார்கள். அப்போது ஒன்றிரண்டு பேரைத் தினமும் கட்சி அலுவலகத்தில் பார்த்த சிவாஜி, அவர்களைக் கூப்பிட்டு, “ஏதும் வேலை பார்க்கவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “இன்று விடுமுறை தலைவரே, அது இது” என்று மழுப்பினார்கள்.
அவர்களிடம், “என்னுடைய ரசிகர்கள் யாரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு, ரசிகர் மன்றப் பணியோ கட்சிப் பணியோ செய்ய வரக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறினார். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடையுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், “தொழிலைக் கவனிக்காமல், இங்கு என்ன வேலை ” என்று அக்கறையுடன் துரத்துவார்.
ஒரு சமயம் சென்னை, சூளைப் பகுதியில், கட்சிப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. ‘சிவாஜி’ கிருஷ்ணமூர்த்தி என்ற பேச்சாளர் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு நிமிடம்தான் பேச்சைக் கேட்டார், சிவாஜியின் முகம் வீரபாண்டிய கட்டபொம்மனைப் போலக் கோபத்தில் சிவந்தது. அவசரமாக எழுந்து சென்று அந்தப் பேச்சாளரின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தொடர்ந்து பேசாதபடி தடுத்து உட்கார வைத்துவிட்டார்.
தொகுப்பு: கே. சந்திரசேகரன்,
தலைவர் - நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT