Published : 02 Nov 2018 11:28 AM
Last Updated : 02 Nov 2018 11:28 AM

திரைப்பள்ளி 22: பரியன் எனும் அடையாளம்!

சிறந்த திரைக்கதை எழுத்தாளரை காலத்தின் கண்ணாடி எனலாம். அவர் தனது திரைக்கதையில் தான் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பின் கலாச்சார அடையாளங்களை, அவற்றில் ஏற்படும் மாற்றங்களை, அவற்றால் கதாபாத்திரங்களிடம் உருவாகும் அசைவுகளைத் தன்னையும் அறியாமல் பதிவுசெய்திருப்பார். இலக்கியத்திலிருந்து திரைக்கதைக்கு எடுத்தாளப்படும் கதைக்களங்களில் கலாச்சார அடையாளங்கள் விடுபட்டிருக்காது என்று நம்பலாம். அதுவே கற்பனையாக ஒரு கதைக்கருவைத் தேர்ந்துகொண்டு, அதற்கான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் எழுதினால் அதில் கலாச்சார அடையாளங்கள் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

அதேநேரம் கலாச்சார அடையாளங்களைப் பதிகிறோம் என்ற டாம்பீகமான மனோபாவத்துடன் அந்தக் கலையைக் கையாளும் கலைஞர்கள், குழு அடையாளங்களில் திரைக்கதையைச் சுருக்கிவிடுவதுதன் மூலம், தனது சாதி, மதம் உள்ளிட்ட சுய அடையாளப் பெருமிதத்தின் வெளிப்பாடாக்கித் திரைப்படத்தை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குழு அடையாளத்தைத் தாண்டி பரந்துபட்ட பார்வையுடன் கலாச்சார அடையாளங்களையும் அவற்றின் தாக்கத்தையும் வெளிப்படையாகத் திரைக்கதையில் பதிவது நிலப்பரப்பு சார்ந்த ஒரு திரைக்கதை ஆசிரியரின் முக்கியமான பொறுப்பு.

இப்படிப் பதியும்போது ஒரு பகுதிப் பார்வையாளர்களின் மனது புண்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை உணர்வுடனோ ஒருபகுதிப் பார்வையாளர்களின் மீதான, உள்நோக்கம் கொண்ட வன்மத்துடனோ காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் எழுதுவது ஒருபோதும் படைப்பாளுமை ஆகாது.

‘வடசென்னை’யின் அடையாளம்

ஒருபகுதி பார்வையாளர்களின் மனது புண்படும் என்று வெற்றிமாறன் நினைத்திருந்தால் ‘வடசென்னை’ என்ற படத்தை அவரால் படைத்திருக்க முடியாது. ‘வடசென்னை’ என்ற தலைப்பை அவர் பயன்படுத்தியிருக்கத் தேவையில்லை என்ற வாதத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், ‘வடசென்னை’ முன்வைக்கும் வன்ம வாழ்வியல் நம் மத்தியில் இல்லை என்று கூறிவிட முடியாது. ‘வடசென்னை’ படத்தின் ஆகச்சிறந்த படைப்புச் சிறப்பு, அப்படத்தில் உலவும் கதாபாத்திரங்களின் வட்டாரப் பேச்சுமொழியும் அதில் அவர்கள் பயன்படுத்தும் வசவுச் சொற்களும் எனலாம்.

திரைக்கதையின் களம் எனும் நிலப்பகுதியில் புழங்கும் பேச்சுமொழியை, அப்பகுதியின் முக்கியக் கலாச்சார அடையாளமாகத் திரைக்கதாசிரியர் வெற்றிமாறன் அதில் பயன்படுத்தியதன் மூலம் கதாபாத்திரங்கள் மீதான நம்பகத் தன்மையை உருவாக்கிவிடுகிறார்.

எவையெல்லாம் அடையாளங்கள்

இந்த இடத்தில் எவையெல்லாம் கலாச்சார அடையாளங்கள் என்ற கேள்வி எழலாம். உங்கள் கதை நிகழும் நிலப்பரப்பின் பேச்சுமொழி, அதில் பயன்படுத்தப்படும் பழமொழிகள், சொலவடைகள் தொடங்கி கொச்சை அல்லாத வசவுச் சொற்கள்வரை திரைக்கதையின் உரையாடல் மொழியில் கொண்டுவரலாம்.

கதை நிகழும் நிலப்பகுதியின் அடையாளமாக இருக்கக்கூடிய பெயர்களைக் கதாபாத்திரங்களுக்குச் சூட்டுவது மிக முக்கியமானது. அதேபோல அப்பகுதியின் உணவு, உடை, உறவுமுறை, வழிபாடு, சடங்குகள், விளையாட்டு, தொழில் தொடங்கி கலாச்சார மரபுகளையும் அவற்றில் நிலவும் தற்கால மாற்றங்களையும் தொட்டுக்காட்டி காட்சி அமைக்கலாம்.

அதேபோல் சமூக அடுக்கில் பொருளாதார வாழ்வு, சாதியம், பாகுபாடுகள் தொடங்கி நிலப்பரப்பின் கலாச்சாரப் பன்முகத் தன்மையையும் தனது கதைக்களத்துக்குத் தேவையான அளவு திரைக்கதையாசிரியர் கையாளலாம். அதேபோல் கதை நிகழும் பகுதியில் வாழும் கதாபாத்திரங்கள் தொலைத்துவரும் கலாச்சார அடையாளங்களைப் பதிவதும் திரைக்கதை ஆசிரியரின் முக்கிய பொறுப்பே.

கலாச்சார அடையாளங்களைப் பதிறோம் என்று கூறிக்கொண்டு இல்லாதவற்றைத் திரித்துக் கூறுவதை அடியோடு தவிர்க்க வேண்டும். உதாரணமாக, சமூகத்தில் ஒருபகுதியாக இருக்கும் மக்களிடம் இல்லாத பழக்க வழக்கங்களை அவர்களிடம் நிலவுவதுபோல பொய்யாகச் சித்தரிப்பதும் கிண்டல் அடிப்பதும் தூசிப்பதும் கலாச்சார அடையாளங்களைக் கையாளுதல் அல்ல.

பெருமாளின் பெருமை

சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். தமிழகச் சாதியத்தின் கோரமான முகம் என்பது, மனிதனே சக மனிதனைச் சாதிரீதியாக இழிவுபடுத்தி, அவனை அடக்கிப் புறக்கணித்து, தனக்குக் கீழானவனாக, ஒருபோதும் அவன் சமநிலையை அடைவதை ஏற்றுக்கொள்ள முடியாத தலைக்கேறிய ஆணவத்தின் அடையாளமாக இருக்கிறது.

சமநிலைக்குப் போராடுகிறவர்களை வாய்ப்புக் கிடைத்தால் அழித்தொழிக்கும் ஆணவக்கொலை வெறியாகவும் அது முகம் காட்டுகிறது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகன் பரியனின் வாழ்க்கையில் காணக் கிடைக்கும் சம்பவங்கள், சாதியத்தை வெறுக்கும் எவராலும் ஜீரணிக்க முடியாத தமிழகத்தின் இன்றைய கலாச்சார அடையாளங்களின் முக்கியப் பகுதியே.

சாதியக் கட்டுமானத்தால் தலைதூக்க முடியாமல் நசுக்கப்படும் பல தலைமுறைகளின் வலி நிறைந்த வாழ்க்கையை பரியன் எனும் நாயகனைப் பிரதிநிதியாகக் கொண்டு சித்தரிக்கும் இயக்குநர் மாரிசெல்வராஜ், அதை வெறும் குழு அடையாளமாகச் சுருக்கிவிடவில்லை. ஆதிக்க சாதியின் அடையாளமாக உலவும் கதாபாத்திரங்களையும் அவற்றுக்குரிய முழுமையுடன் படைத்திருக்கிறார்.

பரியன் தன்னை ஆணவக்கொலை செய்ய வருபவர்களை பதிலுக்குத் தாக்கி, அவர்களை வென்று கொன்று இருந்தால் ஒரு சாராசரி வணிக சினிமாவின் கதாநாயகனாக ஆகியிருப்பான். பெரும்பாலான பார்வையாளர்கள் எதிர்பார்த்த முடிவாகவும் அது இருந்திருக்கும்.

ஆனால், பரியனின் நோக்கம் அதுவல்ல; அவன் தன்னை ஒடுக்குகிறவர்களின், சாதியின் பெயரால் தனது உயிரை எடுக்க நினைக்கிறவர்களின் உள்ளத்தில் இருக்கும் ஈரத்தின் ஊற்றுக்கண்ணை திறக்க முயல்கிறான். “நாங்க இவ்வளவு பண்ணியிருக்கோம்ல.. நீ ஏன் என் பொண்ணுக்கிட்ட சொல்லவே இல்லை?” என ஜோவின் அப்பா கேட்கும்போது, “என்னைவிட உங்களைத்தான் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

எனக்கு கிடைச்ச மாதிரி அப்பா, இந்த உலகத்துல யாருக்கும் கிடைச்சிருக்க மாட்டாங்கன்னு அவ சொல்லுவா.. அந்த சொல்” என்கிறான் பரியன். “ நீ ரொம்ப்ப நல்லவன். நல்லா படி தம்பி.. நாளைக்கு எல்லாம் மாறலாம்.. பார்க்கலாம்…” என்று ஜோவின் தந்தை போலியான நம்பிக்கையைத் தரும்போது, பரியனின் பதில் பெரும் விவாதத்தை உருவாக்கி படத்தை முடிக்கிறது.

“நீங்கள் நீங்களா இருக்கிற வரைக்கும், நான் நாயாகத்தான் இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்கிற வரைக்கும் இங்க எதுவுமே மாறப்போறதில்லை”. உண்மைதான்… இறுகிக்கிடக்கும் சாதியம் எனும் கலாச்சார அடையாளத்தை வலிமையுடன் அசைத்துப் பார்த்திருக்கிறது, இந்தப் படத்தின் முடிவு.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x