Published : 22 Nov 2018 06:41 PM
Last Updated : 22 Nov 2018 06:41 PM
திரைக்கதையை ஒரு கலை வடிவமாக ஏற்றுக்கொள்ளாமல், இலக்கிய உலகம் தொடர்ந்து நிராகரித்துவருகிறது. ஏனென்றால், வார்த்தைகளின் வடிவில் இருக்கும் திரைக்கதை, காட்சிவடிவம் எடுத்து திரைப்படமாகும்போதுதான் அது கலை வடிவமாகிறது. அதைச் செய்பவர் இயக்குநர். காட்சிகளை நேர்கோட்டு வரிசையிலோ முன்பின்னாகவோ கலைத்துப்போட்டு அவற்றை ஒரு சட்டகத்துக்குள் ஒழுங்கமைக்கும் பஸில் விளையாட்டையே திரைக்கதை எழுத்தாளர் விளையாடுகிறார்.
வாழ்க்கை தரும் களைப்பிலிருந்து தற்காலிகமாக விடுதலைபெறத் திரையரங்கைத் தேடிவரும் மக்கள், உங்களின் திரைக்கதை விளையாட்டில் எதிர் ஆட்டக்காரர்போல இருக்கையில் வந்து அமர்கிறார்கள். நீங்கள் ஆடும் ஆட்டத்தில் ‘விறுவிறுப்பு’ இருந்தால் மட்டுமே அவர்கள் உங்கள் ஆட்டத்தை ரசிக்கத் தயாராக இருப்பார்கள்.
ஆட்டம் (காட்சி) தொடங்கியவுடன் உங்கள் நகர்வுகளை அவர்கள் ஊகிக்து விளையாடத் தொடங்குவார்கள். ஆனால், அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வதில்தான் உங்கள் திறமை வெளிப்பட வேண்டும். சக ஆட்டக்காரராக இருக்கையில் வந்து அமரும் மக்களை, வாய்பிளந்து உங்கள் ஆட்டத்தைக் காணும் பார்வையாளராக மாற்றி இருக்கையிலேயே இருத்தி வைப்பதில்தான் உங்கள் திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
மிகச் சிறந்த கருத்தைத் திரைக்கதை வழியே கடத்த நினைத்தாலும் விறுவிறுப்பாகச் சொல்லப்படாவிட்டால் மக்களிடம் வரவேற்பு கிடைக்காது. உயர்ந்த நோக்கங்களை நீங்கள் கொண்டிருந்தாலும் கவனமாக ஆடாவிட்டால் ‘ரன் அவுட்’ ஆகிவிடுவீர்கள். கருத்துரீதியாக உயர்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டிருந்து, விறுவிறுப்பாகச் சொல்லப்படாமல் போன நூற்றுக்கணக்கான சிறந்த படங்களை, பெரிய நட்சத்திரங்கள் நடித்திருந்தும் மக்கள் நிராகரித் திருக்கிறார்கள்.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம்: ருத்ரைய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம். எண்பதுகளின் இறுதியில் முன்னணி நட்சத்திரங்களாக ஆகியிருந்த கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருக்கும் படம் மக்களால் நிராகரிக்கப்பட்டது. அப்படம் வெளியான நேரத்தில் சென்னை வந்திருந்த வங்காள இயக்குநர் மிருணாள் சென், ‘அவள் அப்படித்தான்’ படத்தைப் பார்த்துவிட்டு, நல்ல படங்கள் ரசிகர்களால் நிராகரிக்கப்படுவது குறித்து தனது வருத்தத்தைத் பதிவு செய்த பிறகே, அந்தப் படத்துக்குச் சிறிதளவு கவனம் கிடைத்தது.
துண்டாடப்பட்ட திரைக்கதை
வண்ணநிலவன், கே.ராஜேஷ்வர் ஆகியோருடன் இணைந்து அந்தப் படத்தின் திரைக்கதையை ருத்ரய்யா எழுதியிருந்தார். மூன்று கதாபாத்திரங்களை முன்னிறுத்திக் கதை நகர்ந்தாலும் மஞ்சு கதாபாத்திரத்தின் மீதே மையம் கொண்ட திரைக்கதை, துண்டு துண்டான காட்சிகளாக நின்றது. அதுவரையிலான தமிழ் சினிமாவில் ஆண்களின் மரபார்ந்த வார்ப்புகளாக இருந்த பெண்மைக்கு மாபெரும் முன்னகர்வாக மஞ்சு கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தும் திரைக்கதையின் தேக்கத்தால் மக்களின் கவனத்தைப் பெறமுடியாமல் போனது. புதிய தலைமுறைப் பெண்களிடம், மஞ்சு கதாபாத்திரம் ஏற்படுத்திருக்க வேண்டிய துணிச்சலும் தன்னம்பிக்கையும், ஈர்க்காத திரைக்கதையால் வீணாகிப் போனது.
இதற்கு நேர் எதிராக, கருத்து ரீதியில் மலிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்துவிட்டால் மக்கள் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பதற்கும் பல உதாரணங்கள் இருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம் ‘செக்கச் சிவந்த வானம்’.
குற்றவுலகின் நிழலாக இருக்கும் ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம் முற்றாகக் களைப்பட வேண்டும் என்ற நிலையில், ’செக்கச் சிவந்த வானம்’ அதை ஆராதிக்கிறது. நகரையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு தாதாவின் மூன்று வாரிசுகள், அவரது இடத்தைப் பிடிக்க ஒருவரை ஒருவர் கொன்று விளையாடும் வன்முறை ஆட்டத்தை, படம் முழுவதும் ரத்தம் தெறிக்கவிட்டு, நிழலுலகைக் கொண்டாடியது இந்தப் படம்.
திரைக்கதையின் கால அளவு இந்த இரண்டு படங்களும் சொல்லித்தரும் பாடம் ஒன்றுதான். எவ்வகை உள்ளடக்கத்தை நீங்கள் கையாண்டாலும் திரைக்கதையின் தலைவிதியை நிர்ணயிப்பது அதில் இருந்தே தீரவேண்டிய விறுவிறுப்புதான். அந்த விறுவிறுப்பைக் கொண்டுவர உங்கள் திரைக்கதை சரியான கால அளவில் நகர்வதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.
பிரம்மிக்க வைத்தால் தவிர, இன்றைய பார்வையாளர்கள் மிக நீளமான படங்களை விரும்புவதில்லை. 120 நிமிடங்கள் கால அளவு என்று வைத்துக்கொண்டால் உங்கள் திரைக்கதை 120 பக்கங்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியும். 120 பக்கங்களில் 60 காட்சிகள் இடம்பெற்றிருந்தால் கால அளவில் அது கச்சிதமான திரைக்கதை என்று உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
120 நிமிடங்கள் கால அளவில் 60 காட்சிகள் கொண்ட திரைக்கதையை 120 பக்கங்களில் நீங்கள் எழுதி முடிக்க வேண்டும் என்றால், உங்கள் வேலையை எளிதாக்கிக்கொள்ளும் பொருட்டு திரைக்கதையில் எந்தக் கால அளவில், என்ன ‘ஆக்ஷன்’ நடக்கிறது என்பதை அங்க வாரியாக முதலில் பிரித்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் மாதிரிக் கதை ஒன்றைத் தேர்வுசெய்துகொண்டு, அதன் கதைச்சுருக்கம், அங்க வாரியாக அதைப் பிரிக்க, ஒன்லைன் ஆர்டரில் ஒவ்வொரு காட்சியையும் ஒருவரியில் எழுதிப் பார்ப்பது என்பதில் தொடங்கி, அதன்பின் சில மாதிரிக் காட்சிகளைத் திரைக்கதையாக எழுதப் பழகுவோம்.
தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT