Published : 22 Nov 2018 06:40 PM
Last Updated : 22 Nov 2018 06:40 PM
‘உயர்ந்த மனிதன்’- ராஜலிங்கம் - 50 ஆண்டுகள்
தமிழ் சினிமாவில் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் நாயக பிம்பங்களை உடைப்பது பெரும் சவால். ஆனால், இதுபோன்ற வணிக நிர்ப்பந்தங்களைப் புறந்தள்ளி சாதித்த நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிக்க வந்த முதலிரண்டு வருடங்களிலேயே பெண் பித்தனாகவும் தேச துரோகியாகவும் வேடம் ஏற்கத் தயங்காதவர்.
எதிர்மறைக், கதாபாத்திரம் ஏற்பவர்கள்கூட, ஒரு கோழையாக ஆபத்து சமயத்தில் தன்னை நம்பியவர்களைக் காப்பாற்ற முடியாத கையாலாகாதவனாக நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அதையும் சவாலாக ஏற்று, ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் மில் ஓனர் ராஜலிங்கத்தை மறக்க முடியாத நாயகனாக நிலை நிறுத்தியது சிவாஜியின் ஒப்பற்ற திறமை.
ராஜலிங்கம் என்ற ராஜு நல்லவன். ஆனால், மேட்டிமை பேசும் நிலச்சுவான்தாரைத் தந்தையாகப் பெற்றவன். தன் வீட்டு வேலைக்காரனின் மகன், தனது மகனுடன் படிப்பதைத் தடுப்பது, தன்னிடம் வேலை செய்பவன் தனக்கு முன்னால் செருப்பு அணிவதைக் கூடப் பொறுக்கமாட்டாமல் அவனை அடிப்பது என்ற ஆணவத் தந்தையை எதிர்க்க முடியாதவன் ராஜு.
ஆனால், இதையெல்லாம் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை இயல்பாக காட்டியிருப்பார். கொடைக்கானலுக்கு டாக்டர் நண்பனுடன் காரில் பயணம் செய்யும்போது தனக்கு கார் ஓட்டும் பால்ய பள்ளிக்கூட நண்பனுக்கு சிகரெட் கொடுத்து விட்டு, “தலைமுறை தலைமுறையாய் இவங்க குடும்பம் எங்களுக்கு அடிமை. பிளடி பூல்ஸ்” எனும்போது அந்த ‘பிளடி’ என்ற ஒற்றை வார்த்தையை உச்சரிக்கும் விதத்திலும் கையாலாகாத கோபத்தைக் காட்ட சிவாஜியைத் தவிர யாரால் முடியும்?
இளமையின் மோகத்தில் காதலாகிக் கசிந்துருகும் ஆதர்ச காதலனாக ராஜுவை சிவாஜி திரையில் உயிரூட்டும்போது, 50 வருடங்களுக்குப் பிறகும் அன்றைய இளைஞர்கள், நடுத்தர வயதுக்கார்கள் அனைவரும் தங்களின் இளமையையும் காதலையும் மீட்டெடுக்கும் ரசவாதம் மனத்தில் நிகழ்வதை உணர்கிறார்கள்.
கர்ப்பிணி மனைவியைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும்போதும், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தந்தையின் தற்கொலை மிரட்டலால் அத்தை மகளை மணக்கச் சம்மதிக்கும்போதும் “எங்க அப்பா விருப்பம்தான் எங்க எல்லாருடைய விருப்பமும்” எனக் கண்ணீரை மறைத்துச் சிரிக்க முயன்று முடியாமல் முகம் திரும்புவாரே அங்கே அனுதாபத்தை அள்ளிக் கொள்வார்.
19 வருட முன்னோக்கிய பயணத்துக்குப்பின் அவரது உடல்மொழியில் ஒரு மென்சோகமும் வெறுமையும் எதிரொலிக்கும். கூடவே இருக்கும் டாக்டர் நண்பன் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தனது கோழைத்தனத்தைக் குத்திக்காட்ட, அதை எதிர்கொள்வதிலும் வித்தியாசம் காட்டியிருப்பார். ஒரு முறை அந்தக் குத்தல் வார்த்தைகள் தந்த வேதனையை முகத்தில் காட்டுவார்.
அடுத்த முறை கோபப்படுவார், மற்றொரு முறை அலட்சியப்படுத்தி விட்டுச் செல்வார், இறுதியாக நண்பன் இறக்கும் தருவாயில் குத்திக் காட்டும்போது கோபமும் சுய கழிவிரக்கமும் ஒன்று சேர “நான் கோழைதான்.. ஆனால், சுயலநலக்காரன் இல்லை” என்று உடைந்து போவார்.
தான் இரண்டு பொய்கள் சொல்லிவிட்டதாகக் குற்றம் சொல்லும் மனைவியிடம், “ராஜலிங்கம் ஓனர் ஆப் 7 மில்ஸ், எ 100 ஸ்டாஃப் அண்ட் 50 தவ்சண்ட் ஏக்கர்ஸ் ஆப் பெர்டைல் லாண்ட்ஸ்” என்று அடுக்கிவிட்டு “ இதெல்லாம் என்ன; இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” என்பார். போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மேல்தட்டு மனிதனை இயல்புக்கு வெகு அருகில் நிறுத்திய அற்புதமான இடம் அது.
மனைவியுடன் ஏற்படும் வாக்குவாதத்தில் மனைவி தன்னைக் காட்டுமிராண்டி என்று குற்றம் சுமத்தும்போது பொறுக்க மாட்டாமல் கன்னத்தில் அறைந்துவிட்டு வெளியேறும் ராஜு திரும்பி வந்து அடித்ததற்கு முகத்திலேயே வருத்தத்தைக் காட்டுவதும், அதைப் புரிந்துகொண்டு மனைவியும் மன்னிப்பை உடல்மொழியில் வெளிப்படுத்துவதும் பின் இருவரும் இணைவதும் மிகையற்ற இயல்பான வாழ்க்கையின் நிஜம்.
படத்தில் ஒரு வசனம் வரும். “மனிதன் பிறக்கிறான், இறக்கிறான். ஆனா அவனுடைய நினைவுகள் மட்டும் நம்முடனேயே தங்கிடுது”. உண்மைதான். அதனால்தான் சிவாஜி என்ற யுகக் கலைஞனின் நினைவுகள் நம்முடனே தங்கிவிட்டன. ‘உயர்ந்த மனிதன்’ ராஜலிங்கம் மட்டுமல்ல; அவர் தனது நடிப்பாளுமையால் படைத்த நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்களின் நினைவுகளும் தலைமுறைகள் தாண்டியும் பயணிக்கும்.
- முரளி சீனிவாஸ், தொடர்புக்கு: t.murali.t@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT